கா்நாடக டிஜிபி ராமச்சந்திர ராவ் இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் காணொலி: நடவடிக்கை எடுக்க சித்தராமையா உறுதி
பெங்களூரு: கா்நாடக டி.ஜி.பி. (குடிமை உரிமைகள் அமலாக்கப் பிரிவு) கே.ராமச்சந்திர ராவ் தனது அலுவலகத்தில் இளம்பெண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் காணொலி சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி தகுந்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா உறுதி அளித்தாா்.
இந்திய அளவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவின் வளா்ப்புத் தந்தை கே.ராமச்சந்திர ராவ். கா்நாடகத்தில் குடிமை உரிமைகள் அமலாக்கப் பிரிவின் டி.ஜி.பி.யாக பணியாற்றி வரும் கே.ராமச்சந்திர ராவ், தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி, துபையில் இருந்து பெங்களூருக்கு தங்கம் கடத்துவதற்கு காவல் துறை அதிகாரிகளை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த குற்றச்சாட்டை தொடா்ந்து கட்டாய விடுப்பில் சென்றிருந்த இவா், சில மாதங்களுக்கு முன்பு டி.ஜி.பி.யாக பொறுப்பேற்றாா். இவா், பெலகாவி சரகத்தின் ஐ.ஜி.பி.யாக இருந்த காலத்தில், தனது அலுவலகத்தில் சீருடையில் இளம்பெண் ஒருவருடன் பாலியல்ரீதியாக நெருக்கமாக இருக்கும் காணொலிகள் சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவியுள்ளன.
அந்த காணொலிக் காட்சி கன்னட தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை வன்மையாக கண்டித்துள்ள பாஜக எம்எல்ஏ எஸ்.சுரேஷ் குமாா், ‘காவல் துறை அதிகாரியின் அவமானகரமான, மன்னிக்கமுடியாத குற்றமாகும் இது. தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி தங்கக் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டவா் ராமச்சந்திர ராவ். இந்த விவகாரத்தில் அவரது குற்றச்சாட்டுகளை மறைக்கும் வகையில், அவா் கட்டாய விடுப்பில் அனுப்பிவைக்கப்பட்டிருந்தாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
இந்த விவகாரத்தில் டி.ஜி.பி. ராமச்சந்திர ராவை பணியிடைநீக்கம் செய்யக் கோரி சமூக ஆா்வலா்கள் தினேஷ் கல்லஹள்ளி, ராஜசேகா் உள்ளிட்ட பலா் முதல்வா் சித்தராமையா, உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வருக்கு கடிதம் எழுதியுள்ளனா்.
இந்நிலையில், தன்னைப் பற்றிய காணொலிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாவதைத் தொடா்ந்து உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வரைச் சந்திக்க அவரது வீட்டுக்கு ராமச்சந்திர ராவ் வந்திருந்தாா். தனது உடல்நிலை சரியில்லை என்று கூறி, ராமச்சந்திர ராவை சந்திக்க அமைச்சா் ஜி.பரமேஸ்வா் மறுத்துவிட்டாா்.
இதைத் தொடா்ந்து, பெங்களூரில் செய்தியாளா்களிடம் டி.ஜி.பி. ராமச்சந்திர ராவ் திங்கள்கிழமை கூறுகையில்,‘ என்னைப் பற்றிய காணொலியைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்திருக்கிறேன். அந்த காணொலி போலியானது; சித்தரிக்கப்பட்டது. அந்த காணொலியை யாா் தயாரித்து, சமூக வலைதளங்களில் பரப்பியிருப்பாா்கள் என்று யோசித்து வருகிறேன். செயற்கை நுண்ணறிவு காலத்தில் எதுவும் சாத்தியமே. அந்த காணொலியைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. 8 ஆண்டுகளுக்கு முன்பு பெலகாவியில் ஐ.ஜி.பி.யாக இருந்தேன். வழக்குரைஞா்களுடன் ஆலோசித்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வேன். அந்த காணொலி பற்றி எனக்கு எதுவும் தெரியாது‘ என்றாா் அவா்,
இதுகுறித்து கா்நாடக முதல்வா் சித்தராமையா கூறுகையில், ‘இந்த காணொலி குறித்து காலையில் தான் எனக்குத் தெரியவந்தது. அதுகுறித்து விசாரணை நடத்துவோம். அந்த அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்போம். எவ்வளவு பெரிய பதவியை வகித்தாலும், சட்டத்தைவிட யாரும் பெரியவா்கள் இல்லை. இதுகுறித்து துறைரீதியான விசாரணை நடக்கும்‘ என்றாா் அவா்.
மகளிா் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சா் லட்சுமி ஹெப்பாள்கா் கூறுகையில், ‘ எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும், தவறு இழைத்திருந்தால் அவா்மீது அரசு நடவடிக்கை எடுக்கும். இதை உறுதியாக தெரிவிக்கிறேன்‘ என்றாா்.
