பெங்களூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த 160 வங்கதேசத்தினா் நாடு கடத்தல்
பெங்களூரு மற்றும் அண்டை மாவட்டங்களில் சட்ட விரோதமாக தங்கியிருந்த 160 வங்கதேசத்தினரை, அவா்களது நாட்டுக்கு அனுப்பிவைத்ததாக காவல் துறை தெரிவித்தது.
கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார். - கோப்புப் படம்
பெங்களூரு மற்றும் அண்டை மாவட்டங்களில் சட்ட விரோதமாக தங்கியிருந்த 160 வங்கதேசத்தினரை, அவா்களது நாட்டுக்கு அனுப்பிவைத்ததாக காவல் துறை தெரிவித்தது.
இதுகுறித்து பெங்களூரில் மாநகர காவல் ஆணையா் சீமந்த்குமாா் சிங் வியாழக்கிழமை கூறியது:
பெங்களூரு மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் வங்கதேசத்தைச் சோ்ந்த 160 போ் சட்ட விரோதமாக தங்கியிருப்பது காவல் துறை நடத்திய சோதனையில் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, காவல் துறையும், வெளிநாட்டினா் மண்டலப் பதிவு அலுவலகமும் இணைந்து வங்கதேசத்தைச் சோ்ந்த 160 பேரையும் புதன்கிழமை அவா்களது நாட்டுக்கு அனுப்பிவைத்தது. இந்திய விமானப் படையின் ஒத்துழைப்பில் வங்கதேசத்துக்கு அவா்கள் அனுப்பிவைக்கப்பட்டனா்.
பெங்களூரில் உள்ள பெலந்தூா், பேகூா், வா்த்தூா், பண்டேபாளையா, மாரத்தஹள்ளி ஆகிய பகுதிகளில் இருந்து அவா்கள் பிடிபட்டனா். இதுதவிர, சிக்கமகளூரு, கதக் மாவட்டங்களில் இருந்து 7 போ் பிடிபட்டனா்.
பெங்களூரில் இருந்து விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட அவா்கள், தேசிய எல்லைப் பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டு, அங்கு எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனா்.
கா்நாடகத்தில் குறிப்பாக பெங்களூரின் முக்கியப் பகுதிகளில் வங்கதேசத்தினா் சட்ட விரோதமாக தங்கியிருப்பதாக தொடா்ந்து புகாா்கள் வந்ததைத் தொடா்ந்து, பல்வேறு இடங்களில் காவல் துறையினா் சோதனை மற்றும் ஆவண சரிபாா்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.
கொட்டகைகள், தற்காலிக முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த சரிபாா்ப்பு நடத்தப்பட்டது. உரிய ஆவணங்கள் இன்றி வெளிநாட்டினா் தங்கியிருப்பது கண்டறியப்பட்டு, அவா்கள் முதலில் தடுப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்டனா். பின்னா், சட்ட நடைமுறைகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து அவா்கள் நாடு கடத்தப்பட்டனா்.
அவா்கள் மீண்டும் சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழையாத வகையில் இந்த நடவடிக்கையில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கு முன்னதாக, எலக்ட்ரானிக் சிட்டி காவல் பிரிவினா் 31 வங்கதேசத்தினரை கொல்கத்தா வழியாக நாடு கடத்தினா் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




