புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

பெங்களூரின் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கையை காங்கிரஸ் மேற்கொள்ளும்: ராகுல் காந்தி

பெங்களூரின் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கையை காங்கிரஸ் மேற்கொள்ளும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

Updated On :9 ஏப்ரல் 2018, 2:23 am

பெங்களூரின் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கையை காங்கிரஸ் மேற்கொள்ளும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
பெங்களூரு அரண்மனை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் ஆசீர்வாதப் பேரணி நிறைவு நிகழ்ச்சியில்,  அவர் பேசியது:-
காங்கிரஸ் தலைவர்களின் தொலைநோக்கு பார்வையால் பெங்களூரில் தகவல்,  உயிரி தொழில்நுட்பம் உள்ள பல்வேறு தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன.  இதற்கு பெங்களூரு மக்களின் பரந்த சிந்தனையும், உழைப்பும்,  உறுதுணையாக இருந்தது.
உலகுக்கே மாதிரி மாநகரமாக பெங்களூரு திகழ்கிறது.  அமெரிக்காவுடன் போட்டிபோடும் மாநகரமாக பெங்களூரு விளங்குவதாக அமெரிக்கா நாட்டின் அதிபரே ஒப்பு கொண்டுள்ளார். 
அனைத்து மதம், மொழியினரைக் கொண்டுள்ள பெங்களூரில் சர்வதேச அளவில் வாழும் மக்கள் குடியேறுவதற்கு விரும்புகின்றனர்.  நாட்டின் வளர்ச்சியில் அதிக அளவில் பங்களிப்பை பெங்களூரு வழங்கி வருகிறது. 
பெங்களூரில் தொழில்முதலீடு ரூ.3.5 லட்சம் கோடியாக உள்ளது. பெங்களூரு மட்டுமின்றி, கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் பெங்களூரு உள்ளிட்ட கர்நாடகத்தின் வளர்ச்சியில் மத்தியில் ஆளும் பாஜக அரசு மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்டுள்ளது. 
பெங்களூருக்கு வந்த விமான ஒப்பந்தம் கைமாறியது: ரஃபேல் ராணுவ விமானம் வாங்குவதற்கான ஒப்பந்தமானது காங்கிரஸ் ஆட்சியில் எச்.ஏ.எல். நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் பிரதமர் மோடியோ பிரான்ஸ் நாட்டுக்குச் சென்று ரூ. 750 கோடியாக இருந்த விமானத்தின் விலையை ரூ. 1500 கோடிக்கு உயர்த்தினார். இதோடு  அதன் ஒப்பந்தத்தை தனது நண்பருக்கு கொடுத்துவிட்டார். இதனால் பெங்களூரு மாநகரில் இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்பு வேறு எங்கோ சென்றுவிட்டது.
வறட்சிக்கு குறைந்த நிதியே கர்நாடகத்துக்கு ஒதுக்கீடு:   பெங்களூரு புறநகர் திட்டத்துக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு குறைத்தது. இதோடு வறட்சிக்கான நிதியை மகாராஷ்டிரத்துக்கு ரூ. 8 ஆயிரம் கோடியும், குஜராத்துக்கு ரூ. 3500 கோடியும் வழங்கிய மத்திய அரசு, வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கர்நாடகத்துக்கு ரூ. ஆயிரம் கோடியை மட்டுமே வழங்கியுள்ளது. 
பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏன்?
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளபோதும், தேசிய அளவில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தி வருகிறது. பெட்ரோல் விலை 4 ஆண்டுகளில் 210 சதவீதமும், டீசல் விலை 430 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளன. 
பிரதமர் மோடியின் ஆட்சியில் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலதிபர்களின் கடனை தள்ளுபடி செய்யும் அவர், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யாமல் வேடிக்கை பார்க்கிறார். 
எதிர்க்கட்சியினரை நாய், பூனை உள்ளிட்ட கால்நடைகளுக்கு ஒப்பிட்டு பேசி பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா கேவலப்படுத்தி வருகிறார். காங்கிரஸ் கட்சியில் எந்த தலைவரும் இதுபோன்று மோசமாக எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்ததில்லை. 
கர்நாடகத்தில் பசியோடு யாரும் இருக்கக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் அன்னபாக்யா திட்டம், இந்திரா உணவகம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வரும் காங்கிரஸ் கட்சிக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார் அவர். 
நிகழ்ச்சியில் முதல்வர் சித்தராமையா,  காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜி.பரமேஸ்வர், செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
தொண்டர்கள் காயம்: முன்னதாக மாநாட்டின் மேடை அருகே அமைக்கப்பட்டிருந்த  கட்அவுட்டுகள் சரிந்து விழுந்ததில், காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் காயமடைந்தனர்.  இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு, கூட்டம் தொடங்குவதற்கு தாமதம் ஏற்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.