கர்நாடகத்தில் மஜத- காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆட்சியைத் தக்க வைத்துகொள்ளும் நோக்கில், முதல்வராக பதவியேற்றுள்ள 75 நாள்களில் தென் இந்தியாவின் 25 கோயில்களுக்கு தனது மனைவி அனிதாவுடன் குமாரசாமி சென்றுள்ளார். ஆனால் வட கர்நாடகத்தின் ஒரு கோயிலுக்கும் குமாரசாமி செல்லாதது, அந்தப் பகுதி மக்களுக்கு அதிருப்தியை தந்துள்ளது.
கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுக்கு பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களுக்கு பிறகு, மஜத மாநிலத்தலைவராக இருந்த எச்.டி.குமாரசாமியை முதல்வராகப் பதவியேற்க ஆளுநர் வஜுபாய் வாலா மே 19-ஆம் தேதி அழைப்பு விடுத்தது முதல் கோயில்களுக்குசெல்வதை வழக்கமாக்கி கொண்டிருக்கிறார்.
மும்மத ஆலயங்களிலும்
வழிபாடு: இதையடுத்து, மே 23-ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்ற பிறகு, கடந்த 75 நாள்களில் தென் கர்நாடகத்தின் 8 மாவட்டங்கள் உள்ளிட்ட தென் இந்தியாவின் 25 கோயில்களுக்கு தனது மனைவி அனிதாவுடன் முதல்வர் குமாரசாமி சென்றுள்ளார். மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை தக்கவைப்பதற்காக கோயில்களுக்கு செல்வதாக கூறப்படுகிறது.
தென் கர்நாடகத்தின் மைசூரு, ராமநகரம், மண்டியா, குடகு, பெங்களூரு,சிக்மகளூரு மாவட்டங்கள் தவிர, தமிழகம், ஆந்திரத்தில் உள்ள பிரபல கோயில்கள் தவிர, மசூதிகள், தேவாலயங்களுக்கும் குமாரசாமி சென்று சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார்.
தரிசனத்துக்காகவே அலுவல் பயணம்!
தும்கூருவில் உள்ள சித்தகங்கா மடம், மைசூருவில் உள்ள சுத்தூர் மடம், பெங்களூருவில் உள்ள ஆதிசுன்சுனகிரி மடங்களுக்கும் குமாரசாமி சென்றுள்ளார். கர்நாடகத்தின் 30 மாவட்டங்களில் தென்கர்நாடகத்தின் ஒருசில மாவட்டங்களுக்கு மட்டும்சென்றுள்ளது அலுவல்ரீதியான சுற்றுப்பயணம் அல்ல, அது முழுமுழுக்க கோயில்களுக்குச் செல்வதற்கான சொந்தப்பயணம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
கோயில்களுக்குச் செல்வதற்காகவே அந்த மாவட்டங்களுக்கு முதல்வர் குமாரசாமி சென்றதாகத் தெரிகிறது.
சிருங்கேரியில் உள்ள சாரதாம்பா கோயிலுக்குச் செல்ல சிக்மகளூரு மாவட்டத்துக்கும், தர்மஸ்தலா மஞ்சுநாத் கோயிலுக்குச் செல்ல தென்கன்னட மாவட்டத்துக்கும், நெலமங்களாவின் கால பைரேஸ்வரா கோயிலுக்குச் செல்ல மண்டியா மாவட்டத்துக்கும், பல்வேறு கோயில்களுக்குச் செல்ல ஹாசன் மாவட்டத்துக்கும் குமாரசாமி சென்றுள்ளார்.
நேர்த்திக் கடன் செலுத்தவே தரிசனம்?
சட்டப் பேரவைத் தேர்தலில் வென்றால் செய்வதாக மனதில் வேண்டி நேர்த்திக்கடனை நிறைவேற்றவே கோயில்களுக்கு முதல்வர் குமாரசாமி சென்றுவருவதாக மஜத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், வடகர்நாடகத்தில் உள்ள ஒருகோயிலுக்கும் முதல்வர் குமாரசாமி செல்லாதது ஏன்? என்று கேள்வி எழுப்பப்படுகிறது.
வட கர்நாடக பகுதி கோயில்களுக்குச் செல்லாததால் சர்ச்சை:
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபிறகு வடகர்நாடகத்தைத் தனி மாநிலமாக அறிவிக்கக் கோரி, கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையிலும் குமாரசாமி அந்தப் பகுதிக்கு செல்லாதது அம்மக்களை அதிருப்திஅடைய செய்துள்ளது. வடகர்நாடகத்தை குமாரசாமி அலட்சியம் செய்வதற்கு இதைவிட நல்ல உதாரணத்தை கூறமுடியுமா? என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
குமாரசாமி சென்ற கோயில்கள்
முதல்வர் குமாரசாமி தரிசித்த சில கோயில்கள் பின்வருமாறு:-
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் (ஆந்திரம்), திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமிகோயில் தமிழகம்), மதுரை மீனாட்சிகோயில் (தமிழகம்), சிருங்கேரி சாரதாம்பா கோயில் (சிக்மகளூரு மாவட்டம்), நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரா கோயில் (மைசூரு), மைசூரு சாமுண்டீஸ்வரி கோயில், தர்மஸ்தலா(தென்கன்னடம்),, லட்சுமி நரசிம்ம கோயில், ஹொளேநரசிபுரா(ஹாசன்), கால பைரேஸ்வராகோயில், நெலமங்கலா(மண்டியா), தலைக்காவிரி கோயில் (மடிக்கேரி), சாமுண்டீஸ்வரி கோயில்(ராமநகரம்).
பாஜகவின் விமர்சனமும், மஜதவின் விளக்கமும்...!
இதுகுறித்து பாஜக மூத்தத் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஜெகதீஷ் ஷெட்டர் கூறியதாவது:-
முதல்வர் குமாரசாமியின் செயல்பாடுகளை வட கர்நாடக மக்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள். மஜதவுக்கு வாக்களிக்கவில்லை என்ற சில்லரை காரணத்தைகூறி, வடகர்நாடக மக்களுக்கு பட்ஜெட்டில் எந்தத் திட்டத்தையும் அறிவிக்கவில்லை.
வட கர்நாடகத்துக்கு முதல்வர் குமாரசாமி வந்துவிட்டால் ஓரிருநாள்களில் மக்களின் வாழ்க்கை மாறிவிடும் என்று கூறவில்லை. தென்கர்நாடகம் மற்றும் தமிழகம், ஆந்திரமாநிலங்களில் உள்ளகோயில்களுக்கு செல்ல நேரம் இருக்கும்போது வட கர்நாடகத்துக்கு முதல்வர் குமாரசாமி ஏன் வரவில்லை" என்றார்.
இதுகுறித்து மஜத எம்எல்சி டி.ஏ.சரவணா கூறியது:-
கர்நாடகம் இதுவரை 25 முதல்வர்களை சந்தித்துள்ளது. இதில் 6 பேர் வட கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள். வடகர்நாடகத்தின் வளர்ச்சிக்கு அந்த முதல்வர்களின் பங்களிப்பு என்ன? ஆனால் பெலகாவியில் சுவர்ண விதான செளதா அமைக்க அடிக்கல் நாட்டியவர் குமாரசாமி. முதல்வராக பதவியேற்று 2 மாதங்கள்தான் ஆகியுள்ளது. பட்ஜெட், பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரங்களில் அவர் கவனம் செலுத்தியிருந்தார். தற்போது மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசித்துவருகிறார். அதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவது முக்கியமாகும்.
ஆஷாடா(கன்னடர்களின் ஆடி மாதம்)மாதம் முடிந்த பின்னர், வட கர்நாடகத்துக்கு முதல்வர் குமாரசாமி பயணம் செல்வார். உடல்நிலை சரியில்லாவிட்டாலும் தினமும் 18 மணி நேரம் உழைக்கிறார் குமாரசாமி. எனவே, எதிர்க்கட்சிகள் இதை பெரிதாக்கக்கூடாது." என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

