பிரதமர் நரேந்திர மோடி விதித்துள்ள காலக்கெடுப்படி, 2022-ஆம் ஆண்டுக்குள் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் நிறைவேற்றப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின்(இஸ்ரோ) தலைவர் கே.சிவன் தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரு இஸ்ரோ தலைமையகத்தில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
இந்தியா 2022-ஆம் ஆண்டுக்குள் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் என்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் அறிவித்திருக்கிறார். பிரதமர் மோடியின் அறிவிப்பு எங்களுக்கு மகிழ்ச்சி தரும் ஆச்சரியமாக இருந்தது. பிரதமர் மோடி விதித்துள்ள காலக்கெடுப்படி 2022-ஆம் ஆண்டுக்குள் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் நிறைவேற்றப்படும்.
முதல்கட்டமாக ஆளில்லா விண்கலத்தை அடுத்த 2 ஆண்டுகளில் விண்ணுக்கு அனுப்புவோம். இது மனிதனைச் சுமந்து செல்லும் விண்கலத்தைப் போன்றதாக இருக்கும். அடுத்தகட்டமாக, 2022-ஆம் ஆண்டில் மனிதனை விண்ணுக்கு அனுப்பி வைப்போம். மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்துக்கான விண்கலத்தைத் தயாரிக்கும் பணியில் ஏற்கெனவே ஈடுபட்டுள்ளோம்.
இதற்காக ஜிஎஸ்எல்வி-மார்க்-3 ராக்கெட் பயன்படுத்தப்படும். மனிதனை விண்ணுக்கும் செலுத்தும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்குள் ஜிஎஸ்எல்வி-மார்க்-3 ராக்கெட் மூலம் 10-15 விண்கலங்களை விண்ணுக்குச் செலுத்தியிருப்போம். மனிதனை விண்ணுக்கு செலுத்தும் திட்டத்துக்குத் தேவையான தொழில்நுட்பத்தை ஏற்கெனவே மேம்படுத்தியுள்ளோம். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ஆரம்பகட்டத்தில் ரூ.10 ஆயிரம் கோடிதேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டது.
செயற்கை சுற்றுச்சூழல் கட்டமைப்புகள் மற்றும் சுவாசிப்பதற்கான கருவிகளை ஏற்கெனவே தயாரித்துள்ளோம். மேலும், விண்ணுக்கு அனுப்பப்படும் விண்வெளி வீரர்கள் அணியும் ஆடையையும் வடிவமைத்து தயார் நிலையில் வைத்துள்ளோம்.
ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட்டை மனிதன் பயணிப்பதற்கு தகுந்தவகையில் மாற்றியமைக்க வேண்டும். புவி ஈர்ப்பு சக்தியால் விண்வெளி வீரர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கவும் வழிவகை செய்துளோம். இதுதொடர்பான அறிக்கை அடுத்த 2 மாதங்களில் தயாராகிவிடும். மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டம்தான் இஸ்ரோவின் மிகப்பெரிய திட்டமாக அமையும். இந்தத் திட்டத்தை வேகமாகச் செயல்படுத்த ஆர்வமாக உள்ளேன்.
விண்கலங்களைத் தயாரிக்கும் பணியை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிட்டு, ராக்கெட் மூலம் விண்கலங்களை விண்ணில் செலுத்தும் பணியில் மட்டும் இஸ்ரோ ஈடுபடவிருக்கிறது. பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி-மார்க்-3 ராக்கெட்டுகளைப் பயன்படுத்தி 50 விண்கலங்களை விண்ணுக்கு அனுப்பவிருக்கிறோம். இதில் பெரும்பாலானவை ஏற்கெனவே விடப்பட்ட விண்கலங்களின் தொடர்ச்சியாகும்.
அனைத்து செயற்கைக்கோள் திட்டங்களையும் நமது தொழில்நுட்பத்திலேயே செயல்படுத்துவோம். இது தரமானது மட்டுமல்ல, விலை மலிவானதாகும். மின் வாகனத் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக லித்தியம்-ஐயான் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியுள்ள இஸ்ரோ, அதை தனியார் நிறுவனங்களுக்கு அளித்துள்ளது.
இதேபோல, இஸ்ரோ தயாரித்துவரும் விண்கலங்கள், தொழில்நுட்பங்கள் இந்தியாவின் உள்நாட்டு வளர்ச்சியை 7 மடங்காக உயர்த்தும். எதிர்காலத்தில் விண்வெளி சுற்றுலா, கிரகம் விட்டு கிரகம் பாயும் பயணங்கள் 20 மணிக்குப் பதிலாக 15 நிமிடங்களில் சாத்தியமாகும் என்றார்.