மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

லிங்காயத்து தனி மதமாக அங்கீகரித்தால் ஹிந்து மதம் பிளவுபடாது:அமைச்சர் எம்.பி.பாட்டீல்

லிங்காயத்து சமுதாயத்தை தனி மதமாக அங்கீகரிப்பதன் மூலம் ஹிந்து மதம் பிளவுபடாது என்று நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார்.

Updated On :29 மார்ச் 2018, 1:16 am

லிங்காயத்து சமுதாயத்தை தனி மதமாக அங்கீகரிப்பதன் மூலம் ஹிந்து மதம் பிளவுபடாது என்று நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார்.
தும்கூரில் புதன்கிழமை சித்தகங்கா பீடத்தின் மடாதிபதி சிவக்குமார சுவாமிகளைச் சந்தித்து ஆசி பெற்ற பிறகு, செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 
சித்தகங்கா பீடத்துக்கு வந்து சென்ற பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு ஹிந்து மதத்தை உடைப்பதாக தெரிவித்துள்ளார். லிங்காயத்து சமுதாயத்தை தனி மதமாக, மதசிறுபான்மையாக அங்கீகரித்தால் ஹிந்து மதம் உடையாது. 
அமித்ஷா, சமண மதத்தைச் சேர்ந்தவர். ஒருகாலத்தில் பெளத்தம், சமணம், சீக்கியம் ஆகிய மதங்கள் ஹிந்து மதத்தின் அங்கங்களாக கருதப்பட்டன. பின்னர், அவை சிறுபான்மை மதமாகக் கருதப்பட்டு, அதற்கான அங்கீகாரம் அளிக்கப்பட்டது.  அதனால் ஹிந்து மதம் உடைந்துவிட்டதா? அமித்ஷா சார்ந்திருக்கும் சமணம் தனியாக பிரிந்து சிறுபான்மை மதமாக அங்கீகாரம் பெற்ற போது, ஹிந்து மதம் உடையவில்லையா? லிங்காயத்து சமுதாயத்தை தனி மதமாக கருதினால், ஹிந்து மதத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.  இதை புரிந்துகொண்டு, லிங்காயத்து தனி மதக் கோரிக்கைக்கு தெரிவிக்கும் எதிர்ப்பை அமித்ஷா கைவிடவேண்டும். முதல்வர் சித்தராமையா, ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர். அவர் ஹாலுமதா (குருபர்) இனத்தை சார்ந்தவர். 
அவரை ஹிந்து அல்லாதவர் என்று அமித்ஷா கூறுவது சரியில்லை.சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலனுக்காக உழைத்துள்ள தகுதியானவர்களுக்கு மக்கள் வாக்களிப்பார்கள்.
மாநிலத்தின் நிலம், நீர் போன்ற உரிமைகளைக் காக்க அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு போராடுகின்றன. இதில் அரசியல் நடத்துவது சரியல்ல. சிவக்குமார சுவாமிகளைச் சந்தித்து அருளாசி பெற்றதில் எவ்வித அரசியல் முக்கியத்துவமும் இல்லை. 
லிங்காயத்து சமுதாயத்தை சிறுபான்மை மதமாக அங்கீகரிக்க மத்திய அரசுக்கு மாநில அரசு முன்மொழிவை அனுப்பியுள்ளது. இதை சித்தகங்கா பீடத்தின் இளைய மடாதிபதி வரவேற்றுள்ளார் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.