தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிக்கும்போது கவனத்துடன் இருக்க வேண்டும் என்று கர்நாடக மாநில தீயணைப்பு மற்றும் அவசர சேவைத் துறை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக மாநில தீயணைப்பு மற்றும் அவசர சேவைத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
கர்நாடகத்தில் நவ. 6-ஆம் தேதி நரகாசதுர்தசி பண்டிகையும், நவ.8-ஆம் தேதி பலிபாட்யமி மற்றும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளி அன்று பட்டாசுகளை வெடிக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
குறிப்பாக, குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்கும்போது மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது அவசியம்.
பெரியவர்களின் துணையின்றி பட்டாசுகளை வெடிக்க குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது. வெட்டவெளியில் பட்டாசு கொளுத்துவது பாதுகாப்பானது.
மத்தாப்புகளை கொளுத்தும்போது உடம்பிலிருந்து தூரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். பட்டாசுகளை சட்டை அல்லது கால்சட்டை பையில் வைக்கக் கூடாது. பற்றவைத்த பட்டாசுகள் வெடிக்காவிட்டால் அதன் அருகில் சென்று சோதிக்கக் கூடாது. வீண் பெருமைக்காக பட்டாசுகளை கவனக் குறைவாக வெடிக்க வைக்கக் கூடாது. பட்டாசுவெடிக்கும்போது அருகில் தண்ணீரை வைத்துக்கொண்டு, எதேச்சையாக காயம் ஏற்பட்டால் அதன்மீது தண்ணீரை ஊற்ற வேண்டும். சிசுக்கள், முதியோர், நோயாளிகளை கவனத்தில்கொண்டு மருத்துவமனை, முதியோர் இல்லங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் அதிகம் ஒலியெழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








