மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள்: 2-ஆவது நாளாக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை

கர்நாடகத்தில் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து விவாதிப்பதற்காக காங்கிரஸ் நிர்வாகிகள் 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினர்.

Updated On :3 செப்டம்பர் 2018, 3:54 am

கர்நாடகத்தில் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து விவாதிப்பதற்காக காங்கிரஸ் நிர்வாகிகள் 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினர்.
மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்கவிருக்கிறது. கர்நாடகத்தில் மொத்தம் 28 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. 2014-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக 17, காங்கிரஸ் 9,  மஜத 2 தொகுதிகளில் வென்றிருந்தன.  இந் நிலையில், அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலில் 25 இடங்களைக் கைப்பற்றப்போவதாக பாஜக அறிவித்துள்ள நிலையில்,  பாஜகவின் வளர்ச்சியைத் தடுப்பதோடு, காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்பைப் பெருக்கிக் கொள்ளும் நோக்கில் பெங்களூரில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை கர்நாடக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.  
      காங்கிரஸ் மாநிலத் தலைவர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், முன்னாள் முதல்வர் சித்தராமையா,  காங்கிரஸ் மாநில செயல் தலைவர் ஈஸ்வர் கண்ட்ரே,  துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர், அமைச்சர் டி.கே.சிவக்குமார், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் மாணிக் தாகூர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
    2-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை ஹுப்பள்ளி, சித்ரதுர்கா உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்களவைத் தொகுதிகளின் நிலவரம்,  காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான, பாதகமான அம்சங்கள், வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்கள் போன்றவை குறித்து அலசப்பட்டது.  கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைக்காதபட்சத்தில், போட்டி வேட்பாளர்களாகப் பலரும் களமிறங்குவதால்தான் காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட்டு வந்துள்ளது.  இந்த நிலையைத் தடுக்கும்பொருட்டு, கட்சியின் அனைத்துத் தரப்பினரின் ஒப்புதலையும் பெற்று வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டு, அதற்காக ஆலோசனை நடத்தப்பட்டது. 
சித்ரதுர்கா தொகுதியில் இருந்து போட்டியிடுவதற்கு நாயக் சமுதாயத்தைச் சேர்ந்த தனக்கு வாய்ப்பளிக்கக் கேட்டு லம்பானி சமுதாயப் பெண்களை அழைத்துவந்த முன்னாள் எம்எல்ஏ சிவமூர்த்தி,  கே.சி.வேணுகோபாலிடம் மனு அளித்தார்.  சித்ரதுர்கா தொகுதியில் இருந்து லிங்காயத்து சமுதாயத்துக்குப் பதிலாக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு போட்டியிட வாய்ப்பளிக்கக் கேட்டுக் கொண்டனர். அதேபோல, ஹுப்பள்ளி தொகுதியில் முன்னாள் அமைச்சர் வினய் குல்கர்னிக்கு வாய்ப்புத் தருமாறு பலரும் கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர்.  வெற்றி வாய்ப்பை ஆதாரமாக வைத்தே தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளதால்,  அதற்கான வாய்ப்புள்ள நபர்களைத் தேடும் பணியில் கட்சியின் முன்னணித் தலைவர்கள் ஈடுபட்டனர். 
 மாவட்ட வாரியாக, தொகுதி வாரியாக கட்சியின் முன்னணித் தலைவர்கள்,  நிர்வாகிகள், தொண்டர்களிடம் திரட்டப்பட்டுள்ள தகவல்களை அறிக்கையாகத் தயாரித்து,  அதை கட்சியின் மேலிடத்தில் அளிக்க கே.சி.வேணுகோபால் முடிவு செய்துள்ளார்.  வெற்றிவாய்ப்பின் அடிப்படையில் வேட்பாளர்களின் பெயர்களை கட்சி மேலிடம் தீர்மானிக்க உள்ளதாக துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.  யாருக்கு வாய்ப்புக் கிடைத்தாலும்,  அவர்களை வெற்றி பெறச் செய்வது அனைவரின் கடமையாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.