குழம்பிய அரசியல் குட்டையில் அதிகார விளையாட்டு!

குழம்பியுள்ள அரசியல் குட்டையில் அதிகாரத்தை கைப்பற்ற பாஜக, மஜத, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே திரைமறைவு அரசியல் விளையாட்டுகள் தொடர்ந்துள்ளன.
Updated on
2 min read

குழம்பியுள்ள அரசியல் குட்டையில் அதிகாரத்தை கைப்பற்ற பாஜக, மஜத, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே திரைமறைவு அரசியல் விளையாட்டுகள் தொடர்ந்துள்ளன.
கர்நாடகத்தில் கடந்த 8 மாதங்களாக ஆட்சி புரிந்து வரும் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஒவ்வொரு நாளும் ஆட்சிக் கவிழ்ப்பு பதற்றம் தொற்றிக் கொள்கிறது. 224 பேர் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க 113 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 104 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த
போதும், 113 எம்எல்ஏக்களின் ஆதரவை திரட்ட முடியாததால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பாஜகவுக்கு கிடைக்காமல் போய்விட்டது. 
இதனிடையே, 80 இடங்களில் வென்றுள்ள காங்கிரஸ், 37 இடங்களை வைத்துள்ள மஜதவுக்கு ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தது. இதன்காரணமாக, முதல்வர் குமாரசாமி தலைமையில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்தது. இதை பாஜகவால் குறிப்பாக அக்கட்சியின் மாநிலத் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பாவால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
104 எம்எல்ஏக்களைக் கொண்டுள்ள தன்னால் முதல்வராக முடியாத நிலையில், 37 எம்எல்ஏக்களை வைத்திருக்கும் குமாரசாமி முதல்வராக நீடிப்பதை தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாகவும் எடியூரப்பாவால் ஏற்க முடியவில்லை.
எனவே, மஜத, காங்கிரஸ் கட்சிகளில் இருந்து எம்எல்ஏக்களை பிரித்து தங்கள் கட்சியில் இணையவைத்து, ஆட்சியைக் கவிழ்க்க பாஜக தீவிரமுயற்சி மேற்கொண்டது. கடந்த 8 மாதங்களில் 3 முறை மேற்கொண்ட ஆட்சிக்கவிழ்ப்புமுயற்சி பாஜகவுக்கு கைக்கொடுக்கவில்லை. இதனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற ஏக்கம் பாஜகவினரிடையே காணப்படுகிறது.
ஆட்சிக் கவிழ்ப்பு ஏன்?
அண்மையில் நகர்ப்புறங்களுக்கு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைக்காமல் நின்றபோதும், காங்கிரஸ் அதிக இடங்களில் வென்றிருந்தது. பெரும்பான்மை கிடைக்காத இடங்களில் மஜதவுடன் கூட்டணி அமைத்து நகராட்சிகள், பேரூராட்சிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. இதுதவிர, அண்மையில் நடந்த 3 மக்களவை, 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஒரு இடத்தை தவிர, எஞ்சியுள்ள 4 இடங்களை மஜத-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் கைப்பற்றினர். இது பாஜகவுக்கு அரசியல்ரீதியாக பின்னடைவை ஏற்படுத்தியது. 
கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளில் 22 இடங்களைக் கைப்பற்ற திட்டமிட்டுள்ள பாஜக, மஜத-காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் இத்தனை இடங்களை வெல்ல முடியுமா? என்ற சந்தேகத்திற்கு உள்ளாகியுள்ளது. எனவே, ஆட்சிக் கவிழ்ப்பு வேலைகளில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது.
ஆட்சிக் கவிழுமா?
முதல்வர் குமாரசாமியை பட்ஜெட் தாக்கல் செய்யவிடாமல் தடுத்து, அதன் விளைவாக உருவாகும் அசாதாரண சூழ்நிலையைப் பயன்படுத்தி, மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு கெட்டுவிட்டதாக ஆளுநருக்கு புகார் அளித்து, சட்டப்பேரவையை தற்காலிகமாக முடக்கிவைப்பது பாஜகவின் முதல்திட்டம். அதையும் மீறி முதல்வர் குமாரசாமி பட்ஜெட் தாக்கல் செய்துவிட்டால், பட்ஜெட் மீதான விவாதத்தை நடத்தவிடாமல் தடுத்து, அவையை முடக்கி, நிதி மசோதாவை நிறைவேற்றவிடாத சூழ்நிலையை உருவாக்கி கூட்டணி அரசை கலைக்க வழிவகுத்து, குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு வழிகோலுவது பாஜகவின் மற்றொரு திட்டமாகும். 
இதனிடையே, காங்கிரஸ் கட்சியை உதறிவிட்டு வெளியே வந்தால் குமாரசாமி முதல்வராக தலைமையேற்று ஆட்சி நடத்த மஜதவுக்கு ஆதரவளிப்பது பாஜகவின் அடுத்த திட்டமாகும்.
காங்கிரஸின் நிலை
காங்கிரஸ் தனது எம்எல்ஏக்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிவுசெய்துள்ள அக்கட்சியின் முன்னாள் முதல்வர் சித்தராமையா, பெங்களூரு,விதான செளதாவில் வெள்ளிக்கிழமை காலை 10மணிக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டத்துக்கு அழைப்புவிடுத்துள்ளார். 
சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கண்டிப்பாக கலந்து கொள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு உத்தரவிட்டுள்ள சித்தராமையா, வராதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். மேலும் பிப்.12-ஆம் தேதி காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களுக்கு விருந்துக்கும் குமாரசாமி ஏற்பாடு செய்துள்ளார். 
ரமேஷ் ஜார்கிஹோளி போன்ற அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களை சமாதானப்படுத்தும் முயற்சியும் நடந்துவருகிறது. வேறு எந்த எம்எல்ஏவும் பாஜக பக்கம் சென்றுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் காங்கிரஸ், மக்களவைத் தேர்தல் வரையாவது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள கடைசிக்கட்ட முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதனிடையே வெள்ளிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது ஆட்சியின் அஸ்திவாரம் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com