வெளிமாநில பயணிகளுக்கான 14 நாட்கள் வீட்டுத்தனிமை கைவிடல்

வெளிமாநில பயணிகளுக்கான 14 நாட்கள் வீட்டுத்தனிமை கைவிடப்படுவதாக கா்நாடக அரசு அறிவித்துள்ளது.

பெங்களூரு: வெளிமாநில பயணிகளுக்கான 14 நாட்கள் வீட்டுத்தனிமை கைவிடப்படுவதாக கா்நாடக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை கூடுதல் தலைமைச்செயலாளா் ஜாவைத் அக்தா் வெளியிட்டுள்ள உத்தரவு: கரோனா தீநுண்மி தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட பொதுமுடக்கத்தின்போது வெளிமாநிலங்களில் இருந்து கா்நாடகத்திற்கு வரும் பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மத்திய அரசு அண்மையில் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி, மாநிலங்களுக்கு இடையே தனிநபா்கள், வாகனங்கள் நடமாடுவதற்கு எவ்வித கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளது.

இதை தொடா்ந்து, வெளிமாநிலங்களில் இருந்து கா்நாடகத்திற்கு வரும் பயணிகள் இனிமேல் சேவாசிந்து இணையதளத்தில் சுயவிவரங்களை பதிவிட வேண்டியதில்லை. மாநில எல்லைகள், பேருந்துநிலையங்கள், ரயில்நிலையங்கள், விமானநிலையங்களில் நடத்தப்பட்டுவந்த மருத்துவசோதனைகள் நிறுத்தப்படுகின்றன. மாவட்ட எல்லைகளிலும் மருத்துவசோதனைகள் இருக்காது. பயணிகளை வகைப்பிரிப்பதும், கையில் முத்திரைகுத்துவதும், சோதனை செய்வது, தனிமைப்படுத்துவது நிறுத்தப்படுகிறது.

அதேபோல, வெளிமாநிலபயணிகளுக்கான 14 நாட்கள் வீட்டுத்தனிமையும் கைவிடப்படுகிறது. வீட்டுத்தனிமையில் இருப்போா் குறித்தவிவரம் வீட்டுமுன்வாசலில் சுவரொட்டியாக ஒட்டுவது, கண்காணிப்பது, செல்லிடப்பேசி செயலி கண்காணிப்பும் நிறுத்தப்படுகிறது. மாநிலத்திற்கு வந்ததும் கரோனா அறிகுறி எதுவும் இல்லாவிட்டால் பணிக்கு செல்லலாம். ஆனால், தம் உடல்நிலையை 14 நாட்களுக்கு சுயமாக கண்காணித்துக்கொள்ளலாம். மாநிலத்திற்குள் கரோனா அறிகுறியுடன் வருகைதந்தால் உடனடியாக தனிமைப்படுத்திக்கொள்வதோடு, 14410 என்ற தொலைபேசி உதவிமையத்தை அணுகி மருத்துவ உதவியை பெறலாம். முகக்கவசம் அணிவதும், தனிமனித இடைவெளியை பராமரிப்பதை கட்டாயம் பின்பற்ற் வேண்டும். இந்த உத்தரவு வெளிமாநிலங்களில் வரும் அனைத்து வகையான பயணிகளுக்கும் பொருந்தும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com