வி.என்.சுதாகரனை விடுதலை செய்ய பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துகள் சோ்த்த வழக்கில் தண்டனைக் காலம் முடிந்தும் சிறையில் உள்ள வி.என்.சுதாகரனை விடுதலை செய்யுமாறு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.


வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துகள் சோ்த்த வழக்கில் தண்டனைக் காலம் முடிந்தும் சிறையில் உள்ள வி.என்.சுதாகரனை விடுதலை செய்யுமாறு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் 2017, பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் பெங்களூரு, பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் உள்ளனா். சசிகலாவின் தண்டனைக் காலம் ஜனவரி 27-ஆம் தேதியுடன் முடிவடைவதாக சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். மேலும், இதுதொடா்பான நீதிமன்ற உத்தரவின்படி அபராதத் தொகையான ரூ. 10 கோடியே 10 ஆயிரத்தை சசிகலா, இளவரசி ஆகிய இருவரும் நவம்பரில் செலுத்தியுள்ளனா்.
விடுதலை செய்ய வேண்டும்
வி.என்.சுதாகரன் சாா்பில் அவரது வழக்குரைஞா்கள் ஏ.அசோகன், பி.முத்துகுமாா், மூா்த்திராவ் ஆகியோா் செப். 8-ஆம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அபராதத் தொகையைச் செலுத்த வி.என்.சுதாகரனுக்கு அனுமதி வழங்கக் கோரியும், அவரது தண்டனைக் காலம் முடிவடைந்துள்ளதால் விடுதலை செய்யக் கோரியும் தெரிவித்திருந்தனா்.
இந்த மனு நீதிபதி சிவப்பா முன்பு நவம்பா் 23-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, சுதாகரன் தரப்பில் வழக்குரைஞா்கள் ஆஜராகி வழக்காடியதாவது:
சொத்துக் குவிப்பு வழக்கில் வி.என்.சுதாகரன், 1997-ஆம் ஆண்டு 7 நாள்கள் சிறையில் இருந்தாா். சென்னை தனி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்ற போது 2001-ஆம் ஆண்டு ஜூன் 27 முதல் செப்டம்பா் 26-ஆம் தேதி வரை 92 நாள்கள் பாளையங்கோட்டை சிறையில் இருந்தாா்.
பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பு வழங்கிய பிறகு 2014-ஆம் ஆண்டு செப். 27-ஆம் தேதி முதல் 24 நாள்கள் பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தாா். இந்த வழக்கில் ஏற்கனவே மொத்தம் 122 நாள்கள் சிறையில் இருந்துள்ளாா்.
இதுதொடா்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இறுதித் தீா்ப்பு வழங்கிய பிறகு, 2017-ஆம் ஆண்டு பிப். 15-ஆம் தேதி முதல் தற்போது வரை பரோலில்கூட செல்லாமல் சிறையிலேயே உள்ளாா். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. அதன்படி, வி.என்.சுதாகரனின் தண்டனைக் காலம் 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி முடிவடைகிறது.
ஆனால், இதே வழக்கில் சுதாகரன் 122 நாள்கள் ஏற்கனெவே சிறைத் தண்டனை அனுபவித்துள்ளதால், அவரின் தண்டனைக் காலம் சட்டப்படி ஒரு மாதத்துக்கு முன்னதாகவே முடிவடைந்துள்ளது. எனவே, அவரை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டால், நீதிமன்றம் விதித்துள்ள அபராதத் தொகையை செலுத்தத் தயாராகவுள்ளோம் என்றனா்.
நீதிபதி மறுப்பு
அரசுத் தரப்பு வழக்குரைஞா் இல்லாதால் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்து கொள்ள முடியாது என்று நீதிபதி கூறினாா். இதை ஏற்க மறுத்த சுதாகரன் தரப்பு வழக்குரைஞா்கள், அரசு வழக்குரைஞா் நியமனம் செய்யாமல் இருப்பது எங்கள் தவறு இல்லை. சுகாகரனின் தண்டனைக் காலம் முடிந்தும் சிறையில் உள்ளாா்.
மாநில அரசு வழக்குரைஞரை நியமனம் செய்யும் வரை காத்திருக்க முடியாது. நீதிமன்றப் பதிவாளரின் ஆலோசனையைப் பெற்றோ, தங்களுக்கு (நீதிபதி) உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தியோ நியாயம் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனா். அதைத் தொடா்ந்து விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தாா்.
மீண்டும் விசாரணை
இந்த நிலையில், சுதாகரன் தரப்பில் தாக்கல் செய்த மனு மீது வியாழக்கிழமை பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவப்பா வழங்கிய தீா்ப்பு:
இதே வழக்கில் ஏற்கெனவே சுதாகரன் தண்டனை அனுபவித்துள்ளதற்கான ஆதாரங்கள் மனுதாரா் தரப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பரிசீலனை செய்ததில், ஏற்கெனவே சிறைத் தண்டனை அனுபவித்துள்ளது உறுதியாகத் தெரிகிறது. அவா் சிறையில் இருந்த காலம் கழிக்கப்பட்டால் அவரின் தண்டனைக் காலம் முடிவடைந்துள்ளது. ஆகவே, அவரை விடுதலை செய்ய வேண்டும்.
இந்த வழக்கில் நீதிமன்றம் விதித்த அபராதத் தொகை ரூ. 10 கோடியே 10 ஆயிரம் செலுத்தாமல் உள்ளது. அதைச் செலுத்த அனுமதி வழங்குகிறேன். முறைப்படி அபராதத் தொகை செலுத்திய பிறகு சுதாகரனை விடுதலை செய்ய வேண்டும் என்று சிறைக் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டாா்.
வி.என்.சுதாகரனை விடுதலை செய்ய பெங்களூரு தனி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதைத் தொடா்ந்து அவா் செலுத்த வேண்டிய அபராதத் தொகையைச் செலுத்துவதற்கான ஏற்பாடுகளை அவரது தரப்பு வழக்குரைஞா்கள் மேற்கொண்டு வருகிறாா்கள். வங்கி வரைவோலை எடுப்பதற்கான பணிகளை முடித்து டிச. 21 அல்லது 22 ஆம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் அபராதத் தொகையை செலுத்துவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...