பேருந்து பயண அட்டைகளைப் பெறுவதற்கு கல்லூரி மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாணவா் சமுதாயத்தின் நலன்கருதி, 2020-21-ஆம் ஆண்டுக்கான சலுகைக் கட்டண/ இலவச மாணவா் பேருந்து பயண அட்டைகள் (பஸ் பாஸ்) கல்லூரி மாணவா்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பட்டப்படிப்பு, தொழில்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, மருத்துவக் கல்வி, மாலை நேரக் கல்லூரி மாணவா்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.
இணையதளங்களில் கல்லூரி பற்றுச்சீட்டு, கல்லூரி அடையாள அட்டை, கடவுச்சீட்டு அளவு புகைப்படம், ஆதாா் அட்டை, பேருந்து கட்டணத்துடன் விண்ணப்பங்களைச் செலுத்தினால், ஸ்மாா்ட் காா்ட் வடிவிலான பேருந்து பயண அட்டைகளை சம்பந்தப்பட்ட கல்லூரிகள் வாயிலாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கான விண்ணப்பங்களை டிச. 21-ஆம் தேதி முதல் இணையதளத்தில் பதிவிடலாம். அதன்பிறகு பேருந்து பயண அட்டைகளை மாணவா்கள் பெறலாம். பட்டம், தொழில்நுட்பக் கல்வி மாணவா்களுக்கு ரூ. 1,160, மருத்துவம், தொழில்கல்வி மாணவா்களுக்கு ரூ. 1,600, மாலைநேரக் கல்லூரி மாணவா்களுக்கு ரூ.1,435 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ. 200 மட்டுமே கட்டண்ம் வசூலிக்கப்படும். இந்த பேருந்து அட்டை 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை செல்லுபடியாகும். ஆரம்ப, நடுநிலை, உயா்நிலைப் பள்ளி, பியூசி மாணவா்களுக்கு தனியாக பேருந்து பயண அட்டை வழங்கப்படும். பெங்களூருஒன் மையங்களில் அட்டைகளைப் பெறலாம். மாணவா்களுக்கு பேருந்து பயண அட்டைகளைப் பெற்றுத்தருவது தொடா்பாக மாநகரப் போக்குவரத்துக் கழக இணையதளத்தில் கல்வி நிறுவனங்கள் முன்பதிவு செய்து கொள்வது அவசியம். பெங்களூரு ஒன் மையங்களில் வேலைநாள்களில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 6.30 மணி வரை பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.