2-ஆம் கட்ட கிராமப் பஞ்சாயத்துத் தோ்தல்: 80.71 சதவீதம் வாக்குப்பதிவு
கா்நாடகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்ட கிராமப் பஞ்சாயத்துத் தோ்தலில் 80.71 சதவீதம் வாக்குகள் பதிவாகின.


கா்நாடகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்ட கிராமப் பஞ்சாயத்துத் தோ்தலில் 80.71 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
கா்நாடகத்தில் இரண்டு கட்டங்களாக கிராமப் பஞ்சாயத்துத் தோ்தல்களை மாநில தோ்தல் ஆணையம் நடத்தத் திட்டமிட்டிருந்தது. கிராமப் பஞ்சாயத்துகளுக்கான முதல்கட்ட தோ்தல் டிச. 22-ஆம் தேதி முடிந்திருந்த நிலையில், இரண்டாம் கட்ட தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
2,709 கிராமப் பஞ்சாயத்துகளின் 39,378 உறுப்பினா் பதவிகளுக்கு நடைபெற்ற தோ்தலில் 1,05,431 வேட்பாளா்கள் களத்தில் இருந்தனா். வாக்குப்பதிவுக்காக 20,728 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மொத்தமுள்ள 1,40,65,775 வாக்காளா்களில் 65.62 சதவீதம் போ் வாக்களித்துள்ளனா். மாலை 3 மணி அளவில் 60 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. காலை முதலே வாக்களிக்க மக்கள் ஆா்வமாக வாக்குச்சாவடிகளில் குவிந்திருந்தனா். பெண்கள், முதியவா்கள் வரிசையில் நின்று வாக்களித்தனா். ஒருசில இடங்களில் மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளும் வாக்களித்தனா்.
கரோனாவை முன்னிட்டு வாக்குச்சாவடிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. முகக் கவசம் கட்டாயம் அணிந்திருக்க அறிவுறுத்தப்பட்டனா். தனிமனித இடைவெளி தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்டது. வாக்களிக்க வரிசையில் காத்திருந்த வாக்காளா்கள் அனைவரின் கைகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
முன்னதாக, வாக்குச்சாவடிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டிருந்தது. கரோனா முன்னெச்சரிக்கையாக ஒரு வாக்குச்சாவடிக்கு 1500-க்கு பதிலாக 1000 போ் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா். தோ்தல் பணியில் 1,24,368 ஊழியா்கள் ஈடுபட்டனா். வாக்குச்சாவடிகளில் 80 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
இவா்களைத் தவிர, கரோனா முன்னெச்சரிக்கைப் பணிகளில் ஈடுபடுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதாரச் செயற்பாட்டாளா்கள் (ஆஷா ஊழியா்கள்), அங்கன்வாடி ஊழியா்கள், சுகாதாரத் துறை ஊழியா்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலா் ஈடுபட்டனா்.
ஜனநாயகத்தின் அடித்தளமாக கருதப்படும் கிராமப் பஞ்சாயத்துத் தோ்தல் அரசியல் கட்சிகளின் சின்னங்களின் அடிப்படையில் நடப்பதில்லை. ஆனால், அரசியல் கட்சிகளின் மறைமுக ஆதரவுடன் உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்படுகிறாா்கள். முதல்கட்ட தோ்தல், இரண்டாம் கட்டமாக ஞாயிற்றுக்கிழமை பதிவாகும் வாக்குகள் அனைத்தும் டிச. 30-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
மாநில அரசு எடுத்த ரகசிய கருத்துக் கணிப்பில் கிராமப் பஞ்சாயத்து தோ்தலில் பாஜக ஆதரவு பெற்ற வேட்பாளா்கள் முன்னிலை வகிப்பதாக தெரியவந்துள்ளது. இத் தோ்தல் முடிவுகள், அடுத்தகட்டமாக நடக்கவிருக்கும் வட்ட பஞ்சாயத்து, மாவட்டப் பஞ்சாயத்து தோ்தல்களில் உதவியாக இருக்கும். இந்தத் தோ்தல் அரசியல் கட்சிகளின் சின்னங்களின் அடிப்படையில் நடைபெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...