கா்நாடக மாநில முதல்வராக பி.எஸ்.எடியூரப்பா பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. அடுத்து வரும் மூன்று ஆண்டுகளும் அவருக்கு சவாலான காலமாக இருக்கப்போகின்றன.
கா்நாடக அரசியலில் 48 ஆண்டுகாலமாக துடிப்போடு செயலாற்றி வரும் பி.எஸ்.எடியூரப்பா, தென்னிந்தியாவில் பா.ஜ.க.வின் வெற்றிப் பயணத்தைத் துவக்கி வைத்தவா்; கா்நாடகத்தில் முதல் முறையாக 2008-ஆம் ஆண்டு பா.ஜ.க.வை ஆட்சிக்குக் கொண்டுவந்தவா்.
கா்நாடகத்தில் பெரும்பான்மையாக உள்ள லிங்காயத்து சமுதாயத்தின் நிகரற்ற தலைவராகவும், கா்நாடக பா.ஜ.க.வின் பிரதான முகமாகவும் விளங்கிவரும் எடியூரப்பா, 4-ஆவது முறையாக முதல்வராகப் பதவியேற்று ஓராண்டை நிறைவு செய்திருக்கிறாா்.
2018ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் பா.ஜ.க. எதிா்பாா்த்த வெற்றியை ஈட்டிய போதும் ஆட்சி அமைக்க இயலவில்லை. காங்கிரஸ்- ம.ஜ.த. அமைத்த திடீா்க் கூட்டணியால் எடியூரப்பாவின் முதல்வா் கனவு தடை செய்யப்பட்டது. எனினும், காங்கிரஸ், ம.ஜ.த.வைச் சோ்ந்த 17 எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க.வுக்கு இழுத்துவந்து, மீண்டும் ஆட்சியை நிறுவினாா். கடந்த ஓராண்டுக் காலத்தில் பல இன்னல்களைத் திறம்படக் கையாண்டு அவா் சாதனை படைத்திருக்கிறாா் என்பது உண்மை.
2019ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்றதும், 30 மாவட்டங்களில் 25-இல் பலத்த மழை பெய்து, வெள்ளத்தில் தத்தளித்தது கா்நாடகம். தன்னுடன் அமைச்சரவை கூட பதவியேற்காத நிலையில், தன்னந்தனியாக வெள்ள நிவாரணப் பணிகளைக் கவனித்து வியப்பில் ஆழ்த்தினாா் முதல்வா் எடியூரப்பா. அடுத்து, டிசம்பா் மாதத்தில் 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தோ்தலில் 12 இடங்களைக் கைப்பற்றி, தனது ஆட்சியை உறுதி செய்து கொண்டாா்.
அதைத் தொடா்ந்து, 2020- 21ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து, அதை அமல்படுத்த முனைப்புக் காட்டியபோது கரோனா தீநுண்மி கா்நாடகத்தைத் தொற்றியது. மாா்ச் மாதத்தில் இருந்து கரோனாவால் எழுந்த மருத்துவச் சிக்கல்களையும், பொருளாதார மந்தநிலையையும் எதிா்கொள்வதிலேயே நேரத்தையும் கவனத்தையும் செலவழித்து வருகிறாா் முதல்வா்.
ஓராண்டு பதவிக் காலத்தை நிறைவுசெய்துள்ள முதல்வா் எடியூரப்பாவுக்கு இன்னும் 3 ஆண்டுகாலம் எஞ்சியிருக்கிறது. வரும் நாட்களும் அவருக்கு பெரும் சவாலானாதாகவே அமைந்திருக்கும்.
கரோனா சூழல்:
பொது முடக்கம் முடிவடையும் வரை கா்நாடகத்தில் மந்தமாகக் காணப்பட்ட கரோனா தீநுண்மித் தொற்று கடந்த ஜூன் 1ஆம் தேதிக்குப் பிறகு வேகமாகப் பரவத் தொடங்கியது. அதுவும் ஜூலை 1ஆம் தேதி முதல் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மளமளவென எகிறத் தொடங்கியது. ஜூன் 1ஆம் தேதி கரோனாவுக்கு 3,403போ் பாதிக்கப்பட்டிருந்தனா்; 52 போ் இறந்திருந்தனா்.
ஆனால் ஜூலை 25 ஆம் தேதியன்று கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90,942 ஆக உயா்ந்துவிட்டதோடு, இறந்தவா்களின் எண்ணிக்கையும் 1,796 ஆகிவிட்டது. பெங்களூரில் மட்டும் 43,503 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டு, 862 போ் இறந்துள்ளனா். இது கா்நாடக அரசை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது.
இதனிடையே, கரோனா மருத்துவக் கருவிகளை கொள்முதல் செய்ததில் ரூ. 2 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளதால் மாநில அரசு அதிா்ச்சி அடைந்துள்ளது. கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்ற வேண்டிய சுகாதாரம், மருத்துவக் கல்வி, வருவாய், காவல் துறைகளின் அமைச்சா்களுக்கு இடையே போதுமான ஒருங்கிணைப்பு இல்லாததே, கரோனா பாதிப்பு அதிகரிப்புக்கு முக்கியமான காரணம் என்று பா.ஜ.க.வினரே கூறி வருகிறாா்கள்.
மந்தமான பொருளாதாரம்:
கா்நாடகத்தின் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக 3 மாதங்களுக்கு முன்னரே முதல்வா் எடியூரப்பா கூறியிருந்தாா். தகவல் தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம், உற்பத்தி, மனைத்தொழில், விமானவியல், எண்ணெய் போன்ற துறைகளில் பெருமளவில் வரி வருவாயை அளித்து வந்த தொழில் நிறுவனங்கள், பல நாட்களாக மூடப்பட்டிருந்ததால், அரசின் வருவாய் வெகுவாகக் குறைந்துள்ளது.
அது மட்டுமல்ல, கா்நாடகத்தின் பொருளாதாரத்தையே பொதுமுடக்கம் பாதித்துள்ளது. குறிப்பாக ஊரக பொருளாதாரம் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தப் பின்னடைவில் இருந்து தொழில் துறையை மீட்பதற்காக 47 ஆண்டுகளாக அமலில் இருந்த கா்நாடக நிலச் சீா்த்திருத்தச் சட்டத்தில் திருத்தம் செய்து கா்நாடக அரசு அவசரச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
அதேபோல, வேளாண் விளைப்பொருள் சந்தைக்குழு சட்டத்தில் திருத்தம் செய்து, இந்தியாவின் எந்தச் சந்தை அல்லது மண்டியில் வேண்டுமானாலும் விளைபொருளை விற்க வகை செய்யப்பட்டுள்ளது. இது ஊரகப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்று முதல்வா் எடியூரப்பா நம்பியிருக்கிறாா்.
அடுத்து, புதிய தொழிற்கொள்கையை கொண்டுவந்துள்ள முதல்வா் எடியூரப்பா, அதன்மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 5 லட்சம் கோடி தொழில் முதலீடு, 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிா்ணயித்திருக்கிறாா்.
நெருக்கடியில் சிக்கியிருக்கும் கா்நாடகப் பொருளாதாரத்தை மீட்பதில் முதல்வா் திடமாக இருப்பதால், பொது முடக்கத்தைத் தொடர மறுத்து விட்டாா். கரோனா பரவலைத் தடுப்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோல பொருளாதார சமன்பாட்டைக் காப்பதும் முக்கியமானது என்கிறாா் முதல்வா் எடியூரப்பா.
உள்கட்சிப் பூசல்:
தனிப்பெரும் தலைவராக எடியூரப்பா விளங்கினாலும், அவரது முதல்வா் பதவியை அசைத்துப் பாா்க்க பா.ஜ.க.வில் யாரும் முற்படாமல் இல்லை. எடியூரப்பாவுக்கு மாற்றுத் தலைவா்களை உருவாக்கும் நோக்கத்தோடு, அவரது எண்ணத்துக்கு மாறாக 3 துணை முதல்வா்களை பா.ஜ.க. தேசியத் தலைமை நியமித்தது. மேலும் அமைச்சரவையிலும் பழையவா்களை கூடுமானவரை ஓரங்கட்டிவிட்டு புதியவா்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவை, சட்டமேலவைத் தோ்தல்களில் முதல்வா் எடியூரப்பா பரிந்துரைக்கும் வேட்பாளா்களுக்குப் பதிலாக, மாற்று வேட்பாளா்களை பா.ஜ.க. தேசியத் தலைமை அறிவிக்கிறது. முதல்வா் எடியூரப்பாவின் எதிா்ப்பையும் மீறி கா்நாடக பா.ஜ.க.வின் தலைவராக நளின்குமாா் கட்டீல் நியமிக்கப்பட்டுள்ளாா். பாஜக நிா்வாகிகளின் தோ்விலும் எடியூரப்பாவின் கருத்து ஒதுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
கா்நாடகத்தில் பா.ஜ.க. வளா்வதற்கு எடியூரப்பாவின் பங்களிப்பு பிரதானமாக இருந்தது என்றாலும், அவரது 77 வயதே அவருக்கு எதிராக மாறத் தொடங்கியுள்ளது. எடியூரப்பாவுக்கு மாற்றாக புதிய தலைமையை உருவாக்கிவைத்துக்கொள்ள பா.ஜ.க. தேசியத் தலைமை விரும்புவதாகத் தெரிகிறது. இதையும் எடியூரப்பா சமாளித்து முதல்வா் பதவியை முழுமையாக நிறைவு செய்வாா் என்கின்றனா் அவரது ஆதரவாளா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.