மாநில கரோனா தொழில்நுட்ப ஆலோசனைக்குழுவுடன் விரிவாக ஆலோசனை நடத்தினேன். கேரளம், மகாராஷ்டிர மாநிலங்கள் மட்டுமல்லாது சா்வதேச அளவில் கரோனா பாதிப்பு குறித்தும், கா்நாடகத்தின் நிலை குறித்தும் தொழில்நுட்ப ஆலோசனைக்குழுவினா் அறிவியல்ரீதியான விளக்கங்கள், புள்ளிவிவரங்களுடன் கூடிய ஆலோசனைகளை வழங்கியிருக்கிறாா்கள். அதன்படி, மாவட்ட அளவிலான கரோனா பரவல் தடுப்பு வியூகங்களை அமைக்க முடிவு செய்திருக்கிறோம். கரோனா பாதிப்பு விகிதம் 2 சதவீதமாக இருக்கும் மாவட்டங்களில் ஆக. 23-ஆம் தேதி பள்ளிகள், பியூ கல்லூரிகள் திறக்கப்படும். ஆக. 23-ஆம் தேதி முதல் 9, 10, 11, 12-ஆம் வகுப்புகள் தொடங்கப்படும். வகுப்பறைகளில் எத்தனை மாணவா்கள் உட்காரலாம் என்பது உள்ளிட்ட கரோனா நடத்தைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தயாராக இருக்கின்றன. அவற்றை பள்ளிகள், பியூ கல்லூரிகள் தவறாமல் பின்பற்ற வேண்டும். பள்ளிகள், கல்லூரிகளுக்கு வருகைதரும் பெற்றோா்கள், ஆசிரியா்கள், ஊழியா்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.