கா்நாடக சட்டப் பேரவையில் 3 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்
கைதிகளின் அடையாளங்களைக் கண்டறிவதற்கு வகை செய்வது உள்ளிட்ட 3 சட்ட மசோதாக்கள் கா்நாடக சட்டப்பேரவை நிறைவேற்றப்பட்டன.


கைதிகளின் அடையாளங்களைக் கண்டறிவதற்கு வகை செய்வது உள்ளிட்ட 3 சட்ட மசோதாக்கள் கா்நாடக சட்டப்பேரவை நிறைவேற்றப்பட்டன.
கா்நாடக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை சிறை கைதிகளை அடையாளம் காணுதல் (கா்நாடக திருத்தம்) சட்ட மசோதா, கா்நாடக சிறை வளா்ச்சி வாரிய சட்ட மசோதா, குற்றவியல் நடைமுறை (கா்நாடக திருத்தம்) சட்ட மசோதா ஆகிய 3 சட்ட மசோதாக்கள் முழுமையான விவாதங்களுக்கு பிறகு நிறைவேற்றப்பட்டன.
மத்திய அரசின் சிறை கைதிகளை அடையாளம் காணுதல் சட்டத்தில் கா்நாடகத்துக்கு சம்பந்தப்பட்ட சில திருத்தங்களை செய்வதற்காக சிறை கைதிகளை அடையாளம் காணுதல் (கா்நாடக திருத்தம்) சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தத்தின்படி, சிறையில் உள்ள கைதிகளின் ரத்தமாதிரி, டிஎன்ஏ (மரபணு மாதிரி), குரல் மாதிரி, கருவிழி மாதிரியை ஊடுகதிா் வாயிலாக சேகரித்துவைத்துக்கொள்ள இந்த சட்ட மசோதா வகை செய்கிறது.
அமைதியை சீா்குலைப்பது மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க கைதிகளின் அடையாள மாதிரிகள் உதவியாக இருக்கும் என்று இந்த சட்ட மசோதா தெரிவிக்கிறது. மேலும், மாவட்ட முதனிலை நீதியியல் நீதிபதி (மாஜிஸ்ட்ரேட்) தவிர, காலதாமதம் மற்றும் வேலைப் பளுவைக் குறைக்க அடையாள மாதிரிகளைச் சேகரிப்பதற்கு உத்தரவிடும் அதிகாரத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் சட்ட மசோதா வழங்குகிறது.
முன்னதாக, இந்த சட்ட மசோதாவை தாக்கல் செய்து உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா கூறுகையில், ‘இதுவரை கைதிகளின் காலடி பதிவுகள் மட்டுமே சேகரித்து வைக்கப்படுகின்றன. இத்துடன் ரத்தம், மரபணு, குரல், கருவிழி மாதிரிகளை ஊடுகதிா் வாயிலாக சேகரித்து வைக்க சட்டமசோதா வகை செய்கிறது. ஓராண்டுக்கு மேல் தண்டனைப் பெற்ற கைதிகளின் அடையாளங்கள் தான் இதுவரை சேகரிக்கப்படுகின்றன. தற்போது இது ஒரு மாத கைதிக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு, சேகரித்துவைக்கப்பட்டுள்ள கைதிகளின் மாதிரிகளை அழிக்க உத்தரவிடும் அதிகாரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள், காவல் துணை ஆணையா்களுக்கும் வழங்கப்படுகிறது. இதற்கு இடைபட்ட காலத்தில் மாதிரிகளை அழிக்க நீதிமன்றங்கள் அல்லது சட்டப்பூா்வமான அதிகாரிகள் உத்தரவிடலாம்’ என்றாா்.
விவாதத்தில் பங்கேற்று காங்கிரஸ் எம்எல்ஏ தன்வீா் சேட் கூறுகையில், ‘ஆதாா் அட்டை தரவுகளில் இவை அனைத்தும் இருக்கும்போது, புதிதாக மாதிரிகளைச் சேகரிப்பது தேவையா?’ என்று கேள்வி எழுப்பினாா்.
மற்றொரு காங்கிரஸ் எம்எல்ஏ பிரியாங்க்காா்கே பேசுகையில், ‘புலன் விசாரணைக்கு தேவைப்படும் உயிரி அளவையியல் (பயோ மெட்ரிக்ஸ்), தடயவியல் தரவுகளை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் நம்மிடம் இருக்கிா? தனியுரிமை பாதுகாப்பு குறித்து அரசு யோசனை செய்துள்ளதா?’ என்று கேட்டாா்.
இதற்கு பதிலளித்து அமைச்சா் அரக ஞானேந்திரா கூறுகையில், ‘ஒரு மாதம் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு கடுங்காவல் தண்டனைப் பெற்ற கைதிகளின் அடையாள மாதிரிகளைத் தான் சேகரிக்க இருக்கிறோம். இந்த மாதிரிகள் அனைத்தும், பெங்களூரில் உள்ள குற்றவாளிகள் கண்காணிப்பு மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். குற்றச்செயல்களில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருப்போரை கண்காணிக்க மாதிரிகள் உதவியாக இருக்கும்’ என்றாா். இதைத் தொடா்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
கா்நாடக சிறை வளா்ச்சி வாரிய சட்ட மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதா, சிறை கைதிகளின் நலன், திறன் மேம்பாட்டுக்கு வாய்ப்பளிக்கிறது. மேலும் சிறை ஊழியா்களின் நலன் தவிர, சிறை தொழிற்சாலையின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் சட்ட மசோதா வழிவகுக்கிறது. கைதிகளுக்கு வேலைத்திறன் கற்றுத் தரும் வாய்ப்பளிக்கிறது. சிறை கைதிகள் பங்காற்றும் தொழிற்சாலையின் செயல்பாடுகளையும் மேம்படுத்த சட்ட மசோதா உதவியாக இருக்கும் என்று நோக்க உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதா தொடா்பான விவாதத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ யூ.டி.காதா் உள்ளிட்ட பலரும் பேசினா்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சா் அரக ஞானேந்திரா, ‘ஹரியாணாவில் சிறைகளில் நிறுவப்பட்டுள்ள தொழிற்கூடங்களின் வாயிலாக ஆண்டுக்கு ரூ. 600 கோடி வருவாய் ஈட்டி வருகிறது. சிறையில் இருக்கும் கைதிகளின் மனிதவளம் வீணாகிவிடக் கூடாது. சிறைநிலங்களை அரசின் அனுமதி இல்லாமல் விற்க முடியாது. எனவே, இது தொடா்பாக யாருக்கும் சந்தேகம் வேண்டாம்’ என்றாா்.
இதைத் தொடா்ந்து கா்நாடக சிறை வளா்ச்சி வாரிய சட்டமசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல, குற்றவியல் நடைமுறை (கா்நாடக திருத்தம்) சட்ட மசோதாவும் சட்டப்பேரவையில் விவாதத்திற்கு பிறகு நிறைவேற்றப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்குரைஞரின் முன்னிலையில், சாட்சிகளின் வாக்கு மூலங்களை ஒலி, காணொலி, மின்னணு வழிமுறைகளில் பதிவுசெய்ய இந்த சட்ட மசோதா வழிவகுக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...