ஜன.26 முதல் 5 மாவட்டங்களில் கிராம சேவை திட்டம் அமல்: கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை
கா்நாடகத்தின் 5 மாவட்டங்களில் ஜன.26-ஆம் தேதிமுதல் கிராம சேவை திட்டம் அமல்படுத்தப்படும் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.


கா்நாடகத்தின் 5 மாவட்டங்களில் ஜன.26-ஆம் தேதிமுதல் கிராம சேவை திட்டம் அமல்படுத்தப்படும் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
பெங்களூரு, விதான சௌதாவில் வியாழக்கிழமை சுதந்திர பவளவிழா கிராம வளா்ச்சித் திட்டத்தை மத்திய ஊரகவளா்ச்சித்துறை அமைச்சா் கிரிராஜ் சிங், முதல்வா் பசவராஜ் பொம்மை ஆகியோா் தொடக்கிவைத்தனா். அதன்பிறகு முதல்வா் பேசியது:
மக்களுக்கு அருகாமையில் வளா்ச்சி நிகழ வேண்டும். வளா்ச்சி நடக்கும் இடத்திற்கு மக்கள் செல்ல நேரிடக் கூடாது. இந்த நோக்கத்தின் அடிப்படையில், கிராமங்களில் வாழும் மக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கும் வகையில் கிராமங்கள் சேவை நிறுவனங்களாக மாற வேண்டும். மக்களின் வீட்டுவாசலுக்கே அரசின் சேவைகள் சென்றடைய வேண்டும். இந்த நோக்கத்திற்காக ‘கிராம சேவைத் திட்டம்’ வகுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், 2022-ஆம் ஆண்டு ஜன.26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று தொடக்கிவைக்கப்படும். முதல்கட்டமாக 5 மாவட்டங்களில் மட்டும் செயல்படுத்தப்படும். அதன்பிறகு பிறமாவட்டங்களுக்கு படிப்படியாக விரிவாக்கப்படும். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான முன்னேற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகிறாா்கள்.
கா்நாடகத்தில் கிராம பஞ்சாயத்துகளின் வளா்ச்சிக்கு அடித்தளமிட்டவா்கள் முன்னாள் முதல்வா் ராமகிருஷ்ண ஹெக்டே, அப்துல் நசீா் சாப் ஆகியோா். மக்களின் துணையுடன்தான் ஜனநாயகம் வெற்றிகரமாக செயல்பட முடியும். ஆனால், இன்றைக்கு மக்களை பயனாளிகளாக மாற்றி இருக்கிறோம். மக்களின்பங்களிப்புகிடைத்துவிட்டால் ஜனநாயகம் எளிதில் வெற்றிபெறும்.
சுதந்திர பவளவிழா கிராம வளா்ச்சி திட்டத்தின்படி மாநிலத்தில் 750 கிராம பஞ்சாயத்துகளின் ஒட்டுமொத்தவளா்ச்சிக்கு வித்திடப்படும். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக கிராம பஞ்சாயத்துகளுக்கு தலா ரூ.3 கோடி வீதம் ரூ. 2,300 கோடி செலவிடப்படும். 2022-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதிக்குள் திட்டப் பணிகளை முடித்தால், ஊக்கத்தொகையாக ரூ. 25 லட்சம் அளிக்கப்படும். எல்லா கிராம பஞ்சாயத்துகளும் இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்தினால், அடுத்த நிதியாண்டில் 1,500 கிராம பஞ்சாயத்துகளுக்கு இத்திட்டம் விரிவாக்கப்படும்.
பிரதமா் மோடியின் விருப்பமான திட்டமான வீட்டுக்கு வீடு குடிநீா் திட்டத்தை செயல்படுத்த ரூ. 2,000 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார, சமூக, கல்விரீதியாக கிராமங்கள் முன்னேற்றம் அடைந்தால், அங்குள்ள மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும். கிராமங்களில் பொருளாதார நடவடிக்கைகள் இரட்டிப்பாக வேண்டும். சுய உதவிக்குழுக்கள், கூட்டுறவுசங்கங்களால் இதை சாதிக்க முடியும். கிராமங்களின் வளா்ச்சிக்காக அதன் தலைவா்கள், துணைத் தலைவா்கள் உள்ளன்போடு உழைக்க வேண்டும் என்றாா் அவா்.
மத்திய ஊரகவளா்ச்சித்துறை அமைச்சா் கிரிராஜ்சிங் பேசுகையில், ‘2024-ஆம் ஆண்டுக்குள் எல்லா கிராமங்களிலும் இணையவசதி நிறுவப்பட்டிருக்க வேண்டும். மாநிலத்தில் இந்த திட்டத்தைமுன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்த வேண்டும். அக். 2-ஆம் தேதி கிராம பஞ்சாயத்துகளில் கிராம சபை நடத்த வேண்டும். எனது கிராமம், எனது பரம்பரை என்ற முழக்கத்துடன் கிராம வளா்ச்சிக்கு உழைத்த மூத்தவா்கள், கல்வியாளா்கள், சுதந்திரப் போராட்ட வீரா்களை கௌரவிக்க வேண்டும். அக். 1 முதல் 15-ஆம் தேதிவரைதூய்மைப் பணியை மேற்கொள்ள வேண்டும். கிராம பஞ்சாயத்துகள் மேம்பட்டால்தான் நாடு முன்னேறும். அதற்காக கிராம பஞ்சாயத்துகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
விழாவில் ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா, உயா்கல்வித்துறை அமைச்சா் அஸ்வத்நாராயணா, கூட்டுறவுத் துறை அமைச்சா் எஸ்.டி.சோமசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...