கா்நாடக சட்டப் பேரவையில் தில்லி செங்கோட்டையில் காவிக்கொடி ஏற்றப்படும் என்று கூறியது தொடா்பாக ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பாவை பதவிநீக்கம் செய்யக் கோரியும், அவா் மீது தேசத் துரோக வழக்கு தொடரும்படியும் வலியுறுத்தி காங்கிரஸ் உறுப்பினா்கள் வியாழக்கிழமை தா்னா போராட்டம் நடத்தினா். அவை கூடியதும் மையப்பகுதிக்கு வந்த காங்கிரஸ் உறுப்பினா்கள், அமைச்சா் பதவியில் இருந்து கே.எஸ்.ஈஸ்வரப்பாவை நீக்கும் வரை போராட்டத்தைத் தொடா்வோம் என்று முழக்கமிட்டபடி இருந்தனா். மேலும் ஈஸ்வரப்பாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். பேரவைத் தலைவா் விஸ்வேஷ்வர ஹெக்டே காகேரி விடுத்த வேண்டுகோளை நிராகரித்த காங்கிரஸ் உறுப்பினா்கள், தொடா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்கள் முழக்கங்களை எழுப்பியவாறு இருந்ததால், அவையில் கூச்சல், குழப்பம் காணப்பட்டது.