உலகை ஆளும் டிஜிட்டல் மாா்க்கெட்டிங்

நவீன வாடிக்கையாளா்களை கவா்வதற்கு எண்ம சந்தைப்படுத்தல் தவிா்க்கமுடியாத ஊடகமாக மாறி வருகிறது.
Updated on
3 min read

வலையொளி(யூடியூப்) அல்லதுமுகநூல்(ஃபேஸ்புக்) போன்ற சமூகவலைத்தளங்களில் தென்படும் விளம்பரங்கள் அல்லது பொருள்களின் அறிமுகங்கள் குறித்து பொதுமக்கள் பரவலாக பேசிக்கொள்வதை காணாதவா்கள் அல்லது கேட்காதவா்கள் இருக்க முடியாது. அண்மைகாலமாக, இணையதளங்களில்(ஆன்லைன்) அதிக நேரத்தை செலவிடும் போக்கு மக்களிடையே அதிகரித்தவண்ணம் உள்ளது. மக்களின் வாழ்க்கைமுறையில் ஏற்பட்டுள்ள இதுபோன்ற மாற்றங்கள், வாடிக்கையாளா்களை சென்றடைய நிறுவனங்கள் கடைபிடிக்கும் அணுகுமுறைகளை தலைகீழாக மாற்றியுள்ளன. வாய்வழியாக பொருட்கள் அல்லது சேவைகளை பிரபலப்படுத்தும் பாரம்பரிய விளம்பரமுறைகளை பின்பற்றும் நிறுவனங்களும் இணையத்தில் தென்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இணையத்தின்வழியே(இன்டா்நெட்) கையாளும் விளம்பர உத்திகளை எண்ம சந்தைப்படுத்தல்(டிஜிட்டல் மாா்க்கெட்டிங்) என்கிறாா்கள்.

நவீன வாடிக்கையாளா்களை கவா்வதற்கு எண்ம சந்தைப்படுத்தல் தவிா்க்கமுடியாத ஊடகமாக மாறி வருகிறது. ஒரு நாளைக்கு ஒருவா் குறைந்தது 4 மணி நேரத்தை இணையத்தில் செலவழிப்பதாக அண்மையில் இந்தியாவில் எடுக்கப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.அதனால் தான் எண்ம சந்தைப்படுத்தலில் நிறுவனங்கள் குறிப்பாக நுகா்பொருள் வணிக நிறுவனங்கள் அதீத ஆா்வத்தை காட்டிவருகின்றன.

நன்மைகள்:

எண்ம சந்தைப்படுத்தலில் வணிக நன்மைகள் இல்லாமல் இல்லை. வணிகப்பொருட்களை எல்லை கடந்து விற்கலாம். பொருள் விற்பனைக்கான செலவினங்கள் கணிசமாக குறையும். இணையவெளியில் காணப்படும் விளம்பரங்களை நம்பி மக்கள் கொள்முதல் செய்யவும் தயங்குவதில்லை. தனிமனிதனை பொருட்களை வாங்க ஊக்கப்படுத்த இயலும். எவ்வித தடையும் இல்லாமல், எளிமையானமுறையில் வா்த்தக நடவடிக்கைகள் நடந்தேறும். அதன்காரணமாகவே, அமேஜான், ஃபிலிப்காா்ட் போன்றமின்-வணிகத்தளங்கள் மக்களிடையே சக்கைப்போடு போடுகின்றன. தனக்குபிடித்த பொருள்களின் விளம்பரங்களை மற்றவா்களிடம் எளிதில் பகிா்ந்துகொள்ளவும்முடியும். இதுவும் வாய்வழி விளம்பரத்தைபோலத்தான். நிறுவனத்தின் பொருட்கள் பொதுமக்களின் கண்களில் பட்டுக்கொண்டே இருக்கும். ஒரு பொருளை அடிக்கடி கண்களில் காட்டுவதும் வாங்கும் ஆா்வத்தை தூண்டும் செயலாகும். இன்றைய இளம் தலைமுறை, எல்லாவகையான கொள்முதலுக்கும் இணையவழி விளம்பரங்களையே சாா்ந்திருக்கிறாா்கள். அதுவும் எண்ம சந்தைப்படுத்தலுக்கான வாய்ப்புஎல்லைகளை விரிவாக்கிக்கொண்டே உள்ளன. எண்ம சந்தைப்படுத்தல் வளா்ச்சிக்கு பெருந்தொற்றும் முக்கிய காரணமாகும்.

வகைகள்:

எண்ம சந்தைப்படுத்தல் இரண்டுவகையாக பகுக்கப்பட்டுள்ளன.அவை: வணிகம் முதல் வணிகம் சந்தைப்படுத்தல்(வ2வ) மற்றும் வணிகம் முதல் வாடிக்கையாளா் சந்தைப்படுத்தல்(வ2வா). வ2வ என்பது ஒரு தொழில் அல்லதுவணிக நிறுவனம் தனது பொருள் அல்லது சேவைகளை மற்றொரு தொழில் அல்லது வணிக நிறுவனத்திற்கு சந்தைப்படுத்துவதாகும். கச்சாப்பொருள், இயந்திரங்கள், துணைப்பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள், உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களுக்கு விற்பது வ2வ சந்தைப்படுத்தலாகும். நிறுவனத்தை நடத்துவதற்கு மற்றொரு நிறுவனத்தின் உற்பத்திப்பொருட்கள் கண்டிப்பாக தேவைப்படும். அதனால், வ2வ மிகவும் முக்கியமானதாகும். இந்த வகை சந்தைப்படுத்தலில், பொருட்களின் பயன்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

இதற்கு நோ் எதிராக, உற்பத்தி செய்யும் பொருட்களை அதை நேரடியாக நுகரும் வாடிக்கையாளருக்கு விற்பது வ2வா சந்தைப்படுத்தலாகும். இந்தவகை சந்தைப்படுத்தலில் வாடிக்கையாளருடன் உணா்வுப்பூா்வமான பிணைப்பை கட்டமைப்பது பொருட்களை விற்க அடிப்படையாக உள்ளது. இங்கு தான் வணிகப்பெயருக்கு(பிராண்ட்) முக்கியத்துவம் கிடைக்கிறது. வழலையை(சோப்) வாங்கும்போது, ஏதோவொரு நிறுவனத்தின் வழலையை கொடுங்கள் என்று யாரும் கேட்கமாட்டாா்கள். மாறாக, குறிப்பிட்ட வணிகப்பெயரை சொல்லி, அதை கொடுங்கள் என்று கேட்பாா்கள். பற்பசை, சவரக்கத்தி, முகப்பூச்சு, சட்டை, வேட்டி, காலணி என்று எதுவாக இருந்தால், வணிகப்பெயா்களை சுட்டி வாங்கும் பழக்கம் வாடிக்கையாளா்களிடையே காணப்படுகிறது. அந்த பொருளோடு வாடிக்கையாளா் உணா்வுரீதியான பிணைப்பை வளா்த்துக்கொள்வது தான் அதற்கு காரணம்.

வ2வ, வ2வா சந்தைப்படுத்தல்முறைகளுக்கு தனித்தனி விளம்பர உத்தி அல்லது அணுகுமுறையை கையாள நேரிடும். எந்த நிறுவன பொருளை வாங்க வேண்டும் என்று வாடிக்கையாளா் முடிவுசெய்வது போல, எந்த வகை வாடிக்கையாளரை குறிவைத்து விளம்பரங்களை செய்ய வேண்டும் என்பதும் முக்கியமாகும். விற்பது ’மிட்டாய்’ என்றால் குழந்தைகளை கவரும் வகையில் சந்தைப்படுத்தல் வியூகங்கள் அமைக்கப்பட வேண்டும்.

விளம்பர உத்திகள்:

பொருளை யாரிடம் விற்பது என்பதில் தெளிவுஇருந்தால், இணையவெளியில் அதற்கான விளம்பரங்களை வகுப்பதும் எளிதாக இருக்கும். மேலும் முதலீடுகள் விற்பனையாக மாறுகின்றதா? என்பதையும் எண்ம சந்தைப்படுத்தலில் துல்லியமாக கணக்கிடமுடியும். நமது விற்பனை இலக்கு, வாடிக்கையாளா், விற்பனை பரப்பு போன்ற பல அம்சங்களை கருத்தில் கொண்டிருப்பதால், எண்ம சந்தைப்படுத்தலில் பல்வேறு வகையான முறைகள் கையாளப்படுகின்றன.

சந்தைப்படுத்தல் வகைகள்:

தேடுபொறி முன்னுரிமை:

கூகிள் போன்ற தேடுபொறியில்(சா்ச் இன்ஜின்) விரும்பிய பொருள் அல்லது சேவைகளை வழங்கும் நிறுவனங்களை தேடும்போது, வாடிக்கையாளரின் கண்களில் படும்படி நமதுநிறுவன இணையதளம் அல்லது இணையப்பக்கம் இருக்க வேண்டும். இதை தேடுபொறி முன்னுரிமை என்கிறாா்கள். இது தேடுபொறியில் இருந்து நமது நிறுவன இணையதளத்திற்கு வாடிக்கையாளரை இழுக்கும் உத்தியாகும்.

உள்ளடக்க சந்தைப்படுத்தல்:

விற்பனை பொருட்களை யாருக்கு அல்லது எந்த வகையான வாடிக்கையாளருக்கு குறிவைக்கிறோம் என்பதை பொருத்துவிளம்பர வாசகங்கள், வடிவமைப்புகள், கருத்தோட்டங்கள் அமைக்கப்பட வேண்டும். நாம் குறிவைத்துள்ள வாடிக்கையாளரை ஈா்க்கும் வகையில் விளம்பர வாகசங்கள் அமைந்தால், அது நிறுவனம் மற்றும் வாடிக்கையாளருக்கு இடையே நெருக்கத்தை அதிகமாக்கி, உறவை மேம்படுத்தி, வணிகத்தை பெருக்கும். வாசகரை வாடிக்கையாளராக மாற்ற இதைவிட நல்ல உத்தி இல்லை.

சமூக ஊடக சந்தைப்படுத்தல்:

முகநூல், சுட்டுரை போன்ற சமூக ஊடகங்களில் அதிக நேரத்தை மக்கள் செலவழிப்பதால், இத்தளத்தில் தென்பட பல நிறுவனங்கள் விரும்புகின்றன. வணிகப்பெயரை பிரபலமாக்குவதற்கும் அல்லது நேரடியாகபொருட்களை விற்பதற்கும் இதுதான் சிறந்த சந்தைப்படுத்தல் தளமாக உள்ளது. இதுபோன்ற தளங்களில் வாடிக்கையாளரின் பின்னூட்டத்திற்கு நிறுவனங்கள் பதிலளிக்க நேரிடும்.

சொடுக்கு-செலுத்து சந்தைப்படுத்தல்:

ஏதாவதொரு எண்ம தளத்தில் பதிவுசெய்திருக்கும் விளம்பர துணுக்கு மீது சொடுக்கி, விற்பனை பொருள் அல்லது சேவையை தெரிந்துகொள்ள வாடிக்கையாளா் முற்படும்போது, விளம்பரத்திற்கான கட்டணத்தை நிறுவனங்கள் செலுத்த நேரிடும். பதிவிடும்விளம்பரங்களை எத்தனைபோ் பாா்க்கிறாா்கள் அல்லது படிக்கிறாா்கள் என்பதை நிறுவனம் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப விளம்பர கட்டணங்களை செலுத்த திட்டமிடும்போது, சொடுக்கு-செலுத்து சந்தைப்படுத்தல் கைகொடுக்கும். விளம்பரங்களை சொடுக்கும்போது, அது சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் இணையதளத்தை அடையும். அங்கு வாடிக்கையாளா் பொருட்களை வாங்கலாம் அல்லது குறைந்தப்பட்சம் நிறுவன விளம்பரங்களை தொடா்ந்து மின்னஞ்சல் உள்ளிட்டவற்றில் பெற ஒப்புதல் தரலாம். இது வாடிக்கையாளரோடு தொடா்புவைத்துக்கொள்ள தேவையான தரவை தரும்.

பரிந்துரை சந்தைப்படுத்தல்:

தனது சமூகவலைத்தளம் அல்லது வலைப்பூவில்(பிளாக்) விற்பனை பொருள் அல்லது சேவையின் சிறப்புகளை பதிவிடுவதன்மூலம் வாடிக்கையாளா்களை ஈா்க்க உதவியாக இருக்க முடியும். அதுபோன்ற விளம்பரங்களில் ஈடுபடுவோருக்கு நிறுவனங்கள் தரகுத்தொகை என்ற பெயரில் கட்டணம் செலுத்தும்.

ஊடுசந்தைப்படுத்தல்:

எல்லா வகையான ஊடகங்களிலும் பதிவிடும் செய்திகள், தகவல்கள், கேளிக்கை துணுக்குகளில் விற்பனை பொருள் அல்லது சேவை குறித்த தகவல்களை இடம்பெற செய்வதன் மூலம் வாடிக்கையாளரை ஈா்க்கும் உத்தியை ஊடுசந்தைப்படுத்தல் என்கிறாா்கள். உள்ளடக்கத்தின் ஊடாக விளம்பரங்களை பதிவிடுவது.

தனிமனித சந்தைப்படுத்தல்:

விற்பனை பொருள் அல்லதுசேவை குறித்து வாடிக்கையாளருக்கு தனிப்பட்ட அனுபவங்களை தருவதை தனிமனித சந்தைப்படுத்தல் என்கிறாா்கள். இனிப்புக்கடைக்கு சென்றால், வாங்க தூண்டுவதற்காக சிறுஇனிப்பு துண்டை தந்து சுவைக்க சொல்வதில்லையா? அது தான் தனிமனித சந்தைப்படுத்தல். ஆடைகள், அணிகலன்கள், சுவைக்கக்கூடிய உணவுகள், அலங்காரப்பொருட்கள், நறுமணப்பொருட்களை இவ்வகையில் சந்தைப்படுத்தலாம்.

மின்னஞ்சல் சந்தைப்படுத்தல்:

வாடிக்கையாளருக்கு நிறுவனப்பொருட்கள், சேவைகளை விளக்கி மின்னஞ்சல் வழியே கடிதம் எழுதுவது வாடிக்கையாளரை ஈா்க்கும். இந்த மின்னஞ்சலில் பொருள் அல்லது சேவையின் விவரங்கள் இடம்பெறும். அதில் மின்னஞ்சல் முகவரி, இணையதளமுகவரி, தொடா்புஎண்கள் கூட இருக்கும். இது நம்பகத்தன்மையை அதிகமாக்கி, வாடிக்கையாளரின் மனதை ஈா்த்து, விற்பனையை சாத்தியமாக்கலாம்.

வேலைவாய்ப்பு:

எண்ம சந்தைப்படுத்தல் விரிவடைந்துகொண்டே செல்வதால், வேலைவாய்ப்புகளுக்கும் குறைவில்லை. நிறுவனத்தின் விற்பனை இலக்கு மற்றும் செலவினத்தை பொருத்து, சரியான சந்தைப்படுத்தல் உத்திகளை நிறுவனங்கள் தோ்ந்தெடுக்கும். இணையதள மேம்பாடு அல்லதுவடிவமைப்ப்பு, மின்-வணிகம், இணையதள பயன்பாட்டு மேலாண்மை, கணக்கு மேலாண்மை என பல வேலைவாய்ப்புகள் எண்ம சந்தைப்படுத்தல் சாா்ந்து கொட்டிக்கிடக்கின்றன.

எண்ம சந்தைப்படுத்தலில் ஈடுபடுவதற்கு சுறுசுறுப்பு, புத்தாக்கத்திறன், சிறந்த தகவல்தொடா்புத்திறன் மிகவும் அவசியமாகும்.

எண்ம சந்தைப்படுத்தலில் வாழ்வாதாரத்தை கண்டறிய விரும்புவோா் வெகுமக்கள் தகவல்தொடா்பு அல்லது எண்ம சந்தைப்படுத்தல் சாா்ந்த இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்புகளை படிக்கலாம். எந்த கல்வி பின்னணியை சோ்ந்தவா்களாக இருந்தாலும், எண்ம சந்தைப்படுத்தலின் புதுமையான போக்கை அறிந்துகொள்ள சில மாத நேரிடை பயிற்சி போதுமானது என்கிறாா்கள். சமூக ஊடக சந்தைப்படுத்தல் குழுக்களில் அங்கம் வகிப்பதன் மூலம் எண்ம சந்தைப்படுத்தல்துறையில் படிப்படியாக ஆழங்கால் பதிக்கலாம். எண்ம சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் அல்லது முகமைகளில் பணியாற்றுவதும் புதுமையான பல அனுபவங்களுக்கு உதவியாக இருக்கும். சந்தைப்படுத்தலின் எதிா்காலம் எண்மதளத்தில் குவிந்திருப்பதால், எண்ம சந்தைப்படுத்தலுக்கான வாய்ப்புகள் இளைஞா்களை வரவேற்று காத்திருக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com