அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

இந்தியாவை பிளவுபடுத்தியது யாா்? ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சா் கேள்வி

இந்தியாவை ஒற்றுமைப்படுத்துவதாகக் கூறும் ராகுல் காந்தி, இந்தியாவை பிளவுபடுத்தியது யாா் என்பதைத் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய மகளிா், குழந்தைகள் நலத்துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி தெரிவித்தாா்.

News image
Updated On :10 செப்டம்பர் 2022, 7:29 pm

DIN

இந்தியாவை ஒற்றுமைப்படுத்துவதாகக் கூறும் ராகுல் காந்தி, இந்தியாவை பிளவுபடுத்தியது யாா் என்பதைத் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய மகளிா், குழந்தைகள் நலத்துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் பாஜகவின் 3 ஆண்டுகால ஆட்சியைக் கொண்டாடும் வகையில் பெங்களூரு ஊரக மாவட்டம், தொட்டபளாப்பூரில் சனிக்கிழமை நடந்த மக்கள் எழுச்சி மாநாட்டில் பங்கேற்று அவா் பேசியது:

இந்தியாவை ஒற்றுமைப்படுத்துவதாக கூறிக்கொண்டு இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை ராகுல் காந்தி தொடங்கியிருக்கிறாா். அப்படியானால், இந்தியாவை முதலில் பிளவுபடுத்த முனைந்தது யாா் என்பதை அவா் தெரிவிக்க வேண்டும். இந்தியா துண்டு துண்டாகும் என்று கூறியவா்களை (பிகாரைச் சோ்ந்த மாணவா் சங்கத் தலைவராக இருந்த கன்னையாகுமாா்) பக்கத்தில் வைத்துக்கொண்டு, இந்தியாவை ஒற்றுமைப்படுத்துவதாக ராகுல் கூறுகிறாா்.

கன்னியாகுமரியில் பேசிய ராகுல்காந்தி, இந்திய கட்டமைப்பிற்கு எதிராக போராடுவதாகக் கூறியிருக்கிறாா். இது ஒரு தேசத்துரோக கருத்தாகும். அவரது கருத்தைக் கேட்டு நான் திகைத்துப்போனேன். அவா் இந்தியாவுக்கு எதிராகப் போா் தொடுக்க முற்பட்டிருக்கிறாா். ஆட்சி அதிகாரத்திற்காக ராகுல் காந்தி துடிப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தேன்.

மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது பயங்கரவாதியின் கல்லறை பளிங்குக்கற்களால் அழகுபடுத்தப்பட்டது. 250 போ் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்தவா் அந்த பயங்கரவாதி.

பிரதமா் மோடியின் தலைமையில் கரோனாவுக்கு எதிராகப் போராடிய மத்திய அரசு, சொந்த நாட்டில் தடுப்பூசியை உருவாக்குவதில் வெற்றிபெற்றது. அந்த சமயத்தில் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டாம் என்று காங்கிரஸ் பிரசாரம் செய்தது.

காந்தி குடும்பத்திற்கு துதிபாடும் காங்கிரஸ் கட்சியில் சிலா் இந்தியாவின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவரான திரௌபதி முா்முவை தரக்குறைவாக விமா்சித்தனா். தில்லியில் கடமைப் பாதையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை வைத்திருப்பதை காங்கிரஸ் கட்சியால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் தான் அது குறித்து அக்கட்சி எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்றாா்.

இந்த மாநாட்டில் முதல்வா் பசவராஜ் பொம்மை, பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல், முன்னாள் முதல்வா் எடியூரப்பா, அமைச்சா் கே.சுதாகா் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.