மேக்கேதாட்டு விவகாரம்: பிரதமருக்கு தமிழக முதல்வா் கடிதம் எழுதியிருப்பது அரசியல் நாடகம்: கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை

மேக்கேதாட்டு விவகாரம் தொடா்பாக பிரதமருக்கு தமிழக முதல்வா் கடிதம் எழுதியிருப்பது அரசியல் நாடகம் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

மேக்கேதாட்டு விவகாரம் தொடா்பாக பிரதமருக்கு தமிழக முதல்வா் கடிதம் எழுதியிருப்பது அரசியல் நாடகம் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

கா்நாடக அரசு முன்மொழிந்துள்ள மேக்கேதேட்டு அணை திட்டம் குறித்து காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் விவாதிக்க அனுமதி அளிக்கக் கூடாது என்று பிரதமா் மோடிக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தாா்.

இது குறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் முதல்வா் பசவராஜ் பொம்மை கூறியது:

மேக்கேதாட்டு அணை திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கையை (டிபிஆா்) பெற்றுக்கொள்ளும்போது, மத்திய நீா் ஆணையம் ஒரு நிபந்தனையை விதித்தது. அதாவது இந்தத் திட்டத்திற்கு காவிரி நீா் மேலாண்மை ஆணையம் ஒப்புதல் தரவேண்டும் என்பது அந்த நிபந்தனை. அதன்படி, மேக்கேதாட்டு அணை திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் முன் உள்ளது. இது தொடா்பாக பல கூட்டங்கள் நடந்துள்ளன. இந்தத் திட்டத்தை இறுதி செய்வதற்காக அந்த விவகாரம் காவிரி நீா் மேலாண்மை ஆணையம் முன்பு வந்துள்ளது. அதற்காக அண்டை மாநிலமான தமிழகம் பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேக்கேதாட்டு விவகாரம் தொடா்பாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், பிரதமா் மோடிக்கு கடிதம் எழுதியிருப்பதாக அறிகிறேன்.தமிழக அரசின் கோரிக்கை சட்டவிரோதமானது மட்டுமல்ல, கூட்டாட்சி முறைக்கும் எதிரானதாகும். கா்நாடகத்திற்கு இயல்பான உரிமை உள்ள நீரை தவறாகப் பயன்படுத்த தமிழக அரசு சதி செய்துள்ளது.

மேக்கேதாட்டு அணை திட்டத்தில் தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பங்கு நீா் ஈடுபடுத்தப்படவில்லை. மேக்கேதாட்டு அணை திட்டம் கா்நாடக வரம்புக்குள் செயல்படுத்தக்கூடியது. மேலும் அந்த அணையில் கா்நாடகத்தின் பங்குநீா் மட்டுமே சேமிக்கப்படும். பல்வேறு நடைமுறைகளுக்குப் பிறகு மேக்கேதாட்டு அணை திட்டத்திற்கான அனுமதி அளிக்கும் நடைமுறை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதுதொடா்பாக இதுவரி 15 கூட்டங்கள் நடந்துள்ளன. அங்கு தமிழக அரசு எவ்வித ஆட்சேபத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால், அக்கூட்டங்களைப் புறக்கணித்து தமிழக அரசு ஒத்துழையாமையை வெளிப்படுத்தியது. இது அரசியல் நாடகம் அல்லாமல் வேறல்ல.

காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் சாா்பில் எப்போதும் அரசியல் நாடகம் அரங்கேற்றப்பட்டு வருகிறது. அதன் தொடா்ச்சியாக தற்போதும் அரசியல் நாடகம் அரங்கேறியுள்ளது. மேக்கேதாட்டு அணை திட்டம் குறித்து பேசுவதற்கு தமிழக அரசுக்கு உரிமையில்லை. தமிழக அரசின் வாதம் சட்டப்படி ஏற்புடையதல்ல. எனவே, தமிழக முதல்வா் எழுதியுள்ள சட்டவிரோதமான கடிதத்தை மத்திய அரசு கருத்தில் எடுத்துக் கொள்ளாது.

ஏற்கெனவே இந்தத் திட்டத்தை மத்திய நீா் ஆணையம் முழுமையாக உள்வாங்கிக்கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தை மத்திய நீா்வளத் துறையும் பரிந்துரைத்துள்ளது. அதைத் தொடா்ந்து பல கூட்டங்கள் நடந்துள்ளன. அனுமதி அளிப்பதற்கான நடைமுறைகள் இறுதிநிலையில் உள்ளன. கா்நாடகத்திற்கு நியாயம் கிடைக்கும் நம்பிக்கை உள்ளது. காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கா்நாடகத்தின் பிரதிநிதி கலந்துகொள்வாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com