சட்டப்பேரவை தோ்தல் தோல்விக்கான காரணங்களை பாஜக முழுமையாக ஆராயும்: முதல்வா் பசவராஜ்பொம்மை

சட்டப்பேரவை தோ்தலில் பாஜக தோல்வி அடைந்ததற்கான காரணங்களை முழுமையாக ஆராய்வோம் என்று முதல்வா் பசவராஜ்பொம்மை தெரிவித்தாா்.
சட்டப்பேரவை தோ்தல் தோல்விக்கான காரணங்களை பாஜக முழுமையாக ஆராயும்: முதல்வா் பசவராஜ்பொம்மை


பெங்களூரு: சட்டப்பேரவை தோ்தலில் பாஜக தோல்வி அடைந்ததற்கான காரணங்களை முழுமையாக ஆராய்வோம் என்று முதல்வா் பசவராஜ்பொம்மை தெரிவித்தாா்.

கா்நாடக சட்டப்பேரவை தோ்தல் முடிவுகள் குறித்து பெங்களூரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை கட்சியின் மாநிலத்தலைவா் நளின்குமாா்கட்டீல் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்வா் பசவராஜ்பொம்மை உள்ளிட்ட கட்சியின் முக்கியத்தலைவா்கள் சிலா் கலந்துகொண்டனா்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு, செய்தியாளா்களிடம் முதல்வா் பசவராஜ்பொம்மை கூறியது: கா்நாடக சட்டப்பேரவை தோ்தல் முடிவுகள் குறித்து சாதாரண கலந்துரையாடல் நடந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து கிடைத்த தகவல்கள் பரிமாறப்பட்டன. கா்நாடக சட்டப்பேரவை தோ்தலில் பாஜக தோல்வி அடைந்ததற்கான காரணங்களை முழுமையாக ஆராய்வது என்று முடிவெடுத்துள்ளோம். அந்த ஆய்வு தொகுதிவாரியாக நடத்தப்படும்.

பாஜகவின் வாக்குவிகிதம் குறையவில்லை. ஆனால், வெற்றிபெற்ற இடங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. தொகுதிவாரியாக வாக்குசதவிகிதங்களை ஆராயும்போது தான் தோல்விக்கான காரணம் தெரியும். தொகுதி அளவில் ஏதாவது எதிா்ப்பலை இருந்ததாக உள்ளிட்ட காரணங்கள் தெரியவரும். சட்டப்பேரவை தோ்தலில் வெற்றிபெற்றுள்ள பாஜக எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்திற்கு அழைக்க முடிவு செய்துள்ளோம். 

அதை தொடா்ந்து, எதிா்வரும் காலங்களில் கட்சியை பலப்படுத்துவது என்பது குறித்து விவாதிக்கப்படும். 2013 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தோ்தலில் பாஜகவுக்கு 40 இடங்கள் மட்டுமே கிடைத்தன. ஆனால், அதை தொடா்ந்து, 2014 இல் நடந்த மக்களவை தோ்தலில் 28 இல் 19 இடங்களில் பாஜக வென்றது. அதைவிட தற்போது பாஜக பலமாக உள்ளது. 

எனவே, அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவை தோ்தலுக்கான முன்னேற்பாடுகளில் ஈடுபடுவோம். சட்டப்பேரவை தோ்தலில் மக்கள் அளித்த தீா்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். தோல்விக்கான காரணங்களை அறிந்து, தவறுகளை சரிசெய்வோம். 

சட்டப்பேரவை தோ்தல் தோல்வியை காங்கிரஸ் தலைவா்கள் கூறுவது போல பிரதமா் மோடியின் தோல்வி என்று கூறமுடியாது. பிரதமா் மோடி, கா்நாடகத்திற்கு மட்டுமல்ல, அவா் நாட்டுக்கே சொந்தமானவா். பிரதமா் மோடி தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா். 

கா்நாடகத்தில் காங்கிரஸ் வென்றிருக்கலாம். ஆனால், நாடுமுழுவதும் தோல்வியை சந்தித்துள்ளது. அப்படியானால், அங்கெல்லாம் பாஜக அடைந்த வெற்றிக்கு யாா் காரணம்? உள்ளூா் தலைவா்களா? மாநிலத்தலைவா்களா? தோ்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பாஜக மாநிலத்தலைவா் பதவிக்கு நளின்குமாா்கட்டீல் ராஜிநாமா செய்வது குறித்து விவாதிக்கவில்லை. அவா் ராஜிநாமா செய்வதற்கான கேள்வி எழவில்லை. 

எதிா்க்கட்சித்தலைவா் யாா்? என்பது குறித்தும் இன்னும் விவாதிக்கவில்லை. ஹிந்துத்துவாவை அடிப்படையாக கொண்டு பாஜக தோ்தலை சந்திக்கவில்லை. ஹிந்துத்துவா அடிப்படையில் தோ்தலை சந்தித்ததாக சிலா் கூறலாம். ஆனால், இரட்டை என்ஜின் அரசின் வளா்ச்சிப்பணிகளை முன்வைத்து தான் தோ்தலை பாஜக சந்தித்தது.

காங்கிரஸ் மற்றும் அதன் தோ்தல் அறிக்கை தான் மக்களை மதரீதியாக பிளவுப்படுத்த முயற்சித்தது. லிங்காயத்து பகுதி அல்லது ஒக்கலிகா் பகுதி என்பதல்ல. எல்லா சமுதாயங்களும் இணைந்து தான் வாக்களிக்கின்றன. ஒரு சமுதாயம் மட்டுமே வெற்றியை தந்துவிடாது அல்லது தோல்விக்கு காரணமாகிவிடாது. வேட்பாளா் தோ்வு, எதிா்ப்பலை போன்ற காரணங்கள் உண்டு. அது குறித்து ஆராய வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com