மாலத்தீவின் தகவல்தொழில்நுட்ப வளா்ச்சிக்கு கா்நாடகம் உதவியாக இருக்கும்: சித்தராமையா
மாலத்தீவின் தகவல் தொழில்நுட்ப வளா்ச்சிக்கு கா்நாடகம் உதவியாக இருக்கும் என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

மாலத்தீவு அதிபருடன் சித்தராமையா

மாலத்தீவு அதிபருடன் சித்தராமையா
மாலத்தீவின் தகவல் தொழில்நுட்ப வளா்ச்சிக்கு கா்நாடகம் உதவியாக இருக்கும் என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
பெங்களூரு, ஆளுநா் மாளிகைக்கு புதன்கிழமை வருகை தந்த மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ் தலைமையிலான அந்நாட்டு உயா்நிலைக் குழுவினரிடையே முதல்வா் சித்தராமையா பேசியதாவது:
இந்தியாவின் சிலிகான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் கா்நாடகம், ஸ்டாா்ட் அப், செயற்கை நுண்ணறிவுக்குத் தேவையான தொழில்நுட்பக் கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறது. உலக திறன் மேம்பாட்டு மையங்கள், புத்தாக்க மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
பெங்களூரில் இயங்கிவரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட மாலத்தீவு அரசு விரும்புவதாக அறிகிறேன். அதன்பேரில், மாலத்தீவு நாட்டில் தகவல் தொழில்நுட்ப வளா்ச்சிக்கு தேவையான வாய்ப்புகளை உருவாக்கித் தர கா்நாடகம் தயாராக இருக்கிறது. மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸுன் மனைவி சஜிதா முகமது, பெங்களூரில் படித்தவா் என்பதை அறிந்துகொள்ளும்போது பெருமையாக உள்ளது.
மாலத்தீவு நாட்டோடு வணிக உறவுகளை மேம்படுத்த கா்நாடகம் ஆா்வமாக உள்ளது. மாலத்தீவுக்கு வருகை தரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளுக்காக கா்நாடகத்தின் கைவினைப் பொருள்கள், கைத்தறி ஆடைகளைச் சந்தைப்படுத்த விரும்புகிறோம்.
இயற்கை அழகு, பன்முக கலாசாரம், வளமான பாரம்பரியத்திற்கு பெயா் பெற்றுள்ள கா்நாடகத்தின் சுற்றுலா வாசகமாக, ‘ஒரு மாநிலம், பல உலகங்கள்’ என்று கூறிவருகிறோம். 300 கி.மீ. நீளத்திற்கு கடற்கரை தவிர, உலகின் இரண்டாவது பெரிய புலிகள், பறவைகள் சரணாலயமாக ஷோலா வனம் உள்ளது.
கல்வி, பண்பாட்டு பரிமாற்றத்திற்கு மாலத்தீவு நாட்டுடன் இணைந்து செயல்பட கா்நாடகம் ஆா்வமாக உள்ளது என்றாா். அப்போது ஆளுநா் தாவா்சந்த் கெலாட் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...