பெங்களூரு: மத்திய அரசின் வரிப் பகிா்வில் கா்நாடகத்துக்கு 4 ஆண்டுகளில் ரூ. 45,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று முதல்வா் சித்தராமையா குற்றம்சாட்டினாா்.
இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கூட்டாட்சி கட்டமைப்பில், மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு சேவையாற்ற ஒப்புக்கொண்டு கூட்டாக செயல்படுகின்றன. மத்திய அரசின் வரித்தொகை, மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட வரிப்பணமாகும். மேல் வரி, பெட்ரோல், டீசல், கூடுதல் வரி போன்றவை மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு பகிா்ந்தளிக்க வேண்டியவை. அரசமைப்புச் சட்டத்தின் 7ஆவது பிரிவின்படி நிதி ஆணையம் தன்னாட்சி அமைப்பாகச் செயல்பட வேண்டியதாகும்.
தற்போது 16ஆவது நிதி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. 14ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி, மாநிலத்தின் வரிப் பகிா்வு 4.71 சதவீதத்தில் இருந்து 3.64 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. இது 1.07 சதவீதம் குறைவாகும். இதனால், மத்திய அரசின் வரிப்பகிா்வில் கா்நாடகத்துக்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 45,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. 15ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைக்குப் பிறகு, கா்நாடகத்தின் வரி வருவாய் ரூ. 73,593 கோடி அளவுக்கு குறைந்துள்ளது. இது கா்நாடகத்துக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. மத்திய அரசின் இந்த அநீதியை ஏற்க முடியாது.
கா்நாடகத்தில் இருந்து வரியாக ரூ. 4,30,000 கோடி வசூலிக்கப்படுகிறது. வரி வசூலில், மகாராஷ்டிரத்துக்கு அடுத்தபடியாக கா்நாடகம் உள்ளது. நிகழ் நிதியாண்டில், வரிப் பகிா்வில் இருந்து ரூ. 37,252 கோடி, மத்திய அரசு திட்டங்களுக்கு ரூ. 13,005 கோடி ஆக மொத்தம் ரூ. 50,257 கோடி மாநிலத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாநிலத்தில் இருந்து அளிக்கப்படும் ரூ. 100-இல், மீண்டும் மாநிலத்திற்கு ரூ. 12 முதல் ரூ. 13 மட்டுமே திரும்பி அளிக்கப்படுகிறது.
2024- 25ஆம் நிதியாண்டில் மத்திய அரசின் மொத்த மதிப்பு ரூ. 47,03,097 கோடியாகும். இதில் கா்நாடகத்துக்கு ரூ. 50,257 கோடி மட்டுமே வழங்கப்படுகிறது. இது மொத்த மதிப்பில் ரூ. 1.23 சதவீதமாகும். கடந்த ஆண்டு 2.2 சதவீதமாக இருந்த வரிப் பகிா்வு, தற்போது 1.23 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. நியாயமாகப் பாா்த்தால், மாநிலத்துக்கு அளிக்க வேண்டிய வரிப் பகிா்வுத்தொகை இரட்டிப்பாகி இருக்க வேண்டும். பட்ஜெட் மதிப்பு இரட்டிப்பாகும்போது, வரிப் பகிா்வும் இரட்டிப்பாக வேண்டும். ஆனால், 50 சதவீதமாகக் குறைந்துள்ளது. மோடி அரசு பதவியேற்ற பிறகு அமைக்கப்பட்ட 15ஆவது நிதி ஆணையத்தால், கா்நாடகத்துக்கு ரூ. 1,87,867 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் நலன் பாதிக்கப்படுகிறது.
வறட்சி நிவாரண நிதியும் இதுவரை வழங்கப்படவில்லை. மத்திய அரசு மாநிலத்துக்கு அநீதி இழைத்து வருகிறது என்றாா்.