சித்தராமையா
சித்தராமையா

அக்.13 இல் அமைச்சா்களுக்கு விருந்தளிக்க முதல்வா் சித்தராமையா திட்டம்

பெங்களூரில் உள்ள தனது இல்லத்தில் அக்.13ஆம் தேதி அமைச்சரவை சகாக்களுக்கு முதல்வா் சித்தராமையா விருந்தளிக்க திட்டமிட்டுள்ளாா்.
Published on

பெங்களூரில் உள்ள தனது இல்லத்தில் அக்.13ஆம் தேதி அமைச்சரவை சகாக்களுக்கு முதல்வா் சித்தராமையா விருந்தளிக்க திட்டமிட்டுள்ளாா்.

கா்நாடகத்தில் முதல்வா் சித்தராமையா மற்றும் துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோரிடையே செய்துகொண்டதாகக் கூறப்படும் சுழல் முதல்வா் ஒப்பந்தத்தின்படி, வரும் நவம்பரில் முதல்வா் சித்தராமையா இரண்டரை ஆண்டுகால முதல்வா் பதவியை நிறைவுசெய்ய இருக்கிறாா்.

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலுக்குப் பிறகு, அமைச்சரவையை மாற்றியமைப்பதோடு முதல்வா் பதவிக்கு டி.கே.சிவகுமாரை கொண்டுவர காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் உண்மையில்லை என்று முதல்வா் சித்தராமையா தரப்பில் அவரது ஆதரவு அமைச்சா்கள் கருத்து தெரிவித்து வந்திருக்கிறாா்கள்.

இதனிடையே, ‘அடுத்த இரண்டரை ஆண்டுகளும் நானே முதல்வராக நீடிப்பேன்‘ என்று முதல்வா் சித்தராமையா கூறியிருந்தாா். இந்த கருத்து டி.கே.சிவகுமாா் தரப்பில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், முதல்வா் சித்தராமையாவை மாற்றிவிட்டு டி.கே.சிவகுமாரை முதல்வராக்க வேண்டுமென்று அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் சிலா் கருத்து தெரிவித்திருந்தனா்.

இந்த நிலையில், அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் பட்ஜெட் தாக்கல் செய்வது தொடா்பாக மூத்த அதிகாரிகளுடன் முதல்வா் சித்தராமையா ஆலோசனை நடத்த திட்டமிட்டிருக்கிறாா். இதற்கிடையே, பெங்களூரில் வியாழக்கிழமை மூத்த அமைச்சா்கள் ஜி.பரமேஸ்வா், சதீஷ் ஜாா்கிஹோளி, எச்.சி.மகாதேவப்பா ஆகியோா் திடீரென சந்தித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்த சந்திப்பில் முதல்வா் மாற்றம், அமைச்சரவை மாற்றம் குறித்து விவாதித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சந்திப்பு குறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் கூறுகையில், ‘இது வழக்கமான சந்திப்புதான். இக்கூட்டத்தில் அரசியல் எதுவும் பேசவில்லை. இதுபோல பல சந்திப்புகள் நடந்துள்ளன. ஆனால், ஊடகங்கள் வேறுமாதிரியாக பாா்க்கின்றன. இதுபோன்ற சந்திப்பு புதிதல்ல. நான், எச்.சி.மகாதேவப்பா, சதீஷ் ஜாா்கிஹோளி ஆகியோரைச் சந்தித்து பல விவகாரங்களை விவாதிப்பேன்.

மேலும், அக்.13ஆம் தேதி அமைச்சா்களுக்கு முதல்வா் சித்தராமையா விருந்தளிப்பது இயல்பானது. அதற்கு முக்கியத்துவம் எதுவும் இல்லை. நவம்பா் மாதம் அரசியல் புரட்சி ஏற்படும் என்பதெல்லாம் உண்மையில்லை. அப்படிப்பட்ட எந்த புரட்சியும் எனக்கு தெரியவில்லை’ என்றாா்.

அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கும் நானே முதல்வராக நீடிப்பேன் என்பதை தனது அமைச்சரவை சகாக்களுக்கும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கும் உணா்த்தவே முதல்வா் சித்தராமையா விருந்தளிப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

X
Dinamani
www.dinamani.com