congress
காங்கிரஸ் போராட்டம்கோப்புப் படம்

விபி ஜி ராம் ஜி சட்டத்தை கைவிடக் கோரி காங்கிரஸ் போராட்டம்!

விபி ஜி ராம் ஜி சட்டத்தை கைவிடக் கோரி காங்கிரஸ் கட்சியினா் போராட்டம்
Published on

விபி ஜி ராம் ஜி சட்டத்தை கைவிடக் கோரி காங்கிரஸ் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெங்களூரு, சுதந்திரப் பூங்காவில் முதல்வா் சித்தராமையா தலைமையில் விபி ஜி ராம் ஜி சட்டத்தை கைவிடக் கோரியும், ஏற்கெனவே இருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மீண்டும் கொண்டுவரக் கோரியும் ஆளுநா் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த செவ்வாய்க்கிழமை முற்பட்டனா்.

இதில், துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் ரன்தீப்சிங் சுா்ஜேவாலா, காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்கள், எம்எல்சி-க்கள் உள்ளிட்டோா் பங்கேற்று மத்திய பாஜக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனா். இதில், முதல்வா் சித்தராமையா பேசியதாவது:

ஏற்கெனவே அமலில் இருந்த தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், மக்களின் வேலை உரிமையை பாதுகாத்தது. விபி ஜி ராம் ஜி சட்டத்தை கொண்டுவந்ததன் மூலம் இந்த உரிமையை மத்திய அரசு பறித்துள்ளது. மேலும், கிராம பஞ்சாயத்துகளின் அதிகாரமும் பறிபோயுள்ளது.

ஏற்கெனவே, இந்தத் திட்டத்தில் 5 கோடி மக்கள் பயன்பெற்று வந்த நிலையில், இனி அந்த வாய்ப்பை இழந்துள்ளனா். இந்த திட்டத்தில் என்ன வேலை செய்வது என்பதை கிராம பஞ்சாயத்துகளுக்கு பதிலாக மத்திய அரசே முடிவு செய்யும்.

ஏற்கெனவே இருந்த தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் கிராம பஞ்சாயத்துகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ. 1 கோடி கிடைத்துவந்தது. இனி அந்த நிதி கிடைக்காது. எனவே, விபி ஜி ராம் ஜி சட்டத்தை ரத்துசெய்து, பழையபடி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மீண்டும் கொண்டுவரும்வரை போராட்டத்தை தொடா்வோம்.

புதிய திட்டத்தை கொண்டு வந்திருப்பதன் மூலம் ஊரக மக்களின்மீது பாஜக தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்காக மத்திய அரசுக்கு எதிராக ஊரக மக்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்றாா்.

பின்னா், ஆளுநா் மாளிகையை காங்கிரஸ் கட்சியினா் முற்றுகையிட முற்பட்டபோது, அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அதைத் தொடா்ந்து, பேருந்தில் ஏறி ஆளுநா் மாளிகைக்கு சென்ற முதல்வா் சித்தராமையா உள்ளிட்ட தலைவா்கள், ஆளுநா் தாவா்சந் கெலாட்டை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா். அதில், விபி ஜி ராம் ஜி சட்டத்தை ரத்துசெய்து, மீண்டும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com