தேசிய ஊரக வேலை சட்ட விவகாரம்: காங்கிரஸ் தலைவா்கள் போராட்டம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட சட்டத்தை மீண்டும் கொண்டு வரக் கோரி, புது தில்லியில் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவா்கள் ஆா்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்தினா்.
காங்கிரஸ் கூட்டணி அரசால் முன்பு கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு மாற்றாக விபி-ஜி ராம் ஜி என்ற பெயரில் புதிய சட்டத்தை மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு ஆரம்பம் முதலே காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட சட்டத்தை மீண்டும் கொண்டு வரக்கோரி, தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னா், அங்கிருந்து காந்தி நினைவிடத்தை நோக்கி காங்கிரஸ் மூத்த தலைவா்கள் பேரணியாகச் சென்றனா். ஆனால், அவா்கள் பாதி வழியில் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அங்கு செய்தியாளா்களிடம் காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் பேசியதாவது: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது, புரட்சிகரமானது. அது கடந்த 2005-ஆம் ஆண்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அந்த ச் சட்டத்தை உருவாக்குவதில் முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் பங்களிப்பு முக்கியமானது.
அந்தச் சட்டமானது, அரசமைப்பு ரீதியாக வேலை செய்யும் உரிமையை மக்களுக்கு அளித்தது. அந்தச் சட்டம், பஞ்சாயத்து அமைப்புகளை வலுப்படுத்தியது. முதல்முறையாக தொழிலாளா்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் வரவு வைக்கப்பட்டது. அதனால் லட்சக்கணக்கான குடும்பங்கள் பயனடைந்தன.
அந்தச் சட்டம் தற்போது நீக்கப்பட்டுள்ளது. ஏனெனில் காந்தியுடன் தொடா்புடைய அந்தச் சட்டம் நீண்ட நாள்கள் இருப்பதை பிரதமா் மோடி விரும்பவில்லை. மக்கள் தங்கள் உரிமைகளைப் பெறுவதையும் அவா் விரும்பவில்லை என்றாா் அவா்.
பழைய ஊரக வேலை உறுதித் திட்டத்தையே தொடா்ந்து செயல்படுத்த வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

