விழுப்புரம், ஜன. 8: ""சாலைப் பாதுகாப்பு விதிகளை அனைத்து வகை வாகன ஓட்டுநர்களும் முறையாக பின்பற்ற வேண்டும்'' என்று சாலை பாதுகாப்பு வாரத்தின் 6-ம் நாள் விழாவில் ஆட்சியர் ஆர். பழனிச்சாமி வலியுறுத்தினார்.
விழுப்புரம் புறவழிச்சாலையில் வாகனங்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த ஸ்டிக்கர்கள் ஒட்டி, வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் 6-ம் நாள் விழா வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் ஸ்டிக்கர்கள் ஒட்டியும், பாதுகாப்பு கையேடு வழங்கியும் ஆட்சியர் பேசியது:
நாம் எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும் இன்னமும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய நிலையிலேயே இருந்து வருகிறோம். ஒரு வாரம் கொண்டாடப்படும் இந்த விழா இதோடு முடிந்துவிடக் கூடியதல்ல. தொடர்ந்து கடைபிடிப்பதற்கு நினைவுபடுத்த வேண்டியதற்கான விழாவாகத்தான் இதனை நடத்துகிறோம். சாலைப் பாதுகாப்பு விதிகளை அனைத்து வகை வாகன ஓட்டுநர்களும் எல்லா மக்களும் கடைப்பிடிக்க வேண்டும்.
குறிப்பாக மாணவ பருவத்தினருக்கும், அவர்களின் பள்ளி, கல்லூரி காலத்திலேயே கற்றுக் கொடுத்தால் எதிர்கால மனித சமுதாயம் விபத்தின் மூலம் உயிரிழப்பு ஏற்படாத ஒரு சமுதாயமாக மாறும். அதற்கு போக்குவரத்துத் துறையும், காவல் துறையும் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2010-ம் ஆண்டு பெருமளவு விபத்துக்கள் குறைந்துள்ளன. ஆனால் முந்தைய ஆண்டைவிட மனித உயிர்களின் இழப்பு எண்ணிக்கை குறையவில்லை என்பது வேதனை தரக்கூடியதாக உள்ளது.
சாலை விதிகளை அனைவரும் கடைபிடித்தால் விபத்துக்கள் மூலம் உயிரிழப்புகளை முற்றிலுமாக தடுக்க முடியும். பயணம் என்பது சுகமாக இல்லாமல், சுமையாகவோ அல்லது விபத்தை ஏற்படுத்தக் கூடியதாகவோ இருந்து விடக்கூடாது என்றார்.
நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் கு. ராமலிங்கம் வரவேற்றார், போக்குவரத்துத் துணை ஆணையர் எஸ். முருகானந்தம் முன்னிலை வகித்தார். வட்டார போக்குவரத்து அலுவலக ஆய்வாளர்கள் அருணாசலம், ஜெய்சங்கர், விமலா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு. பழனிசாமி, தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு நிறுவனமான ஜி.எம்.ஆர். அலுவலக நிர்வாகிகள், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளின் உரிமையாளர்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இலவச கண் சிகிச்சை முகாம்
சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இதில் ஊழியர்கள், லைசென்ஸ் பெற வந்தவர்கள், லைசென்ஸ் புதுப்பிக்க வந்தவர்கள், வாகன ஓட்டுநர்கள் என அனைவருக்கும் இலவசமாக கண்பரிசோதனை செய்யப்பட்டது.
இம்முகாமில் வட்டார போக்குவரத்து அலுவலர் கு. ராமலிங்கம், வாகன ஆய்வாளர்கள் ஜெய்சங்கர், அருணாசலம், விமலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சியில்
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு வார விழா அண்மையில் நடைபெற்றது. பேச்சுப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
இவ் விழாவுக்கு, விழுப்புரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பா.ராமலிங்கம் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் ஜோதிலிங்கம் வரவேற்றார்.
சாலைப் பாதுகாப்பு குறித்த கையேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வெளியிட பள்ளியின் முதல்வர் கெச்.இப்ராஹீம் ஹெரீப் பெற்றுக் கொண்டார்.
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசம், வாகன புகை ஆய்வக உரிமையாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் சுரேஷ்குமார், உளுந்தூர்பேட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் எண். 2 அருணாசலம் உள்ளிட்ட பலர் பேசினர்.
சாலைப் பாதுகாப்பு குறித்து ஏ.கே.டி. ஆர்.ஆர். பள்ளி மாணவிகளின் பேச்சுப் போட்டி நடைபெற்றது.
பேச்சுப் போட்டியில் வென்ற ரம்யா, ராதிகா, விஜயன், ராகவேந்திரன் ஆகியோருக்கு பரிசுகளை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வழங்கினார்.
உளுந்தூர்பேட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் பு.துரை நன்றி கூறினார்.