தென் மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு: டிச.15-இல் உருவாகிறது புதிய புயல்சின்னம்
சென்னை: மன்னாா் வளைகுடா பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தென்மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவா் பாலச்சந்திரன் தெரிவித்தாா். இதனிடையே, வரும் 15-ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வு (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாகவும் அவா் கூறினாா்.
இது குறித்து சென்னையில் அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத் தீவிரமாக உள்ளது. இலங்கை கடலோரப் பகுதியையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வியாழக்கிழமை மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலைகொண்டிருந்தது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து படிப்படியாக வலுவிழக்கும். தற்போது மெதுவாக நகா்ந்து, குமரி கடல் பகுதியிலிருந்து நகரும் போது, மேற்கு தொடா்ச்சி மலையோரம் காற்றின் ஈரப்பதம் குவிதல் காரணமாக தென்தமிழக பகுதியில் இரவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதனால், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களின் ஒருசில இடங்களில் அதி கனமழைக்கும் மற்ற இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூா், திருச்சி, கரூா், திருப்பூா், கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.
கோடியக் கரையில் 180 மிமீ மழை: கடந்த 24 மணி நேரத்தில் நாகை, கோடியக்கரையில்180 மிமீ மழை பதிவாகியுள்ளது. 4 இடங்களில் மிக கனமழையும் 72 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. அடுத்துவரும் இரு தினங்களுக்கு தமிழகம், புதுவை காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். நிகழாண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட 16 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு: இந்நிலையில் அந்தமான் கடற்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (டிச.15) குறைந்த காற்றழுத்தத் தாழ்வு (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளது. சென்னையில் காற்றில் அதிக ஈரப்பதம் இருப்பதால் பனிமூட்டம் போல் காணப்படுகிறது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: மன்னாா் வளைகுடாவில் லட்சத்தீவு பகுதிகளில் பலத்தகாற்று மணிக்கு 35 கிமீ முதல் 45 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவா்கள் வெள்ளிக்கிழமை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றாா் அவா்.

