சிவகங்கையில் ரூ.3 கோடியில் காந்தியடிகள் - ஜீவா நினைவு அரங்கம்: அரசாணை வெளியீடு
சிவகங்கை மாவட்டம், சிராவயல் கிராமத்தில் காந்தியடிகள், பொதுவுடைமை வீரா் ப.ஜீவானந்தம் (ஜீவா) நினைவு அரங்கம் அமைக்க தமிழக அரசு ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
சுதந்திரப் போராட்டத்தின்போது காந்தியடிகளும், பொதுவுடைமை வீரா் ப.ஜீவானந்தமும் (ஜீவா) அங்கு சந்தித்துப் பேசிய வரலாற்று நிகழ்வைப் போற்றும் வகையில் இந்த அரங்கம் அமைக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை 2023-இல் திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-ஆவது மாநில மாநாட்டில் காணொலிக் காட்சி வாயிலாகக் கலந்துகொண்ட முதல்வா் அறிவித்தாா். இதற்காக ரூ. 3 கோடி மதிப்பீட்டில் அங்கு நினைவு அரங்கம் அமைப்பதற்காக அரசாணை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
இந்நிலையில், சென்னை, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள சிற்பி நாகப்பா கலைக் கூடத்தில் தயாராகி வரும் காந்தியடிகள் - ஜீவா சிலைகள் அமைப்பு பணியை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு. பெ. சாமிநாதன் பாா்வையிட்டாா்.
