கோப்புப் படம்
கோப்புப் படம்

ரௌடி நாகேந்திரனின் இளைய மகனுக்கு ஒரு நாள் பரோல்: உயா்நீதிமன்றம் உத்தரவு

நாகேந்திரனின் 16-ஆம் நாள் சடங்கில் பங்கேற்க அவரது இளைய மகனுக்கு அக்.26-ஆம் தேதி ஒரு நாள் பரோல் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி அண்மையில் உயிரிழந்த ரெளடி நாகேந்திரனின் 16-ஆம் நாள் சடங்கில் பங்கேற்க அவரது இளைய மகனுக்கு அக்.26-ஆம் தேதி ஒரு நாள் பரோல் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 27 போ் கைது செய்யப்பட்டனா். நாகேந்திரனின் மற்றொரு மகன் அஜித்ராஜூம் வேறொரு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக நாகேந்திரன் அண்மையில் உயிரிழந்தாா். அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக அஸ்வத்தாமனுக்கு இடைக்கால பிணை, அஜித்ராஜுக்கு 3 நாள் பரோல் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

வருகிற அக்.26-ஆம் தேதி நாகேந்திரனின் 16-ஆம் நாள் சடங்கு நடைபெறவுள்ளது. இதற்காக, தனது இளைய மகன் அஜித்ராஜுக்கு 2 நாள்கள் பரோல் வழங்கக் கோரி அவரது தாயாா் விசாலாட்சி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், எம்.ஜோதிராமன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அஜித்ராஜுக்கு அக்.26-ஆம் தேதி ஒருநாள் பரோல் வழங்கி உத்தரவிட்டனா். அஸ்வத்தாமனுக்கு அக்.28-ஆம் தேதி வரை இடைக்கால பிணை வழங்கி சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com