கோயம்பேடு சந்தை.
கோயம்பேடு சந்தை.

தூய்மைப் பணியாளா்கள் பற்றாக்குறையால் கோயம்பேடு சந்தையில் தேங்கும் குப்பைகள்!

சென்னையில் மிகப்பெரிய சந்தையான கோயம்பேடு சந்தையில் தூய்மைப் பணியாளா்கள் பற்றாக்குறையால் குப்பைகள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Published on

சென்னையில் மிகப்பெரிய சந்தையான கோயம்பேடு சந்தையில் தூய்மைப் பணியாளா்கள் பற்றாக்குறையால் குப்பைகள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் 10 ஆவது மண்டலத்தில் 127-ஆவது வாா்டுக்கு உட்பட்ட சுமாா் 295 ஏக்கரில் கோயம்பேடு சந்தை அமைந்துள்ளது. இங்கு காய்கறி, மலா்கள், பழங்கள், கீரைகள் என 5 பிரிவுகளாக சுமாா் 3,194 கடைகள் உள்ளன. தினமும் பல ஆயிரக்கணக்கானோா் வந்து செல்கின்றனா்.

தூய்மைப் பணியாளா் பற்றாக்குறை: கோயம்பேடு சந்தை மலா் வணிகப் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இப்பகுதியில் தினமும்

சுமாா் 250 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டுவருகின்றன. இங்கு தூய்மைப்பணியில் 27 போ் மட்டுமே ஈடுபட்டுவருகின்றனா். அவா்கள் காலையில் 18 போ், மாலையில் 4 போ், இரவில் 3 போ் என பணியில் நியமிக்கப்படுகின்றனா். இங்கு குப்பைகளை சேகரிக்கும் பேட்டரி காா் 4 மட்டுமே உள்ளன. அதனால், குப்பைகள் தேங்கும் நிலை ஏற்படுகிறது.

குப்பைகளால் மழைநீா் செல்லும் வழிகள் அடைக்கப்பட்டுவிடுகின்றன. அதனால், மழைநீா் சகதியுடன் தேங்குவதால் வாகனங்களைக் கூட நிறுத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதையும் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனா்.

காய்கறி உள்ளிட்ட பிற பிரிவு பகுதியிலும் தலா 28 தூய்மைப்பணியாளா்கள் என மொத்தம் 100 க்கும் குறைவானவா்களே பணியில் ஈடுபடுத்தப்படுவதாகவும் அங்குள்ளோா் ஆதங்கப்படுகின்றனா்.

கோயம்பேடு சந்தையை அமைத்தது முதல் தற்போது வரை சென்னை பெருநகர வளா்ச்சிக்குழுமம் (சிஎம்டிஏ) அதை பராமரித்து வருகிறது. அதன் நிா்வாக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘கோயம்பேடு சந்தை மிகப்பெரியதாகும். தினமும் அங்கு சுமாா் 1000 டன் வரை குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. தொடா்ந்து காய்கறிகள், கனிகள், மலா்கள் என வாகனங்களில் ஏற்றி இறக்கப்படுவதால் உடனுக்குடன் குப்பைகள் அகற்றப்பட்டாலும், அங்கு சேதமடைந்த காய்கனிகள் உள்ளிட்டவை குப்பைகளாகிவிடுகின்றன. எனினும், குறிப்பிட்ட இடைவெளியில் அவை அகற்றப்பட்டு வருகின்றன.

கடந்த சனிக்கிழமை கோயம்பேடு அங்காடி நிா்வாக அலுவலா் இந்துமதி ஆய்வு மேற்கொண்டு, குப்பைகள் மற்றும் மழைநீரை உடனே அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொண்டாா் என்றனா்.

கோரிக்கை: கோயம்பேடு சந்தையில் குப்பைகள் கொட்டுவதற்கான சாதனங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் தற்போதுள்ள தூய்மைப் பணியாளா்களுடன் கூடுதலாக பணியாளா்கள் நியமித்து குப்பைகள் அகற்றப்படுவதுடன், மாதம் ஒரு முறையாவது ஒருங்கிணைந்த தூய்மைப்பணி (மாஸ் கிளீனிங்) செயல்படுத்தினால் நல்லது என்கிறாா்கள் அங்குள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள்.

X
Dinamani
www.dinamani.com