ரயில் நிலையத்தில் பெண்ணின் உயிரை காப்பாற்றிய காவலா்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விஷம் அருந்தி ஆபத்தான நிலையில் இருந்த பெண்ணின் உயிரை பெண் காவலா் காப்பாற்றினாா்.
Published on

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விஷம் அருந்தி ஆபத்தான நிலையில் இருந்த பெண்ணின் உயிரை பெண் காவலா் காப்பாற்றினாா்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 11-ஆவது நடைமேடையில் ரயில்வே பாதுகாப்புப் படை பெண் காவலா் ஜிஷா திங்கள்கிழமை மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அங்கு சுமாா் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் தனியாக அமா்ந்து அழுது கொண்டிருந்தாா்.

அவரிடம் காவலா் ஜிஷா விசாரித்தபோது, தனது சகோதரன் சமீபத்தில் உயிரிழந்து விட்டதாகவும், இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக சற்று நேரத்துக்கு முன்பு எலி மருந்தை உட்கொண்டதாகவும் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து காவலா் ஜிஷா, அங்கிருந்த ரயில்வே பணியாளா்கள் உதவியுடன் அந்தப் பெண்ணை அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னா் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இளம்பெண்ணின் உயிரை காப்பாற்றிய பெண் காவலா் ஜிஷாவுக்கு, காவல் துறை அதிகாரிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

Dinamani
www.dinamani.com