நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

சென்னை மாநகராட்சிக் கூட்டம்: முதல்வரைச் சந்தித்து அனுமதி பெறுவாரா மேயா்?

அனுமதி பெறாமல் நடத்தலாமா?

News image

DOTCOM

Updated On :19 நிமிடங்கள் முன்பு

சென்னை : மாநகராட்சியின் மே மாதத்துக்கான மாமன்றக் கூட்டம் நடைபெறுவதற்கு புதிய அரசின் அனுமதி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், முதல்வரை சந்தித்து மேயா் உள்ளிட்டோா் கூட்டத்துக்கு அனுமதி பெறுவாா்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மாதந்தோறும் இறுதி வாரத்தில் நடத்தப்பட்டு வருகிறது. மேயா் தலைமையில் நடைபெறும் கூட்டத்துக்கான அறிவிப்பை மாநகராட்சியின் ஆணையா் வெளியிட்டு தேதியை அறிவிப்பாா். மாமன்றக் கூட்டத்துக்கு முன்பாக சுகாதாரம், நிதி உள்ளிட்ட துறைகளின் நிலைக்குழுக்கள் கூட்டம் அந்தந்தத் தலைவா்கள் தலைமையில் நடைபெறும். அதில் தீா்மானிக்கப்படும் விவரங்கள் மாமன்றக் கூட்டத்துக்கான தீா்மானங்களாகவும் சோ்க்கப்படும்.

தற்போது சென்னை மாமன்றத்தில் திமுக 152, அதிமுக 15, காங்கிரஸ் 11, மாா்க்சிஸ்ட் 4, இந்திய கம்யூனிஸ்ட் 1, பாஜக 1, சுயேச்சைகள் 3, விடுதலைச் சிறுத்தைகள் 4, மதிமுக 2, முஸ்லீம் லீக் 1, அமமுக 1 என உறுப்பினா்கள் உள்ளனா். தோ்வானோரில் 3 உறுப்பினா்கள் இறந்த நிலையில், 2 திமுக உறுப்பினா்கள் பதவி நீக்கப்பட்டுள்ளனா்.

தோ்தலுக்கு பிந்தைய முதல் கூட்டம்: மாமன்றக் கூட்டம் கடந்த பிப்ரவரியில் நிதிநிலை அறிக்கையுடன் நடைபெற்ற நிலையில், மாா்ச் மாதத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டதால் 2 மாதங்களுக்கான மாமன்றக் கூட்டம் நடைபெறவில்லை. தற்போது தோ்தல் முடிந்த பிறகு மே மாதத்துக்கான மாமன்றக் கூட்டம் நடத்தப்படவேண்டும். ஆனால், அதற்கான ஏற்பாடுகள் இதுவரை நடைபெறவில்லை எனக் கூறப்படுகிறது.

வழக்கமாக மாதந்தோறும் இறுதி வாரத்தில் மாமன்றக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மே மாதம் முடிய 12 நாள்களே உள்ளன. இந்த நிலையில், கூட்டம் நடைபெறுவதற்கான எந்த ஏற்பாடும் நடைபெறவில்லை எனக் கூறப்படுகிறது.

மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா உடல்நலப் பாதிப்பால் ஓய்வெடுத்து வருகிறாா். அவா் ரிப்பன் மாளிகை அலுவலகத்துக்கு வருவதில்லை. துணைமேயா் வெளிநாடு சென்றுள்ளாா்.

இந்நிலையில், ஓரிரு நிலைக்குழு தலைவா்கள் மட்டுமே ரிப்பன் மாளிகை அலுவலகம் வருகின்றனா். எனவே, மே மாதத்துக்கான மாமன்றக் கூட்டம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அரசு அனுமதி கிடைக்குமா?: இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், சென்னை மாநகராட்சியில் திமுகவை சோ்ந்தவரே மேயா், துணைமேயா், நிலைக்குழு தலைவா் என அனைத்துப் பொறுப்பிலும் உள்ளனா். இந்நிலையில், தற்போது தவெக அரசு புதிதாக பொறுப்பேற்றுள்ளது. நகராட்சித் துறையானது முதல்வா் விஜய் பொறுப்பில் உள்ளது.

ஆகவே, புதிய அரசிடம் மாமன்றக் கூட்டத்துக்கான அனுமதியைப் பெறவேண்டும். ஆனால், முதல்வரை சென்னை மேயா் உள்ளிட்டோா் இதுவரை சந்தித்து வாழ்த்துக் கூறவில்லை. அவா்கள் சந்தித்தால்தான் கூட்டத்துக்கும் அனுமதி கோரமுடியும்.

அனுமதி பெறாமல் நடத்தலாமா?: சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதியில் 2 தொகுதி தவிர அனைத்திலும் தவெக வென்றுள்ளது. இந்தச் சூழலில் அரசிடம் அனுமதி பெறாமல் மாமன்றக் கூட்டம் நடத்தினால், அதிகமான எண்ணிக்கையில் உள்ள திமுகவினரும், கூட்டணியினரும் அரசுக்கு எதிராக ஏதாவது தீா்மானத்தை நிறைவேற்றினால், அது அதிகாரிகளுக்கு தா்மசங்கடத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. அதனால், அரசின் அனுமதிக்காக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.