திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா பிரம்மோற்சவ தேரோட்டம்

செங்கல்பட்டு மாவட்டம், திருவிடந்தை ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் சித்திரைப்பெருவிழா பிரம்மோற்சவத்தையொட்டி வெள்ளிக்கிழமை தேர் திருவிழா நடைபெற்றது. 
திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா பிரம்மோற்சவ தேரோட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், திருவிடந்தை ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் சித்திரைப்பெருவிழா பிரம்மோற்சவத்தையொட்டி வெள்ளிக்கிழமை தேர் திருவிழா நடைபெற்றது. 

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டம், திருவிடந்தை  நித்யகல்யாண பெருமாள் கோயில் உள்ளது.  இக்கோயிலில் பெருமாளுக்கு 365 நாட்களும் திருமணம் நடைபெறுவதாக ஐதீகம் உள்ளது. அதனால் இந்த ஸ்ரீ நித்ய கல்யாண பெருமாள் கோயில் பரிகார ஸ்தலமாக விளங்குவதால் நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் திருமணத் தடை நீங்க நித்ய கல்யாண பெருமாளுக்கு இரண்டு மாலைகள் வாங்கி வந்து லட்சுமி நித்ய கல்யாண பெருமாளுக்கு அணிவித்து ஒரு மாலையை பரிகாரம் செய்யும் பக்தருக்கு அளிப்பார்கள். 

அந்த மாலையை திருமணம் ஆகாத பெண்களும், ஆண்களும் அணிந்து கோயிலை வலம் வந்து அந்த மாலையை வீட்டில் வைப்பார்கள். திருமணமானவுடன் தம்பதியராக வந்து அவர்கள் அந்த மாலையை கோயிலில் வைத்து பெருமாளை வழிபடுவார்கள்.

தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் இக்கோயிலுக்கு திருமணத் தடை நீக்க பரிகாரம் செய்வதற்காக வந்துசெல்லும் புகழ்பெற்ற கோயிலாக விளங்கும் இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா பிரம்மோற்சவம் நடைபெறும். 

இந்த ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 25 ஆம் தேதிவரை திருவிழா நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை அங்குரார்ப்பணம் சிறப்பு பூஜைகளும், சனிக்கிழமை துவாஜ ரோகணம் கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்றத்தையொட்டி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தில் எழுந்தருள கொடிமரம் பூஜைகளுடன் கொடியேற்றம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து  தினந்தோறும் காலை பகல் உற்சவம், இரவு உற்சவமும் சிறப்பு அலங்காரத்தில் இருவேளையும் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. 7 ஆம் நாள் உற்சவமாக வெள்ளிக்கிழமை திருத்தேரோட்டம நடைபெற்றது. 

இவ்விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து உற்சவமூர்த்தி பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சிறப்பு அலங்காரத்தில் கோயிலில் முறைப்பாட்டு தயார் நிலையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சாமி எழுந்தருள தேரின் வடம் பிடித்து இழுக்க தேர் புறப்பட்டது.  

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமியை தரிசனம் செய்தனர். வழிநெடுகிலும் ஆன்மீக பக்தர்கள் அன்னதானங்கள், குளிர்பானங்கள், மோர், தண்ணீர் வழங்கினர். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ஆ.குமரன் திருக்கோயில் பணியாளர்கள், தக்கார் மற்றும் உதவி ஆணையர் முத்து ரத்தினவேல், திருவிழா உபயதாரர்கள், திருவிடந்தை தெற்கு பட்டு கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com