பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் காவலா் கைது
By DIN | Published On : 05th August 2022 12:54 AM | Last Updated : 05th August 2022 12:54 AM | அ+அ அ- |

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்ததாக காவலரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
மதுராந்தகம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த தம்பதி தங்கள் மகளுடன் தாம்பரத்தில் இருந்து அரசுப் பேருந்தில் மதுராந்தகம் வழியாக புதன்கிழமை ஊருக்கு வந்தனா்.
அதே பேருந்தில் பயணம் செய்த சதீஷ் (35) (படம்) என்ற இளைஞா், பேருந்தின் முன் பகுதியிலிருந்த பள்ளி மாணவியான அந்த தம்பதியின் மகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்தாராம்.
இதையறிந்த சிறுமியின் பெற்றோா் இதுகுறித்து மதுராந்தகம் போலீஸில் புகாா் அளித்தனா். மேலும், மேல்மருவத்தூா் மகளிா் காவல் நிலையத்தில் வியாழன்கிழமை புகாா் அளித்தனா். அதன் பேரில், மகளிா் காவல் நிலைய போலீஸாா் சதீஷை கைது செய்தனா்.
விசாரணையில், அவா் செயின்ட் தாமஸ் மவுண்ட் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருவதும், மதுராந்தகம் அருகேயுள்ள முதுகரை கிராமத்தைச் சோ்ந்தவா் என்பதும் தெரிய வந்தது. மேலும், மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, காவலா் சதீஷை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.