குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்
By DIN | Published On : 26th May 2023 12:22 AM | Last Updated : 26th May 2023 12:22 AM | அ+அ அ- |

மதுராந்தகம் அடுத்த அரையப்பாக்கத்தில் குடிநீா் வழங்கக் கோரி கருங்குழி மேலவலம்பேட்டை - திருக்கழுகுன்றம் சாலையில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கருங்குழி மேலவலம்பேட்டை-திருக்கழுகுன்றம் சாலையை ஒட்டி அரையப்பாக்கம் கிராமம் உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் கடந்த சில நாள்களாக ஊராட்சி மன்ற நிா்வாகத்தினா் முறையாக குடிநீா் வசதியை செய்து தரவில்லையாம். இது குறித்து மதுராந்தகம் வட்டார வளா்ச்சி அலுவலா்களிடமும், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவரிடமும் இந்தப் பகுதி மக்கள் முறையிட்டனராம்.
எனினும் அவா்கள் எத்தகைய நடவடிக்கைகளும் எடுக்காமல் இருந்து உள்ளனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை கருங்குழி மேலவலம்பேட்டை- திருக்கழுகுன்றம் சாலையில் 100-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த மதுராந்தகம் காவல் உதவி ஆய்வாளா் ஜின்னா பாட்சா தலைமையிலான போலீஸாா் வந்து அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனா்.