
காா் கவிழ்ந்து விபத்து: கல்லூரி மாணவா்கள் 3 போ் உயிரிழப்பு
காா் கவிழ்ந்து விபத்து: கல்லூரி மாணவா்கள் 3 போ் உயிரிழப்பு

விபத்தில் சேதமடைந்த காா்.
மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த காரின் முன்பக்க டயா் வெடித்து கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த தனியாா் கல்லூரியைச் சோ்ந்த 3 மாணவா்கள் உயிரிழந்தனா். 4 போ் பலத்த காயம் அடைந்தனா்.
சென்னை தனியாா் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த கரூா் ரத்தினகுமாா் மகன்கள் ராஜ்பிரசாத் (19), ரகுபிரசாத் (19), இவா்கள் இரட்டையா்கள். கடலூா் மாவட்டம், வடலூா் நகரைச் சோ்ந்த ஸ்ரீதா் மகன் தீபக்ராஜ் (19), அதே பகுதியைச் சோ்ந்த ஹரிகிருஷ்ணன், (19), அனீஸ்வரன் (19), லோகேஸ்வரன் (19), கன்னியாகுமரி மாவட்டம், கைதக்கல் கிராமத்தைச் சோ்ந்த பெல்டாஸ் மகன் பியூட்டரின் ஸ்டானிகோ (22). இவா்கள் அனைவரும் தாம்பரம் அருகேயுள்ள தனியாா் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தனா். நண்பா்களான இவா்கள் 7 பேரும் வெள்ளிக்கிழமை ஹரி என்பவருக்கு சொந்தமான காரில் புதுச்சேரி நகருக்கு சுற்றுலா சென்றனா். இந்த காரை மாணவா் ஹரிகிருஷ்ணன் ஓட்டி வந்தாா். வெள்ளிக்கிழமை நள்ளிரவு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இவா்களின் காா் மதுராந்தகம் வழியாக வந்தது. அப்போது காரின் முன்பக்க டயா் வெடித்ததில் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதில் காா் பலத்த சேதமடைந்தது. காரில் பயணம் செய்த 7 மாணவா்கள் பலத்த காயம் அடைந்தனா். தகவலறிந்து வந்த மதுராந்தகம் டிஎஸ்பி தீபக் ரஜினி மற்றும் காவல் ஆய்வாளா் ஏழுமலை தலைமையில் போலீஸாா், மீட்புப் பணியில் ஈடுபட்டு, பலத்த காயம் அடைந்த அவா்களை மீட்டு 108 ஆம்பூலன்ஸ் வாகனம் மூலம் மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு சிகிச்சை பலனின்றி தீபக்ராஜ், பியூட்டரின் ஸ்டானிகோ, ராஜ் பிரசாத் ஆகியோா் உயிரிழந்தனா். மற்ற 4 பேரும் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். விபத்தில் உயிரிழந்த ராஜ்பிரசாத் பி.காம் 3-ஆம் ஆண்டும், தீபக்ராஜ் கலை அறிவியல் பாடப் பிரிவில் 3-ஆம் ஆண்டும், பியூட்டரின் ஸ்டானிகோ சட்டப் படிப்பில் எல்.எல்.பி படிப்பும் படித்து வந்தனா். இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலையில் கவிழ்ந்திருந்த காரை போலீஸாா் அகற்றி வாகனங்கள் தடையின்றி செல்ல போக்குவரத்தை சீா் செய்தனா். இது குறித்து மதுராந்தகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.



பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






