பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

எம்.எல்.ஏ.க்கள் "ஜிம்'மில் அன்னியர்கள்!

சென்னை, ஆக. 3: சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ரூ. 16 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள நவீன உடற்பயிற்சிக் கூடத்துக்கு எம்.எல்.ஏ.க்கள் தினமும் வருவதில்லை. இதைப் பயன்படுத்தி மற்றவர்கள் வந்து செல்கி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:59 am

கே.பாலசுப்பிரமணியன்

சென்னை, ஆக. 3: சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ரூ. 16 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள நவீன உடற்பயிற்சிக் கூடத்துக்கு எம்.எல்.ஏ.க்கள் தினமும் வருவதில்லை. இதைப் பயன்படுத்தி மற்றவர்கள் வந்து செல்கின்றனர்.

  சட்டப் பேரவை உறுப்பினர் குடியிருப்பு "சி' பிளாக்கில் சுமார் 1,350 சதுர அடி பரப்பில் இந்த நவீன உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

  பொலிவற்றுக் கிடந்த இரண்டு அறைகள் ரூ.8 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டன. ரூ.8 லட்சம் செலவில் நவீன உபகரணங்கள் வாங்கப்பட்டன.

  எம்.எல்.ஏ.க்களுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் இருந்து பயிற்சியாளரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

  இந்த உடற்பயிற்சிக் கூடத்தை கடந்த மாதம் 16-ம் தேதி துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நவீன இயந்திரங்களில் உடற்பயிற்சியும் செய்து காண்பித்தார். அப்போது அவருடன் அமைச்சர்கள், திமுக எம்.எல்.ஏ.க்கள் என பலரும் வந்தனர்.

  உடற்பயிற்சிக் கூடம் எப்போதும் நிரம்பி வழியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு நேர்மாறாக எம்.எல்.ஏ.க்கள் இப்போது உடற்பயிற்சிக் கூடத்தை எட்டிப் பார்ப்பது கூட கிடையாது.

  தினமும் காலை 5 மணி முதல் 9 மணி வரையிலும், மாலையில் 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் உடற்பயிற்சிக் கூடம் திறந்து இருக்கிறது. இதில், காலை, மாலை என தலா ஒரு மணி நேரம் பெண் எம்.எல்.ஏ.க்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

  யாரும் வரவில்லை...  சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த உடற்பயிற்சிக் கூடத்துக்கு எம்.எல்.ஏ.க்கள் யாரும் தினமும் வருவதில்லை. சட்டப் பேரவை கூட்டத் தொடர் நடந்தாலும் 10 பேர் வரைதான் வருகின்றனர்.

  "தினமும் நடைப் பயிற்சி செய்வது எனக்கு வழக்கம். அதையொட்டி, சென்னை வரும் நேரங்களில் கண்டிப்பாக உடற்பயிற்சிக் கூடத்துக்குச் செல்வேன். பட்ஜெட் கூட்டத் தொடர் முடியும் நிலையில் உடற்பயிற்சிக் கூடம் தொடங்கப்பட்டுள்ளது. இதனால், எம்.எல்.ஏ.க்கள் பயன்பெற முடியாத நிலையில் உள்ளது. தொகுதிகளுக்குச் செல்ல வேண்டியிருப்பதால் உடற்பயிற்சிக் கூடத்தை முழுமையாகப் பயன்படுத்த முடியவில்லை' என்கிறார் அதிமுக எம்.எல்.ஏ. ஆர்.டி.கணேசன்.

  சென்னையைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் யாரும் இந்த உடற்பயிற்சிக் கூடத்தை எட்டிப் பார்ப்பதில்லை.

  பெண் எம்.எல்.ஏ.க்களைப் பொறுத்தவரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. பத்மாவதி மட்டும் உடற்பயிற்சிக் கூடத்துக்கு வருகிறார். வேறு பெண் எம்.எல்.ஏ.க்கள் வருவதில்லை.

  அன்னியர்களுக்கு அனுமதி...  நவீன உடற்பயிற்சிக் கூடத்தில் எம்.எல்.ஏ.க்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று சட்டப் பேரவைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். ஆனால், அதை மீறும் வகையில் அன்னியர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

  "சென்னையில் இதுபோன்ற நவீன உடற்பயிற்சிக் கூடத்துக்குச் சென்றால் மாதத்துக்கு ரூ.1,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அரசினர் தோட்டத்தில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் இலவசமாக அனுமதிக்கப்படுகிறது. எம்.எல்.ஏ.க்கள் யாரும் வராததைப் பயன்படுத்தி அவர்களது பெயரைச் சொல்லி அன்னியர்கள் உள்ளே நுழைகின்றனர். இதற்கு அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவு போதும் என்பதால் யாரும் கண்டுகொள்வதில்லை. மக்களின் பணம் இப்படியும் வீணாகிறது' என்கின்றனர் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.