மின் இணைப்பு இல்லாத 550 குடியிருப்புகள்
சென்னை, ஆக. 7: சென்னையில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கும் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. அதில் வசிப்பவர்கள் அருகில் உள்ள கு


சென்னை, ஆக. 7: சென்னையில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கும் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
அதில் வசிப்பவர்கள் அருகில் உள்ள குடியிருப்புகளில் இருந்து உரிய அனுமதியின்றி, மாதத்துக்கு ரூ. 200 செலுத்தி மின்சாரம் பெற்று வருகின்றனர்.
சென்னை காசிமேடு ஜி.எம்.பேட்டையில் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு உள்ளது. 552 குடியிருப்புகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அனைவரும் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.
நீண்ட காலமாக திறக்கப்படாமல் இருந்த இந்தக் குடியிருப்புகளை, கடந்த 2007-ம் ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய அமைச்சரும், இப்போதைய துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
குடியிருப்புகள் திறக்கப்பட்டது முதல் இதுவரை அவற்றுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. அதே சமயம், மின்சாரம் கொடுப்பதற்கான அனைத்து வசதிகளும் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், மின் இணைப்புதான் தரப்படவில்லை. இதனால், இருளில் தவித்து வந்த மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள குடியிருப்புகளில் இருந்து மின்சாரத்தைப் பெறத் தொடங்கினர்.
""நீளமான வயர்களைப் பயன்படுத்தி மின்சார இணைப்பை நாங்களே கொடுத்துக் கொள்கிறோம். இதற்காக, சம்பந்தப்பட்ட குடியிருப்பைச் சேர்ந்தவர்களுக்கு மாதத்துக்கு ரூ. 200 முதல் ரூ. 250 வரை கொடுக்கிறோம். இப்படிக் கொடுத்தும் மின்சாரம் சீராகக் கிடைப்பதில்லை. மின்சாரம் தருகின்றவர்கள் மின் இணைப்பை அடிக்கடித் துண்டித்து விடுகின்றனர். இதைப் பற்றி விளக்கம் கேட்டால் மின்சாரமே தர முடியாது என மறுக்கின்றனர்'' என்றார் பன்னீர் என்ற மீனவர்.
என்ன பிரச்னை? குடியிருப்புகளுக்கு 2 ஆண்டுகளுக்கும் மேலாக மின் இணைப்பு வழங்குவதில் குடிசை மாற்று வாரியத்துக்கும், மின்சார வாரியத்துக்கும் இடையே உள்ள பிரச்னைதான் காரணம் எனக் கூறப்படுகிறது.
""குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளுக்கு மின்சாரம் வழங்க, அந்த வாரியத்திடம் இருந்து தடையில்லாச் சான்று பெற்றாலே போதும். வேறு எதுவும் தேவையில்லை. மின் இணைப்பு கொடுத்து விடுவோம்'' என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குடிசை மாற்று வாரியத்திடம் பணம் கேட்கப்படுவதாகவும், அதைத் தர மறுப்பதாலும்தான் மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
""இங்குள்ள குடியிருப்புகளுக்கு மாத வாடகையாக ரூ. 200 வரை வசூலிக்கப்படுகிறது. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு உரியவர்களிடம் அது ஒப்படைக்கப்படும். குடியிருப்புவாசிகள் உரிய முறையில் வாடகைப் பணத்தைச் செலுத்துவதில் அக்கறை காட்டுவதில்லை. இதனால், தடையில்லாச் சான்றிதழ் வழங்கத் தாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். பெரும்பாலானோர் பணம் கட்டுகின்றனர். அவர்களுக்கு மட்டுமாவது மின் இணைப்பு தர வேண்டும்'' என்று மீனவ நலச் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
அனுமதியின்றி மின்சாரம் எடுக்க பயன்படுத்தப்படும் வயர்கள் மழைக் காலங்களில் அறுந்து விழும்போது விபத்துகளும் ஏற்படுகின்றன எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
எனவே, "அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க, முறையாக மின் இணைப்பு உடனடியாக வழங்கப்பட வேண்டும்' என்று குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...