ஆவின் நெய், வெண்ணெய்க்கு தட்டுப்பாடு
சென்னை, அக். 7: சென்னையில் ஆவின் வெண்ணெய் மற்றும் நெய்க்கு கடும் தட்டுப்பாடு உள்ளது. வெண்ணெய், நெய் வாங்க ஆவின் விற்பனை நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. மேற்கு மாம்பலம், தியாகராய நகர், திருவல்லி


சென்னை, அக். 7: சென்னையில் ஆவின் வெண்ணெய் மற்றும் நெய்க்கு கடும் தட்டுப்பாடு உள்ளது. வெண்ணெய், நெய் வாங்க ஆவின் விற்பனை நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
மேற்கு மாம்பலம், தியாகராய நகர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு, திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் அதிகாலை 5.30 மணியில் இருந்து நீண்ட வரிசையில் பெண்கள், முதியவர்கள் காத்திருக்கின்றனர்.
தினமும் "டோக்கன்' முறையில், 20 பேருக்கு மட்டுமே வெண்ணெய், நெய் விநியோகிக்கப்படுவதால் பொதுமக்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
நிறைவான தரம், நியாயமான விலை ஆகிய காரணங்களால் ஆவின் வெண்ணெய், நெய்க்கு எப்போதுமே வரவேற்பு உள்ளது.
விருதுநகர், திருநெல்வேலி, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்ட ஆவின் நிறுவனங்களில் இருந்து மாதந்தோறும் பெருமளவு வெண்ணெய், நெய் கொள்முதல் செய்யப்படுகிறது.
இதன்பின் அம்பத்தூர், மாதவரம், சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் உள்ள ஆவின் பால் பண்ணைகளில் தனி அட்டைப் பெட்டிகளில் "பேக்' செய்யப்பட்டு, இவை விநியோகிக்கப்படுகின்றன. இவற்றின் விலை விவரம்:
ஆவின் வெண்ணெய் 500 கிராம் -ரூ. 185, நெய் (பாட்டில்)- 200 மில்லி ரூ. 45; நெய் 500 மில்லி- ரூ. 100; நெய் ஒரு லிட்டர்- ரூ. 195, டின் நெய் 1 லிட்டர்- ரூ. 200.
நறுமணப் பால், "டிலைட்' பால் உள்ளிட்டவற்றுக்கும் தொடர்ந்து தட்டுப்பாடு நிலவுகிறது.
ஆவின் இனிப்புகள் அறிமுகம்: இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு சில இனிப்பு வகைகளை ஆவின் நிறுவனமே தயாரித்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 250 கிராம் எடையுள்ள இந்த இனிப்பு வகைகளின் விலை விவரம்:
உலர் குலோப் ஜாமூன்- ரூ. 60, பிஸ்தா பர்ஃபி- ரூ. 60, சாக்லேட் பர்ஃபி- ரூ. 60, நட்-அல்வா- ரூ. 80, முந்திரி அல்வா- ரூ. 90, பாதாம் அல்வா ரூ. 100.
இனிப்புகளின் கலவை 550 கிராம் (அசார்ட்டட்)- ரூ. 125.
பால்கோவா 100 கிராம்- ரூ. 20; 200 கிராம் ரூ. 50; 500 கிராம் ரூ. 90, பேரீச்சை பால்கோவா 100 கிராம் -ரூ. 25; மைசூர் பாகு 250 கிராம்- ரூ. 45, ஸ்பெஷல் குலோப் ஜாமூன் 250 கிராம்- ரூ. 45.
குறைந்த கொழுப்புச் சத்துள்ள கேக் வகைகளின் விலை (250 கிராம்): ஸ்பெஷல் கேக்- ரூ. 70, முந்திரி கேக்- ரூ. 100, பாதாம் கேக்- ரூ. 110, பிஸ்தா கேக்- ரூ. 120.
இது குறித்து ஆவின் நிறுவன அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:
கூடுதலாக வெண்ணெய், நெய் விநியோகம்... சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்ட ஆவின் நிறுவனங்களில் இருந்துதான் அதிக அளவு நெய், வெண்ணெய் கொள்முதல் செய்யப்படுகிறது.
சென்னையில் உள்ள 141 ஆவின் பாலகங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையங்கள் மூலம் தினமும் வெண்ணெய், நெய் தலா 1,500 கிலோ விநியோகிக்கப்படுகிறது.
ஆவின் வெண்ணெய், நெய் விலையை விட, வெளிச்சந்தையில் இவற்றின் விலை கிலோவுக்கு ரூ. 40 முதல் ரூ. 100 வரை அதிகமாக உள்ளது. இதனாலும் ஆவின் நெய், வெண்ணெய்க்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.
தீபாவளிக்கு 7 நாள்களுக்கு முன்னதாக தேவையை ஓரளவு சமாளிக்கும் வகையில், கூடுதலாக வெண்ணெய், நெய் விநியோகிக்கப்படும்.
ஆவின் வெண்ணெய், நெய் பொதுமக்களுக்கு மட்டுமே விநியோகிக்கப்படும். கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் இந்த ஆண்டு நெய் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது என்றனர் ஆவின் நிறுவன அதிகாரிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...