ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டும் அறிமுகம் செய்யப்படாத புதிய ரயில்கள்

சென்னை, ஆக. 4: ரயில்வே பட்ஜெட்டில்  தமிழகத்துக்கென அறிவிக்கப்பட்ட 7 புதிய விரைவு ரயில்களின் சேவையை தொடங்குவதில் தேக்கநிலை நீடிக்கிறது.  இந்த ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் (2010-11) சென்னை சென்ட்ரல் -

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 8:01 am

ச. குமரன்

சென்னை, ஆக. 4: ரயில்வே பட்ஜெட்டில்  தமிழகத்துக்கென அறிவிக்கப்பட்ட 7 புதிய விரைவு ரயில்களின் சேவையை தொடங்குவதில் தேக்கநிலை நீடிக்கிறது.

 இந்த ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் (2010-11) சென்னை சென்ட்ரல் - கோவை இடையேயான துரந்தோ விரைவு ரயில் உள்ளிட்ட 6 ரயில்களின் சேவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், 5 மாதங்களுக்கும் மேல் ஆகியும் இதுவரை புதிய ரயில்களின் சேவை இன்னும் தொடங்கப்படாததால் பயணிகள் ஏமாற்றம்  அடைந்துள்ளனர்.

 சென்னை சென்ட்ரல் - ஹஸ்ரத் நிஜாமுதீன் இடையே துரந்தோ விரைவு ரயில் சேவை 21.9.2009-ல் தொடங்கி வைக்கப்பட்டது. கூடுதல் படுக்கை (பெர்த்) வசதிகளுடன் கூடிய எவர்சில்வர் (ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல்) தகடுகளால் வேயப்பட்ட இந்த துரந்தோ அதிவிரைவு ரயில்கள் இரு முக்கிய நகரங்களுக்கு இடையே நிறுத்தம் இல்லாமல் (பாய்ண்ட் டூ பாய்ண்ட்) இயக்கப்படுகின்றன.

 பல்வேறு வசதிகள் கொண்ட இந்த துரந்தோ ரயில் (2243, 2244) சென்னை சென்ட்ரல் - கோவை இடையே செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தின் இதர 6 நாள்களில் இரு மார்க்கத்திலும் இயக்கத் திட்டமிடப்பட்டன.

 சென்னை சென்ட்ரலில் இருந்து இந்த ரயில் தினமும் காலை 6.50-க்குப் புறப்பட்டு, பிற்பகல் 1.30 மணிக்கு கோவை சென்று சேரும். மறுமார்க்கத்தில் இந்த ரயில் தினமும் கோவையில் இருந்து பிற்பகல் 3.05-க்குப் புறப்பட்டு, இரவு 9.50-மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வந்து சேரும் என்று அறிவிக்கப்பட்டது.

 கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு இந்த ரயில் சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று பயணிகளிடையே மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது.

 துரந்தோ ரயிலுக்கான பெட்டிகள் கபூர்தலா மற்றும் பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலைகளில்  தயாரிக்கப்படுகின்றன.   பயணிகளின் சொகுசான பயணத்துக்காக ஏர்-ஸ்பிரிங்குகள் பொருத்தப்பட்டு, சாதாரண ரயில் பெட்டிகளை விட 1.5 டன் எடை குறைவாகவும் பல்வேறு நவீன வசதிகளுடன் இந்தப் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. எனினும், இந்தப் பணிகள் முழுமையாக நிறைவடையாததால், சென்னை - கோவை இடையேயான துரந்தோ விரைவு ரயில் சேவையைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

 இந்நிலையில், சென்னை - கோவை இடையே மட்டும் இந்த ரயில் பாய்ண்ட் டூ பாய்ண்ட் சேவையாக இயக்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில் உள்ள பிரதான வணிக கேந்திரங்களான சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய  நகரங்களில் இந்த ரயில் நிறுத்தப்படாது.   

இதனால், தங்களது பகுதிகள் புறக்கணிக்கப்படுவதாக வணிகர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது அதிருப்தியை ரயில்வே துறைக்கு தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையால் சென்னை - கோவை துரந்தோ ரயில் சேவையைத் தொடங்குவதில் தேக்கநிலை தொடர்கிறது.

 இதேபோல கோவை - திருப்பதி (சேலம், காட்பாடி, பாகலா வழியாக) இன்டர்சிட்டி வாரம் மும்முறை விரைவு ரயில் (2757, 2758), மதுரை - திருப்பதி இடையே  (மயிலாடுதுறை, விழுப்புரம், வேலூர், காட்பாடி வழியாக) வாரம் இருமுறை விரைவு ரயில் (2762, 2761), திருச்சி-மங்களூர் (போத்தனூர் வழியாக) வாராந்திர விரைவு ரயில் (2653, 2654), நாகர்கோவில் - பெங்களூர் வாராந்திர விரைவு ரயில் (6537, 6538), சென்னை சென்ட்ரல்- ஹால்தியா வாராந்திர விரைவு ரயில் (2755, 2756), சென்னை சென்ட்ரல் - நியூ ஜல்பைகுரி வாராந்திர விரைவு ரயில் (2753, 2754) ஆகிய ரயில்களின் சேவை இன்னும் தொடங்கப்படாமல் உள்ளன.

 இதில் மதுரை - திருப்பதி விரைவு ரயில் சேவை, விழுப்புரம்- வேலூர் அகலப்பாதைப் பணிகள் நிறைவடைந்த பின்னர் தொடங்கி வைக்கப்படும் எனத் தெரிகிறது.

 ரயில் பெட்டிகள் பற்றாக்குறை காரணமா: சென்னை-திருப்பதி, திருப்பதி-நெல்லூர், சேலம்-காட்பாடி, கோவை-ஈரோடு இடையே வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நீண்ட தூர புறநகர்  மின் ரயில் சேவையும் ஏட்டுச் சுரைக்காயாக உள்ளது.

இதே போல நெல்லை-திருச்செந்தூர், மயிலாடுதுறை-தஞ்சாவூர் பாசஞ்சர் ரயில்களும் இதுவரை சிறப்பு ரயில்களாக மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

 ரயில் பெட்டிகள் பற்றாக்குறையே இதற்கு முக்கிய காரணம் என்று தெரியவந்துள்ளது. எனினும், அடுத்த சில மாதங்களில் தேவையான ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்ட பின் அடுத்தடுத்து புதிய ரயில் சேவைகள் அறிவிக்கப்பட்டாவாறு தொடங்கி வைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.