தி.நகர் நெரிசலுக்கு அதிகாரிகள் அலட்சியமே காரணம்
சென்னை, டிச. 18: சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரின் அலட்சியம் காரணமாக சென்னை தியாகராய நகர் பகுதி நெரிசல் மேலும் மேலும் அதிகரித்து வருகிறது என்று பொதுமக்கள் குற்றஞ்ச


சென்னை, டிச. 18: சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரின் அலட்சியம் காரணமாக சென்னை தியாகராய நகர் பகுதி நெரிசல் மேலும் மேலும் அதிகரித்து வருகிறது என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தியாகராய நகரில் பெரிய கடைகளின் எண்ணிக்கை அதிகரித்தபோது, வியாபாரமும் அதிகரித்தது. அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பெரிய கடைகளுக்கு வருவோரின் வாகனங்களை சாலையோரம் நிறுத்துவதால் நெரிசல் அதிகமாகிறது. எனவே பனகல் பூங்கா, ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி போன்ற இடங்களில் வாகனங்களை நிறுத்த இடவசதி செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலை சமாளிக்க உஸ்மான் சாலையில் மிக நீளமான மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இது வணிக நிறுவனங்களுக்கு மிகவும் வசதியாக அமைந்துவிட்டது. பாலத்தின் கீழே உள்ள பகுதியை தங்கள் கடைக்கான வாகன நிறுத்தும் இடங்களாக கடைக்காரர்களே பிரித்துக் கொண்டு அறிவிப்புப் பலகையும் வைத்தனர்.
இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டபோது, பாலத்தின் கீழே வாகனங்களை நிறுத்தக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. சில வாரங்களுக்கு மட்டுமே அந்த உத்தரவு அமல் செய்யப்பட்டது.
பாலத்தின் கீழே செல்லும் வாகனங்கள், சாலையின் மறுபுறம் செல்வதற்கு இந்த இடம் வசதியாக இருந்தது. பாதசாரிகளும் எளிதாக சாலையைக் கடந்து செல்ல முடிந்தது.
தீபாவளி பண்டிகை முடிந்த உடனேயே இந்த உத்தரவு பற்றி யாருமே கவலைப்படவில்லை. பாலத்தின் கீழே "வாகனங்களை நிறுத்தக் கூடாது" என்ற அறிவிப்பு பலகையின் அருகிலேயே மோட்டார் சைக்கிள்களும் கார்களும் நிறுத்தப்படுகின்றன.
பாலம் கட்டியதால், பாலத்தின் கீழே பக்கவாட்டில் உள்ள சாலையின் அகலம் குறைந்துவிட்டது. ஓரத்தில் இதுபோல வாகனங்கள் நிறுத்துவதால் பாதசாரிகள் சாலையில் நடக்கும் நிலை. இதனால் பாலத்தின் கீழே வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை இருக்கிறது.
இப்படி விதியை மீறி வாகனங்கள் நிறுத்துவதைத் தடுக்க வேண்டிய காவல் துறையினர் யாருமே அங்கு இல்லையே என்று தேடினால், அருகில் அதே பகுதியில் காவல் துறையின் ஜீப்பும் நின்று கொண்டிருக்கிறது.
கடைக்காரர்களின் வியாபாரத்துக்காக, வாகன நிறுத்துமிடம் குறித்த நீதிமன்ற ஆணையை செயல்படுத்துவதில் காவல் துறையினர் சுணக்கம் காட்டுகின்றனர் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பாலத்தின் கீழே உள்ள பகுதியை சிறுசிறு பூங்கா போல கட்டி பாதசாரிகள் கடக்குமிடம், தேவையான இடங்களில் வாகனங்கள் கடக்குமிடம் என்று இடைவெளி விட்டால், இந்தப் பிரச்னையைத் தீர்க்கலாம் என்று நிபுணர்கள் யோசனை தெரிவிக்கின்றனர்.
பல அடுக்கு மாடிகளாக வணிக வளாகம் கட்டும்போது, வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கித்தான் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் அனுமதியைப் பெற்றிருக்க முடியும். ஆனால் வரைபட அனுமதியில் உள்ள அளவுக்கு வாகன நிறுத்துமிட வசதிகள் அந்தந்தக் கட்டடங்களில் உள்ளதா என்பதை எந்த அதிகாரியும் சோதனை செய்வதில்லை.
பெரிய கடைகள் சிலவற்றுக்கு அருகில் வாகன நிறுத்தும் வளாகங்கள் இருப்பதாகக் கூறினாலும், அவற்றில் வாகனங்களை நிறுத்த அனுமதிப்பதில்லை என வாடிக்கையாளர்கள் புகார் கூறுகின்றனர்.
ஏற்கெனவே கட்டடங்கள் கட்டப்பட்டுவிட்டன என்று காரணம் கூறினால் அதை அதிகாரிகள் ஏற்கக் கூடாது. வெளிநாடுகளில் உள்ளதைப் போல 3 அல்லது 4வது மாடியை வாகன நிறுத்தும் இடமாக மாற்றுமாறு கட்டாயப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
சென்னையில் சில புதிய வணிக வளாகங்களில் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. ஏற்கெனவே உள்ள பல அடுக்கு கொண்ட கடைகளில் இதேபோன்ற வசதியை உருவாகிவிட்டால் சாலையில் வாகனங்கள் நிற்பது தவிர்க்கப்படுவதோடு, போக்குவரத்து நெரிசல் நீங்கிவிடும்.
ஆனால் நெரிசல் இருந்தால்தான் தங்களுக்கு லாபம் என்பதால் காவல் துறையினர் இதை விரும்ப மாட்டார்கள் என்று வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.
பனகல் பூங்கா பகுதியில் கார்களை 6 மணி நேரத்துக்கு நிறுத்த ரூ.5 கட்டணம். ஆனால் சனி, ஞாயிறு கிழமைகளில் ரூ.20 கட்டணம் வசூலிப்பதாக காரில் செல்வோர் புகார் கூறுகின்றனர். இதற்கு ரசீதும் தருவதில்லை. அதற்குப் பதிலாக காரின் கண்ணாடியில் எழுதி வைக்கின்றனர்.
சனி, ஞாயிறுக்கிழமைகளில் அதிக பணம் கட்ட வேண்டியிருப்பதால் இப்படித்தான் வசூல் செய்ய வேண்டியிருக்கிறது என அங்கு பணம் வசூலிப்பவர்கள் கூறுகிறார்கள். இதுபற்றி மாநகராட்சிக்கு தொலைபேசி மூலம் புகார் கூறியபோது, எழுத்துமூலமாக புகார் அனுப்புங்கள் என்று கூறுகின்றனர்.
தாங்களாகவே சென்று சோதனை நடத்தினால்கூட முறைகேடுகளைக் கண்டுபிடிக்க முடியும். என்ன காரணத்தாலோ அவர்கள் தயங்குகிறார்கள்.
பாலத்தின் கீழே உள்ள குறுகிய சாலைகள் எப்போதுமே குண்டும் குழியுமாகவே இருக்கின்றன. மாநகராட்சி நிர்வாகம் அதைச் சரி செய்தால் ஓரளவுக்கு வாகனங்கள் சீக்கிரமாக அந்தப் பகுதியைக் கடந்து செல்லும்.
சாலை பராமரிப்புக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு என்று அறிவிப்பு வந்துள்ளது என்றாலும், நகரின் முக்கிய வர்த்தகப் பகுதியான தியாகராய நகரிலேயே பள்ளங்கள் சரி செய்யப்படாத நிலைதான் இருக்கிறது.
அதிகாரிகள் மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு நடவடிக்கைகள் எடுத்தால் பயனாக இருக்கும் என்று பலரும் கருத்து கூறுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...