

சென்னை, ஜன. 12: புத்தகங்களே எண்ணங்களை மேம்படுத்தும் என்றார் எழுத்தாளர் மெர்வின். சென்னைப் புத்தகக் காட்சியையொட்டி புதன்கிழமை நடைபெற்ற உரை அரங்கில் பங்கேற்ற அவர் பேசியது:
""உலகை எப்போதும் சிந்தனைகளே ஆள்கின்றன. இந்த உண்மை தெரியாதவர்கள்தான் தனிமனிதர்கள் உலகை ஆள்வதாக நம்புவார்கள். வரலாற்று நாயகர்கள் எவரை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள், சாதாரண மனிதர்களாக இருந்த அவர்களை எந்தத் தருணம் சாதனை மனிதர்களாக மாற்றியிருக்கின்றன என்று பாருங்கள். அவர்களிடம் உதித்த - அதுவரை இல்லாத - சிந்தனை மலர்ந்த தருணங்களாகவே இருக்கும்.
வேதம் சொல்கிறது, தேவன் அவனுடைய சாயலாக மனிதனைப் படைத்தான் என்று. அப்படியென்றால், தேவனுக்கு எவ்வளவு ஆற்றல் உண்டோ அவ்வளவு ஆற்றலும் நம்மிடத்திலும் இருக்கின்றன என்பதுதானே அர்த்தம்? அந்த ஆற்றலின் முழு சக்தியையும் நாம் பயன்படுத்தவில்லை என்றுதானே அர்த்தம்?
ஆக, ஆற்றலை வெளிக்கொணர சிந்தனை தேவையாக இருக்கிறது. சிந்திக்க எது தேவையாக இருக்கிறது? புத்தகங்கள்தான் இந்தக் கேள்விக்கு சரியான விடையாகின்றன. ஏனென்றால், ஆற்றலை முழுமையாக வெளிக்கொணர்ந்தவர்களின் வரலாறு இந்த உண்மையைத்தான் தெரிவிக்கிறது.
ஆனால், நாம் என்ன சொல்கிறோம்? புத்தகங்களைப் படிக்க நேரமில்லை என்கிறோம்.
நான் கேட்கிறேன், நாளை அதிகாலை 3 மணிக்கு முப்பதாயிரம் ரூபாய் யாரோ தரப்போகிறார்கள் என்றால் நாம் அப்போது நேரம் இல்லை என்றுதான் சொல்வோமா?
ஆனால், அதையெல்லாம்விட அளவற்ற செல்வத்தைத் தரும் புத்தகங்களைப் படிக்க நேரம் இல்லை என்று கூறுகிறோமே, ஏன்?
நம் சமூகம் எந்தச் செய்தியையுமே எதிர்மறையாகச் சொல்வதையே வழக்கமாகக் கொண்டிருப்பதன் விளைவோ இது என்று எண்ணத் தோன்றுகிறது. படிக்காத காமராஜர்தான் முதல்வரானார் என்று கூறித்தானே நாம் பழக்கப்பட்டிருக்கிறோம்; பள்ளியில் படிக்காவிட்டாலும் தன் அறை முழுவதும் புத்தகங்களால் நிரம்பியிருக்கும் அளவுக்கு தீவிரமான வாசகராக காமராஜர் இருந்தார் என்ற செய்தியை நாம் சொல்லிப் பழகவில்லையே?
புத்தகங்களை வாசியுங்கள், அவை உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கையைத் தரும்; இந்தச் சமூகத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கையைத் தரும்; இந்த உலகத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கையைத் தரும்; உங்களை நீங்களே வழிநடத்தவும் உலகை வழிநடத்தவும் உங்களுக்குப் புத்தகங்கள் வழிகாட்டும்'' என்றார் மெர்வின்.
தொடர்ந்து, கவிஞர் ஜோ மல்லூரி, பேச்சாளர் சோ. சத்தியசீலன் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சிக்கு, பதிப்பாளர் ரவி தமிழ்வாணன் தலைமை வகித்தார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கத் தலைவர் சேது சொக்கலிங்கம், செயற்குழு உறுப்பினர் எஸ். வைரவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.