ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

ஏறுமுகத்தில் வாடகை; ஏழைகளாகும் குடியிருப்புவாசிகள்!

சென்னை, மார்ச் 1: சென்னையில் வீட்டு வாடகை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வாடகை வீடுகளில் வசிப்போர் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி வறுமைக்கோட்டுக்கு கீழ் வலுக்கட்டாயமாகத் தள்ளப்பட்டு வருகின்றனர்.

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:54 am

ச. குமரன்

சென்னை, மார்ச் 1: சென்னையில் வீட்டு வாடகை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வாடகை வீடுகளில் வசிப்போர் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி வறுமைக்கோட்டுக்கு கீழ் வலுக்கட்டாயமாகத் தள்ளப்பட்டு வருகின்றனர்.

 சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வீடுகளின் மொத்த எண்ணிக்கை 6.5 லட்சம். இதில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மாத வாடகைக்கு விடப்பட்டுள்ளன.

 நகரின் மையப் பகுதிகளான மயிலாப்பூர், மந்தைவெளி, திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், ராயப்பேட்டை, அடையாறு, பெசன்ட்நகரில் வாடகைக்கு இடம் கிடைப்பது மிகவும் அரிதாகிவிட்டது.

 இதனால், வாடகை குடியிருப்புவாசிகள் தாம்பரம், அம்பத்தூர், திருவொற்றியூர் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். ஆனால், இப்போது புறநகர்ப் பகுதிகளிலும் வீட்டு வாடகை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகிறது. ஆண்டுதோறும் ரூ. 700 முதல் ரூ. 1,500 வரை வீட்டு வாடகை உயர்த்தப்படுவதால் குடியிருப்புவாசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 வீதிகள்தோறும் அறிவிப்புப்

 பலகைகள்: வேலைவாய்ப்பைத் தேடி வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்னைக்கு வருகின்றனர்.

 இவர்களின் "வாடகை வீடு' தேவையைப் பயன்படுத்தி சென்னை, அதன் புறநகர்ப் பகுதிகளிலும் தரகர்களின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறக்கிறது. சென்னையில் திரும்பிய பக்கமெல்லாம் வீட்டுத் தரகர்களின் செல்போன் எண்கள் ஒட்டப்பட்டுள்ளன.

 அந்த எண்களில் தரகர்களைத் தொடர்பு கொண்டால், அவர்கள் விதிக்கும் நிபந்தனைகளும், கமிஷன் தொகையும் குடியிருப்புவாசிகளை தலைசுற்ற வைக்கிறது.

 விடுதிகளும் "ஹவுஸ்ஃபுல்': பொதுவாக கோடை விடுமுறை தொடங்குவதற்கு 2 மாதங்களுக்கு முன்பு, பொதுமக்களின் வாடகைக்கு "வீடு தேடும் படலம்' தொடங்குகிறது. இவர்களில், தனி நபராக சென்னை வரும் இளைஞர்கள், பெண்கள் விடுதிகளைத் தேடி செல்கின்றனர். ஆனால், பெரும்பாலான விடுதிகள் எப்போதும் நிரம்பி வழிகின்றன. இதனால், சிறு, குறு ஆலைகளில் பணியாற்றும் இளைஞர்கள் விடுதிகளில் இடம் கிடைக்காமல் தவிக்கின்றனர்.

 சாப்ட்வேர் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களில் பணியாற்றுவோர் முதல் தரமான அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இடம் பிடித்துக் கொள்கின்றனர். 4 முதல் 8 பேர் கொண்ட குழுக்களாக வாடகை வீடுகளைத் தேடும் இவர்களுக்கு வீட்டு உரிமையாளர்கள் அதிக முன்னுரிமை அளிக்கின்றனர்.

 ஒவ்வொருவரிடமும் முன்பணமாக குறைந்தபட்சம் ரூ. 15 ஆயிரமும், மாத வாடகையாக ரூ. 8 ஆயிரமும் வசூலிக்கப்படுகிறது. இதனால், ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள், வீட்டு உரிமையாளர்கள், தரகர்கள் "காட்டில் பண மழை' கொட்டுகிறது.

 புறக்கணிக்கப்படும் குடும்பங்கள்: இந்தக் காரணங்களால், 4 பேர் கொண்ட சிறு குடும்பங்களுக்குக்கூட வாடகை வீடு கிடைப்பது அரிதாகி விட்டது. குடும்ப சகிதமாக குடியிருக்க வருவோரிடம் எதிர்பார்க்கும் அளவுக்கு முன்பணமோ, வாடகையோ வசூலிக்க முடியாது என்பதால் வீட்டு உரிமையாளர்கள், அவர்களை புறக்கணித்து விடுகின்றனர்.

 இதனால், குறைந்த, நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கு ஒரு படுக்கை அறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் வாடகை வீடு தேடுவது "பிரம்மப் பிரயத்தனமாக' மாறிவிட்டது. அப்படியே வாடகைக்கு வீடு கிடைத்தாலும், உரிமையாளர் நிர்ணயிக்கும் மின் கட்டணம், பராமரிப்புக் கட்டணம் ஆகியவற்றை எதிர்ப்பின்றி செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

 வருமானத்தில் பெரும்பகுதி வாடகைக்குச் சென்றுவிடுவதால் நடுத்தர வர்க்க குடும்பத்தினர் வறுமைக்கோட்டுக்கு கீழ் தள்ளப்பட்டு வருகின்றனர்.

 உயர்த்தப்படாத வரி- உயரும் வாடகை: மாநகராட்சி சார்பில் வீடுகளுக்கு சதுர அடிக்கு 80 பைசா முதல் ரூ. 2 வரை சொத்து வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக சொத்து வரி விதிப்பில் மாற்றம் இல்லை. ஆனால், வீட்டு வாடகை மட்டும் ஆண்டுதோரும் உயர்த்தப்படுகிறது.

 புதிய கொள்கை வகுக்கப்படுமா? அதிக வாடகை வசூல் தொடர்பாக பொதுப் பணித்துறையின் கட்டடப் பிரிவுக்கு புகார் செய்யலாம். ஆனால், பெரும்பாலும் இது பெயரளவில் மட்டுமே உள்ளது.

 எனவே, வீட்டு வாடகைக் கட்டுப்பாடு குறித்து சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் அரசு புதிய கொள்கைகளை வகுக்க வேண்டும் என்பதே குடியிருப்பு வாசிகளின் கோரிக்கையாகவும், குமுறலாகவும் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.