டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

விவசாய மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தும் பணி

சென்னை, ஜன. 16: விவசாயத்துக்கான இலவச மின் இணைப்புகளுக்கு பயன்பாட்டு அளவீடு மீட்டர்கள் பொருத்தும் பணியில் மின் வாரியம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்தப் பணி இப்போது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக

Updated On :19 செப்டம்பர் 2012, 11:39 pm

சென்னை, ஜன. 16: விவசாயத்துக்கான இலவச மின் இணைப்புகளுக்கு பயன்பாட்டு அளவீடு மீட்டர்கள் பொருத்தும் பணியில் மின் வாரியம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்தப் பணி இப்போது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விவசாயத்துக்கும், குடிசை வீடுகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பல லட்சம் பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர்.

ஆனால், இலவச மின் விநியோகத் திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள மின் இணைப்புகளுக்கு, பயனீட்டு அளவை கணக்கிடும் வகையில் மீட்டர்கள் எதுவும் பொருத்தப்படவில்லை.

2010 ஆகஸ்ட் கணக்கின்படி தமிழகத்தில் 32 லட்சத்து 83 ஆயிரத்து 987 இலவச மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தப்படவில்லை. மீட்டர் பொருத்தப்படாததால், இலவச மின் இணைப்பைப் பெற்றுள்ள சிலர் முறைகேடாக வேறு திட்டங்களுக்கும் இலவச மின்சாரத்தைப் பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.

ஆணையம் கால அவகாசம்: இந்த நிலையில் விவசாயம் மற்றும் குடிசைகளுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச மின் விநியோக இணைப்புகளுக்கு மீட்டர்கள் பொருத்துமாறு மின் வாரியத்தை, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியது.

இந்த இணைப்புகளுக்கு மீட்டர்கள் பொருத்த 2012 செப்டம்பர் 30-ம் தேதி வரை கால அவகாசமும் கொடுத்துள்ளது. ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவுரையைத் தொடர்ந்து மீட்டர் பொருத்துவதற்கான முயற்சிகளை தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொண்டு வருகிறது.

முதல் முயற்சி தோல்வி: இதுகுறித்து மின் வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியது:

ஆணையத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, மீட்டர் பொருத்தும் பணிகளை மின் வாரியம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. வேளாண் துறை மூலம் தனியாரின் உதவியுடன் இலவச இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அந்த முயற்சி பலனளிக்கவில்லை.

மீட்டர் பொருத்துவதற்கு, இலவச இணைப்பு கொடுத்துள்ள பகுதிகளுக்கு உள்ளேயே செல்ல முடியவில்லை. மீட்டர் பொருத்துவதே, கட்டணம் வசூலிக்கத்தான் என்று விவசாயிகளும், குடிசைவாசிகளும் நினைத்துக் கொள்கின்றனர். இதனால் இவர்களின் மின் பயனீட்டு அளவு எவ்வளவு என்பதையே அறிய முடியாத நிலை உள்ளது. எனவே, இப்போது இந்தப் பணி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களும், மாணவர்களும் இந்தப் பணியில் ஈடுபடுவதால், பெரிய அளவில் எதிர்ப்பு இருக்காது என்பதால், பல்கலைக்கழகத்திடம் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக இவர்கள் குறிப்பிட்ட அளவு இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தி, பயனீட்டு அளவைக் குறிப்பிட்டு வாரியத்திடம் வழங்குவர். பின்னர் படிப்படியாக, அனைத்து இலவச இணைப்புகளுக்கும் மீட்டர் பொருத்தப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.