டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

பல்கலை.களிடையே மாறும் நடைமுறைகளால் கல்வித்தரம் பாதிக்கும் அபாயம்

சென்னை, ஜன. 26: பேராசிரியர்கள் தேர்வு, பதவி உயர்வு வழங்குதல், முந்தைய அனுபவத்தை கணக்கில் கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் பல்கலைக்கழகத்துக்கு, பல்கலைக்கழகம் மாறுபடுவதால், பேராசிரியர்களிடையே அதிரு

Updated On :19 செப்டம்பர் 2012, 11:50 pm

சென்னை, ஜன. 26: பேராசிரியர்கள் தேர்வு, பதவி உயர்வு வழங்குதல், முந்தைய அனுபவத்தை கணக்கில் கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் பல்கலைக்கழகத்துக்கு, பல்கலைக்கழகம் மாறுபடுவதால், பேராசிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கல்வித் தரம் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது என்கின்றனர் கல்வியாளர்கள்.

இந்த நடைமுறைகள் தொடர்பாக, அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் பொருந்தும் வகையிலான பொது விதிமுறையை அரசாணையாக தமிழக அரசு விரைவில் வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

பல்கலைக்கழகங்களில் புதிதாக பணியில் சேரும் உதவிப் பேராசிரியர்கள், முதல் இரண்டு ஆண்டுகளுக்கு தகுதிகாண் பருவ (புரோபேஷன்) நிலையில் பணியமர்த்தப்படுவர். அதன் பிறகு பணி நிரந்தரம் செய்யப்படுவர்.

அவ்வாறு பணி நிரந்தரம் செய்யப்படும்போது, அவர்களுடைய முந்தைய பணி அனுபவம் முழுவதையும் கணக்கில் கொண்டு, பணப் பலன்கள் உள்ளிட்ட அனைத்து பலன்களும் அவர்களுக்கு அளிக்கப்படும்.

பதவி உயர்வு நடைமுறையில் மட்டும், அவர்களுடைய முன் அனுபவத்தில் குறிப்பிட்ட ஆண்டுகள் மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இவர்களுக்கு முன்னர் பல்கலைக்கழக கட்டமைப்பில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் உதவிப் பேராசிரியரோ அல்லது பேராசிரியரோ பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக பல்கலைக்கழகங்கள் இதுபோன்ற நடைமுறையை பின்பற்றுகின்றன.

உதாரணமாக, சென்னை பல்கலைக்கழகத்தில் பதவி உயர்வு நடைமுறையின்போது புதிதாக சேர்ந்த உதவிப் பேராசிரியர்களின் முன் அனுபவத்தில் அதிகபட்சம் இரண்டு ஆண்டு அனுபவத்தை மட்டுமே கணக்கில் கொள்ளலாம் என பல்கலைக்கழக பேரவைக் குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக யுஜிசி-யின் தெளிவான விதிமுறையோ அல்லது மாநில அரசின் விதியோ இல்லாததால், பல்கலைக்கழகங்கள் தங்கள் விருப்பத்துக்கு நடைமுறைகளை வகுத்துக் கொள்கின்றன.

ஒரு சில துணைவேந்தர்கள் தங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு, முன் அனுபவத்தில் அதிக ஆண்டுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு பதவி உயர்வு அளிப்பதற்கும் இது வழி வகுக்கிறது; பிடிக்காதவர்களுக்கு பல்கலைக்கழக கட்டமைப்பில் மட்டும் அல்லாமல் கல்லூரி அளவிலும் அதிக ஆண்டுகள் அனுபவம் பெற்றிருந்த போதும் பதவி உயர்வு கிடைக்காது என்கின்றனர் பேராசிரியர்கள்.

இதுகுறித்து கல்வியாளர்கள் கூறியது:

இந்த விவகாரம் தொடர்பாக முறையான யுஜிசி விதிமுறை இல்லாததோடு, தமிழக அரசு அரசாணை எதுவும் வெளியிடாததால்தான், பல்கலைக்கழகங்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப நடைமுறைகளை வகுத்துக் கொள்கின்றன. இதனால் வெளிப்படைத் தன்மை கேள்விக்குறியாகின்றது.

இதனால் ஏற்படும் ஏற்றத்தாழ்வு, பல்கலைக்கழக கட்டமைப்பில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருபவர்களிடையேயும், பதவி உயர்வுக்கு தகுதியுடையவர்களிடையேயும் பணி ஆர்வத்தை குறைக்கிறது. பல்கலைக்கழகத்தின் கல்வித் தரம் குறைவதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம்.

ஒரு சில பல்கலைக்கழகங்கள் இதுபோன்று புதிதாக வந்தவர்களுக்கு முன் அனுபவத்தில் கூடுதல் ஆண்டுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பதவி உயர்வு வழங்க இப்போது முனைப்பு காட்டி வருகின்றன.

எனவே, உதவிப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் நேரடித் தேர்வு, பதவி உயர்வு, முந்தைய பணி அனுபவத்தை கணக்கில் கொள்வது தொடர்பாக அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பொருந்தும் வகையில் பொதுவான விதிமுறைகளை அரசாணையாக தமிழக அரசு விரைவி வெளியிட வேண்டும். அதுவரை பல்கலைக்கழகங்களின் இதுதொடர்பான நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.