வீடு கட்டுமானம் - பராமரிப்புக் கலையை பாமரருக்கும் கற்றுக் கொடுக்கும் புதிய நூல்கள்

வீடு கட்டுமானம் - பராமரிப்புக் கலையை பாமரருக்கும் கற்றுக் கொடுக்கும் புதிய நூல்கள்
Updated on
2 min read

வெறும் இரும்பு, செங்கல், சிமென்ட் கலவையுடன் கான்கிரீட் கூடாக இருக்கும் குடியிருப்புகளை எப்படி இல்லங்களாக மாற்றுவது, அதை எப்படி பராமரிப்பது என்பது உள்ளிட்ட கலைகளை நூல்களாக வடித்து கட்டுமானத்துறையில் உள்ள பொறியாளர்கள் மக்களுக்கு வழங்கியுள்ளனர்.

சென்னை புத்தகக் காட்சியில் பிராம்ப்ட் என்ற புதிய பதிப்பகத்தின் சார்பில் கட்டுமானக் கலை, பராமரிப்பு நுணுக்கங்கள் தொடர்பான நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதுநாள் வரையிலும் வீட்டு பராமரிப்பு குறிப்புகள் என்ற அளவிலேயே இருந்து வந்த இந்த நூல்கள், கட்டுமானம் - பராமரிப்புக் கலை தொடர்பான புதிய துறையாக உருவெடுத்துள்ளது.

சென்னை போன்ற பெருநகரங்களில் வசித்து வரும் மக்களுக்கு குடியிருக்கும் இடம் என்பது அன்றாட வாழ்வின் அதிக நேரத்தையும், ஊதியத்தின் பெரும் பகுதியையும் எடுத்துக் கொள்ளும் விஷயமாகவே இருந்து வருகிறது.

மேலும் சொந்த வீடு என்பது நடுத்தர, ஏழை, எளிய மக்களின் கனவாகவே தொடர்ந்து வருகிறது. ஆனால் குடியிருக்கும் இடத்தை எவ்வாறு வைத்துக் கொண்டால் மகிழ்ச்சியாக, ஆரோக்கியத்துடன் வாழ முடியும் என்பதை இந்த புதிய பதிப்பகத்தின் புதிய நூல்கள் விளக்குகின்றன.

தற்போதைய காலகட்டத்தில் அதிகமானோர் முதலீடு செய்யக் கூடிய, மேலும் வளரும் என்ற எதிர்பார்ப்பு உள்ள துறையாகக் கருதப்படும் ரியல் எஸ்டேட் துறைக்கு ஆரோக்கியமான வழிகளைக் காட்டுவதில் தொடங்குகிறது இந்த பதிப்பகத்தின் நூல். அதைத் தொடர்ந்து வீடு, வீட்டு மனை வாங்குவதற்கு முன்பு என்னென்ன விழிப்புணர்வு நமக்குத் தேவை என்று மற்றொரு நூலும், அது தொடர்பான விவகாரங்கள், பிரச்னைகளை எப்படி சமாளிப்பது, அதற்காக சட்டம் என்ன சொல்லுகிறது என்று மற்றொரு நூலும் நமக்கு வழிகாட்டுகின்றன.

கட்டுமானச் செலவுகளை குறைப்பதற்கான யோசனைகளையும், சந்தையில் என்னென்ன கட்டுமானப் பொருள்கள், உபயோகப் பொருள்கள் குறைந்த விலையில் தரமானதாக கிடைக்கின்றன என்பதையும் தனித்தனி நூல்கள் விரிவாக விளக்குகின்றன. வீடு கட்டி முடித்த பிறகு எந்தெந்த அறைகளுக்கு எந்தெந்த வண்ணத்தில் பெயிண்ட் அடிப்பது, எந்தெந்த பகுதிகளுக்கு எந்தெந்த மாதிரியான பெயிண்டுகளை பூச வேண்டும் என்றும் மற்றொரு நூல் வகுப்பெடுக்கிறது.

குறிப்பாக வீட்டு விலங்குகளை தங்க வைத்திருக்கும் இடம் எப்போதும் ஈரமாக இருக்கும் என்பதால் அந்த இடத்திற்கென தயாரிக்கப்படும் சிறப்பு வகை பெயிண்டுகளை வாங்க வேண்டும், குழந்தைகள் தங்கும் அறைகளில் ஒற்றை அடுக்கு மட்டுமே வண்ணக்கலவை பூசப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட தகவல்கள் அதில் இடம் பெற்றுள்ளன.

அதைத் தொடர்ந்து எழில் கொஞ்சும் வகையில் உள் அலங்காரம் (இன்டீரியர் ஒர்க்ஸ்) செய்வது எப்படி, வீட்டு மின் சாதனங்களை எப்படி பராமரிப்பது, பெரும் பிரச்னையாக உருவாகியுள்ள மின்சார செலவுகளை எப்படி சமாளிப்பது, வீட்டில் இருக்கும் பெண்களே மின் கட்டணத்தை எப்படி எளிய வகையில் கணக்கிடுவது, வீட்டில் உள்ளவர்களுக்கு நோய்களைப் பரப்பும் பூச்சிகளை கட்டுப்படுத்துவது, வீட்டு மரச் சாமான்களை அவற்றிடம் இருந்து பாதுகாப்பது குறித்தும் சம்பந்தப்பட்ட துறைகளின் வல்லுநர்கள் மூலம் எழுதப்பட்ட நூல்கள் விளக்குகின்றன.

அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போருக்கு ஏற்படும் பிரச்னைகள், அவற்றை எந்தெந்த வகையில் தவிர்ப்பது, குடியிருப்போர் நலச் சங்கம் எப்படி அமைப்பது, அதன் பணிகள் என்ன, வீட்டில் தேவைக்கு அதிகமாக உள்ள இடங்கள், மொட்டை மாடிகளில் பயனுள்ள வீட்டுத் தோட்டம் அமைப்பது என்பது உள்ளிட்ட நூல்கள் எளிய தமிழில் அனைவரும் படித்து தெரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளன.

அத்துடன் எழுத்து கூட்டி படிக்கும் நிலையில் உள்ள கொத்தனார்களுக்கான வழிகாட்டி நூல், கம்பி வளைப்போர், கட்டுமானப் பொறியாளர்கள், கட்டுமானத் தொழில் நிறுவனங்களுக்கான கையேடுகள் உள்ளிட்ட சுமார் 40 வகையான நூல்கள் எழுதப்பட்டுள்ளன.

இதுவரையிலும் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்து வந்த கட்டுமானம் அதைச் சார்ந்த நூல்கள் தமிழில் வந்திருப்பது புத்தகக் காட்சியில் வாசகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. மேலும் எழுத்துத் துறையில் புதிய பிரிவாக உருவெடுத்துள்ள கட்டுமானம், வீட்டு பராமரிப்புக் கலை வரும் காலங்களிலும் புதிய பரிணாமத்தைப் பெற்று வளரும் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com