பற்றாக்குறை காலத்திலும் தனியாருக்கு தாரைவார்க்கப்படும் சென்னைக் குடிநீர்

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ள நிலையில், தனியார் மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கு
பற்றாக்குறை காலத்திலும் தனியாருக்கு தாரைவார்க்கப்படும் சென்னைக் குடிநீர்
Updated on
2 min read

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ள நிலையில், தனியார் மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கு அதிக அளவில் குடிநீர் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இதை பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் வழங்கினால் குடிநீர் பற்றாக்குறை ஓரளவு தீர வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

14 சதவீதமாகக் குறைந்த நீர் இருப்பு: சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளின் நீர்மட்டம் தற்போது மொத்த கொள்ளளவில் 14 சதவீதம் மட்டுமே உள்ளது.

இதைத் தவிர வீராணம், சோழவரம் ஏரிகள் முழுவதுமாக வறண்டு விட்டன. மேலும் கடந்த ஏப்ரல் மாதத்தில் நிறுத்தப்பட்ட கிருஷ்ணா நதி நீர், இன்று வரை திறக்கப்படவில்லை. இதன் காரணமாக நாளொன்றுக்கு 83 கோடி லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்த சென்னை நகரில், தற்போது 55 கோடி லிட்டர் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது.

விநியோகம் குறைந்ததால் கடந்த மாதத்தில் இருந்து குடிநீர் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளது. போதிய நீர் அழுத்தம் இல்லாததால், பெரும்பாலான இடங்களில் குழாய் வழி விநியோகம் குறைந்துவிட்டது.  2 அல்லது 3 நாள்களுக்கு ஒரு முறை குறைந்த அழுத்தத்தோடு வருகிறது. எனவே, நகரில் பெரும்பாலானோர் லாரிகளில் விநியோகிக்கப்படும் குடிநீரையே நம்பி உள்ளனர்.

அதிகரிக்கும் தண்ணீர் திருட்டு: குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் குடிநீர் வழங்கும் லாரிகளின் எண்ணிக்கை 308-லிருந்து 391 லாரிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. லாரிகள் வாயிலாக நாளொன்றுக்கு 3,700 நடைகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இதில் 500-க்கும் அதிகமான நடைகள் வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள், தியேட்டர்களுக்கு விநியோகிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. பற்றாக்குறைக் காலங்களில் தனியார் நிறுவனங்களுக்கு குடிநீர் விற்கக்கூடாது என விதிகள் உள்ளதாக சில அதிகாரிகள் தெரிவித்தனர்.

 ஆனால் குடிநீர் வாரியத்துக்கு தெரியாமல், கூடுதல் விலை தரும் தனியார் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளித்து, அதிக அளவில் லாரி குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

 இந்த முறைகேடுகளுக்கு ஒப்பந்த லாரி ஓட்டுநர்கள், உரிமையாளர்கள், பகுதி பொறியாளர்கள் என அனைவரும் உடந்தையாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. நாளொன்றுக்கு சுமார் 50 லட்சம் லிட்டருக்கும் அதிகமாக தனியார் நிறுவனங்களுக்கு முறைகேடாக குடிநீர்  விற்கப்படுவதாகத் தெரிகிறது.

 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுக் கொண்ட தனியார் லாரி குடிநீர், ரூ.3,000-க்கு விற்கப்படுகிறது. இதே கொள்ளளவு கொண்ட சென்னைக் குடிநீர் லாரியின் வணிகப் பயன்பாட்டுக்கான விலை ரூ.1800-க்கும் குறைவு.

 இதனால் பெரும்பாலான நிறுவனங்கள் பகுதி பொறியாளர்கள், லாரி ஓட்டுநர்களுக்கு கமிஷன் கொடுத்து சென்னைக் குடிநீர் லாரிகளில் தண்ணீர் வாங்குவதாக புகார் கூறப்படுகிறது.

நீரேற்று நிலையங்களில் குடிநீர் திருட்டு: குடிநீர் வாரிய நீரேற்று நிலையங்களில் பொது மக்களுக்காக, 1,000 லிட்டர் குடிநீர் ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் எவ்வளவு குடிநீர் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்.

ஆனால், இந்த விலைக்கு குடிநீர் வேண்டுமென்றால் பொது மக்கள், தாங்களே லாரி பிடித்துக் கொண்டு வந்து நீரேற்று நிலையங்களில் குடிநீர் நிரப்பிக் கொள்ள வேண்டும். பொது மக்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்காத இந்த திட்டத்தின் கீழ் பயனடைவது டேங்கர் லாரி வைத்துள்ள தனியார் நிறுவனங்கள்தான்.  குறைந்த விலைக்கு குடிநீரை வாங்கி, வணிகப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

என்னவானது ஜி.பி.எஸ் திட்டம்? குடிநீர் திருட்டைத் தடுக்க, லாரிகள் செல்லும் வழித்தடங்களைக் கண்காணிக்கும் வகையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு  300-க்கும் மேற்பட்ட லாரிகளில் ஜி.பி.எஸ் கருவிகள் பொருத்தப்பட்டன. இதற்காக லட்சக்கணக்கான தொகை செலவிடப்பட்டது. ஆனால் இன்று வரை அந்தத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை.

 இது குறித்து பொதுமக்கள் சிலர் கூறியது:- குடிநீர் லாரிகளின் திருட்டை தடுப்பதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. அதற்கான தொழில்நுட்பமும் மேம்படுத்தவில்லை.  முறைகேடுகளைத் தடுக்காமல், எந்த வகையான போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் குடிநீர் வாரியத்தால் பற்றாக்குறையை சமாளிக்க முடியாது என்கின்றனர் பொதுமக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com