ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

கால தாமதமாகும் அரசின் சேவைகள்: கேரளத்தைப் பின்பற்றுமா தமிழகம்?

பொது மக்களின் அத்தியாவசியத் தேவைகளான ரேஷன் அட்டை, பாஸ்போர்ட் ஆகியன உரிய விசாரணைகளுக்குப் பிறகு கிடைப்பதில் தொடர்ந்து காலதாமதம் நிலவி வருகிறது.

News image
Updated On :11 ஜூலை 2013, 10:52 pm

கே.பாலசுப்பிரமணியன்

பொது மக்களின் அத்தியாவசியத் தேவைகளான ரேஷன் அட்டை, பாஸ்போர்ட் ஆகியன உரிய விசாரணைகளுக்குப் பிறகு கிடைப்பதில் தொடர்ந்து காலதாமதம் நிலவி வருகிறது.

இந்த தாமதத்தைத் தவிர்க்க, கேரள மாநிலத்தில் உள்ளது போன்று, ஒவ்வொரு சேவையை வழங்கவும் குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயித்து அதற்கென தனியாக சேவைகள் சட்டம் என்ற புதிய சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது.

தமிழகத்தில் ரேஷன் அட்டை, பாஸ்போர்ட், வெளிநாடு செல்வதற்கான காவல் துறை சான்றிதழ் போன்ற பல சேவைகளைப் பெறுவதற்கு அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் வீட்டில் நேரில் விசாரணை நடத்துவது வழக்கம். இந்த விசாரணைகள் நடைபெற்று முடிந்து உரிய சேவை விண்ணப்பதாரருக்குக் கிடைப்பதில் தொடர்ந்து காலதாமதம் நிலவி வருகிறது.

குறிப்பாக, ரேஷன் அட்டை விண்ணப்பித்த காலத்தில் இருந்து 60 நாள்களுக்குள் வழங்கப்படும் என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் விண்ணப்பித்தால் பல மாதங்கள் அல்லது சில ஆண்டுகள் வரை ஆகின்றன.

இதே போன்று, பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது காவல் துறையின் விசாரணைக்கே பல நாள்கள் அல்லது மாதங்கள் ஆகின்றன. தமிழகத்தில் ஒவ்வொரு சேவையையும் அளிக்க குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டாலும் அந்த நாள்களுக்குள் சேவைகள் வழங்கப்படுவதில்லை. இதை எதிர்த்து விண்ணப்பதாரர்கள் மேல் முறையீடு செய்யவோ அல்லது கேள்வி கேட்கவோ முடியாத நிலை உள்ளது.

சேவைகளைப் பெறும் உரிமை சட்டம்: அரசின் ஒவ்வொரு சேவையையும் பெறுவதற்கு நாட்டின் குடிமக்கள் அனைவரும் தகுதி பெற்றவர்கள் என்பதன் அடிப்படையில், கேரள மாநிலத்தில் சேவைகளைப் பெறும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தின்படி, அந்த மாநில அரசின் ஒவ்வொரு சேவையையும் பெறுவதற்கு குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்தச் சேவையை வழங்கும் அதிகாரம் படைத்த அதிகாரி யார் என்பது பற்றிய விவரமும் அந்தச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது.

குறிப்பாக, புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தால் அதன்மீது 20 நாள்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும். அப்படி விசாரணை நடத்தப்படாவிட்டால் முதலாவது மேல் முறையீட்டு அதிகாரியை அணுகலாம். அவரால் பிரச்னைத் தீர்க்கப்படா விட்டால் அவருக்கு மேலே அதிகாரம் படைத்த அதிகாரியை அணுகலாம்.

அவ்வாறு அதிகாரம் படைத்த அதிகாரிகள் யார் என்கிற விவரங்களும் சேவைகள் சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

தமிழகத்தில் நிறைவேறுமா? கேரள மாநிலத்தில் உள்ளது போன்று தமிழகத்திலும் அத்தியாவசிய சேவைகளைப் பெறும் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்தச் சட்டம் நிறைவேற்றினால் மக்களின் அத்தியாவசியத் தேவைகள் மற்றும் சேவைகளை எளிதில் பெற முடியும் என்று தமிழக அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்பாக உணவுப் பொருள் வழங்கல், வருவாய்த் துறை போன்ற பிரதான துறைகளின் சேவைகளை எளிதாகப் பெற முடியும் என்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.